உலக தோற்றத்துக்கு காரணமாகவும், பிரளய காலத்தில் அனைத்தும் அழிந்து, ஒடுங்கி, ஏதுமில்லாத காலத்தில் மகாமாயையாக சிவனுடன் ஒன்றினைந்தவளாக காளி விளங்குகிறாள்.
அதை ஜகத்காரணீ ஜனனிகாளி என்கிறது ஆகமம். மகாசக்தியின் ரூபமே காளி என்கிறது தாந்த்ரீக நூல்கள். அந்த காளியை எந்த நேரமும் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர். அவருக்கு காளி வாழ்வது உண்மையே. தட்சிணேஸ்வரத்தில் உள்ள காளி கோயிலின் எதிரே இருந்த ஆலமரத்தடியில் அமர்ந்து தியானம் செய்வார் ராமகிருஷ்ணர்.
காளியின் தரிசனம் வேண்டி தன் தூய பக்தியினால் காளியிடம் வேண்டினார். மன்றாடினார். பலவாறு முயற்சித்தும் காளி தரிசனம் கிடைக்கவில்லையே என மனம் நொந்து அங்கிருந்த கத்தியால் தன்னை மாய்த்துக்கொள்ள முயன்றார்.
அப்போது விக்கிரகத்தில் இருந்து வெளிப்பட்டு தன் சொரூபத்தை காட்டியருளினாள் தேவி. பின் நினைத்தபோது எல்லாம் அவருக்கு காட்சியருளினாள் தாய் காளி. அவரோடு பேசினாள். அவர் தந்த உணவினை உண்டாள்.
பின்னர் ஒரு முறை பரமஹம்சர் இந்நிகழ்வினை பற்றி கூறும்போது பிரபஞ்ச சக்தி தோன்றிய போது வேறு எதுவுமே கண்ணுக்குத் தெரியவில்லை என்று கூறியுள்ளார். இதைபற்றி கேள்விப்பட்ட விவேகானந்தர் சந்தேகம் கொண்டார்.
இன்றிரவு வா என காளி கோயிலுக்கு அழைத்து சென்று அவருக்கும் காளிதேவியின் அருள் காட்சியை காண்பித்தவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்.
தன் தூய பக்தர்களுக்கு எளிதில் மனமிரங்கி அருள் புரியும் அந்த அன்னையை, இந்த நவராத்திரியில் வணங்கி வாழ்வில் அனைத்து வளங்களும் நலங்களும் பெறுவோம்.