மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் கல்வி அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், திறன் மேம்பாடு மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் ‘பழங்குடியினர் கௌரவ தின’ ( ஜன்ஜாதிய கவுரவ் திவஸ்) விழாவை சிறப்பாகக் கொண்டாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் மத்திய கல்வி அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு (ஏ.ஐ.சி.டி.இ) பல்கலைக் கழக மானியக் குழு (யு.ஜி.சி), மத்திய பல்கலைக் கழகங்கள், தனியார் பல்கலைக் கழகங்கள், பிற உயர்கல்வி மற்றும் திறன் நிறுவனங்களுடன் இணைந்து ‘ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ்’ கொண்டாடுகிறது. மேலும், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் ‘சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியின மாவீரர்களின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் விவாதப் போட்டி, சமூக செயல்பாடுகள் போன்ற ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த கொண்டாட்டங்களின் போது பகவான் பிர்சா முண்டா மற்றும் இதர பழங்குடியினத் தலைவர்கள் சிறப்பிக்கப்படுவார்கள். மேலும் சிறப்பாக செயல்பட்டதற்காக மாணவர்களும் பாராட்டப்படுவார்கள். இந்த கொண்டாட்டங்கள் வருங்கால சந்ததியினர் நாட்டிற்காக பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை அங்கீகரிக்கவும், அவர்களின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லவும், பழங்குடியினரின் கலாச்சாரம், கலை மற்றும் பழங்குடி பாரம்பரியத்தை பாதுகாக்கவும் ஊக்குவிக்கும். பழங்குடி சமூகத்தினரால் பகவான் என்று போற்றப்படும் பிர்சா முண்டாவின் பிறந்தநாள் நவம்பர் 15. இதனை முன்னிட்டு கடந்த ஆண்டு, மத்திய அரசு நவம்பர் 15ம் தேதியை ‘பழங்குடியினர் கௌரவ தினம்’ (ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ்) என்று அறிவித்தது நினைவு கூரத்தக்கது.