நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதல் காங்கிரசும் மற்ற எதிர்க் கட்சிகளும் தினசரி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த அரசின் முடிவை எதிர்த்துத் தான் சபையை முடக்கி வருகின்றனர்.
விவாதத்திற்கு மத்திய அரசு தயாராக இருந்தபோதும், ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் தேவையென்ற காரணம் சொல்லி சபையில் கூச்சலும், குழப்பமும் ஏற்படுத்தி வருகின்றனர். பிரதமர் அவையில் இருந்து விவாதத்திற்கு பதில் சொல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பிரதமரும் விவாதத்தில் பங்குகொண்டு பதில் அளிப்பதற்குத் தயாராக மாநிலங்களவைக்கு வந்தார்.
அவர் வந்த பிறகும் கூட விவாதத்தில் பங்கேற்காமல் அவரை வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்தனர். அவர் கொஞ்ச நேரம் இருந்து இந்த கூத்துகளை எல்லாம் பார்த்துவிட்டு அமைதியாக எழுந்து வெளியே சென்றுவிட்டார். இதிலிருந்து எதிர்க்கட்சிகளின் எண்ணம் அவை நடக்க வேண்டும், விவாதம் நடக்க வேண்டும் என்பதல்ல என்று தெரிகிறது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நாடாளுமன்றம் ஒன்றும் தர்ணா நடத்துவதற்கான இடமில்லை என்று கூறி கடவுள் சாட்சியாக சபையில் கடமையைச் செய்யுங்கள் என்று கூறினார்.
ராகுல் காந்திக்கு நாடாளுமன்ற அனுபவம் போதாது. அவர் வெறும் கத்துக்குட்டி என்பது கூட புரியாமல் கம்யூனிஸ்டு உள்பட மற்றைய கட்சித் தலைவர்களும் அவருக்கு வக்காலத்து வாங்குவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
பணமாற்ற அறிவிப்பால் பாதிக்கப்படுவது யார்? பெரிய பெரிய மருத்துவமனைகளையும் கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிற ஊழல் பெருச்சாளிகள்தான். அவர்களுக்கு இது சவுக்கடி.
சோனியா தலைமையிலான காங்கிரஸ், தேசத்தின் காலை வாரும் பாரம்பரியமுள்ள கம்யூனிஸ்டுகள், ராணுவத்தையே அரசியலாக்கிவிடப் பார்க்கும் மமதா… இந்த தீய கூட்டணிக்கு ஆரோக்கியமான விவாதத்தில் நம்பிக்கை கிடையாது என்பது வெட்டவெளிச்சமாகி விட்டது. இதை மக்கள் மறந்துவிடாமல் பார்த்துக்கொண்டால் போதும்.