வட கிழக்கு மாநிலங்களில் மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தோம் என்றால், மிசோரமும், சிக்கிமும் சின்னஞ்சிறியவை. மிசோரம் சட்டசபைக்கு 40 எம்.எல்.ஏக்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சிக்கிம் சட்டசபைக்கு 32 எம்.எல்.ஏக்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சிக்கிம் பாரதத்துடன் இணைந்த பொன் விழா அண்மையில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மிசோரமில் போக்குவரத்து வசதி மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்வண்டி சேவைக்கு முக்கியத்துவம் அளிக்க முனைப்பு காட்டப்பட்டு வருகிறது.
கல்வி அறிவில் மிசோரம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சில படிநிலைகள் உயர்ந்தே இருந்து வந்துள்ளது. இப்போது அதிகாரப்பூர்வமாக முழு கல்வி அறிவு பெற்ற முதல் மாநிலம் என மிசோரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மிசோரம் பல்கலைக்கழக அரங்கில் மத்திய கல்வி, திறன்மேம்பாடு, தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் ஜெயந்த் செளத்ரி, மிசோரம் கல்வி அமைச்சர் டாக்டர் வன்லால்த்லானா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் மிசோரம் முதலமைச்சர் லால்துஹோமா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அவர் தனது உரையில், ‘நமது மாநிலத்தின் நீண்ட நெடிய பயணத்தில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணத்தில் நாம் அடியெடுத்து வைத்துள்ளோம். நமது மக்களின் ஒருங்கிணைந்த விருப்பம், ஒழுக்கம், தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கும் விரும்பத்தக்க மாற்றத்திற்கான மைல்கல்லாக இத்தருணம் திகழ்கிறது.
வாழ்க்கை முழுவதுமான கல்வி சார்ந்த புரிதல் என்ற அமைப்பு மேற்கொண்ட முயற்சியின் அடிப்படையில் முழு கல்வி அறிவு பெற்ற மாநிலமாக மிசோரம் மாறியுள்ளது. இதை எட்டுவதற்காக தொடர்ந்து தொய்வின்றி முயற்சி மேற்கொண்டு வந்தோம். மிசோரம் மக்கள் டிஜிட்டல் கல்வியறிவு, நிதி கல்வியறிவு, தொழில்முனைவோர் திறன்மேம்பாடு உள்ளிட்டவற்றில் தொடர்ந்து புதிய இலக்குகளை நோக்கி பயணித்துக் கொண்டே இருப்பார்கள். அதற்கான வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளோம்’ என்று பூரிப்புடன் குறிப்பிட்டார்.
இந்த இலக்கை அடைந்தது எப்படி? என்பதை கவனிக்க வேண்டியது அவசியம். அனைவருக்கும் கல்வி அளிக்கும் முன்னெடுப்பின் கீழ் மிசோரமின் மாநில எழுத்தறிவு மையம் தொடங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தன்னார்வ ஆசிரியர் களுக்கான மார்கதர்ஷிகா போன்ற கூடுதல் வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டன. புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்திற்கான சர்வேயர்களாக கிளஸ்டர் வள மைய ஒருங்கிணைப்பாளர்கள் பணியாற்றினார்கள்.
இந்த ஆய்வின் அடிப்படையில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 3,026 பேர் படிப்பறிவில்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்டது. இவர்களில் 1,692 பேர் கல்வி கற்க விருப்பம் தெரிவித்தனர். அவர்களுக்கு கல்வி கற்பிக்க 292 தன்னார்வ ஆசிரியர்கள் பணியமர்த்தப் பட்டனர். இத்தகைய முன்னெடுப்பின் வாயிலாக, பாரதத்திலேயே கல்வி அறிவில் முழுமை பெற்ற முதல் மாநிலமாக மிசோரம் உயர்ந்தோங்கி உள்ளது.