கல்லிடைகுறிச்சி கோயிலுக்கு வந்தது ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட சிலை

திருநெல்வேலி, ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை நேற்று கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோயில் சன்னதியில் வைக்கப்பட்டது.திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அறம்வளர்த்த நாயகி சமேத குலசேகரமுடையார் கோயில் உள்ளது. பழமையான இந்த கோயிலில் நடராஜர் சன்னதியில் இருந்த இரண்டரை அடி உயரமுள்ள நடராஜர் சிலை, சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர், ஸ்ரீபலிநாதர்ஆகிய ஐம்பொன் சிலைகள் 1982ல் கொள்ளை போயின.

இந்த சிலைகள் ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்தது.சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படையினர் முயற்சியில் சிலை மீட்கப்பட்டு தமிழகம் கொண்டுவரப்பட்டது. கும்பகோணம் நீதிமன்ற உத்தரவையடுத்து நேற்று காலை கல்லிடைக்குறிச்சி கொண்டுவரப்பட்டது. போலீஸ் வாகனத்தில் வந்த சிலைக்கு கல்லிடைக்குறிச்சியில் பொதுமக்கள் பஞ்சவாத்தியம் முழங்க வரவேற்பளித்தனர்.பின்னர் சிலை குலசேகரமுடையார் கோயில் சன்னதியில் வைக்கப்பட்டது.

சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் கூறியது: இதனுடன் திருடப்பட்ட சிவகாமி அம்பாள் உள்ளிட்ட மற்ற மூன்று சிலைகளை விரைவில் கண்டுபிடிப்போம். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர், என்றார்.