அன்றாடம் பத்திரிகைகளைப் புரட்டினால் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியா மீது தாக்குதல் என்ற செய்தி வாடிக்கையாகவே இருந்து வந்தது.
இதற்கு மாறாக 29-09-2016 வியாழக்கிழமை அன்று இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்ரமித்த ஜம்மு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது என்ற செய்தி இந்தியா முழுவதும் ஒரு பரபரப்பை உண்டாக்கியது.
உரீ ராணுவ முகாம்மீது நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் பலியான 20 ராணுவ வீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அவர் அறிவித்தபடியே பாகிஸ்தானுக்கு வட்டியும், முதலுமாக பதிலடி கொடுக்கப்பட்டது. 4 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 56 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு இந்தியா பாடம் புகட்டியது. அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அரசுக்கு முழு ஆதரவு என்று உறுதி அளித்தனர். ராகுல் மட்டும் பிரதமர் மோடி இரண்டு ஆண்டுகளில் செய்த ஒரே சாதனை” என்று சொல்லியிருப்பதில் அவருடைய ஆதங்கம் புரிகிறது.
இது பற்றி நடந்த தொலைக்காட்சி விவாதங்களில் பங்குகொண்ட கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு முழுமையாக மோடியை பாராட்ட மனமில்லை. பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருக்கிறது, அதனால் நாம் கவனமாக செயல்பட வேண்டும் என்று புலம்பித் தீர்த்தார்கள்.
இப்போதும் கூட இந்தியா பாகிஸ்தான் மீது போர் தொடுக்கவில்லை. உரீ சம்பவத்திற்கு பதிலடிதான் கொடுத்துள்ளது. போர் என்பது கடைசி நடவடிக்கையாகத்தான் அமையும். அதற்கு முன்பாக பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த ‘சார்க்’ மாநாட்டை நிறுத்தியது போன்ற ராஜதந்திர நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் பாகிஸ்தானை உலக நாடுகளிலிருந்து தொடர்ந்து தனிமைப்படுத்த வேண்டும். பிரதமர் மோடி அதைச் சிறப்பாகவே செய்து வருகிறார்.
இனி கவலைப்பட வேண்டியது இந்தியா இல்லை. போர் என்று வருமானால் உலக வரைப்படத்தில் பாகிஸ்தான் இல்லாது போய் விடும் என்பதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும்.