உத்தரகண்டில் உள்ள ஹரித்துவாரில் கங்கை கரை ஓரம் கவிப்பேராசான் திருவள்ளுவரின் திருவுருவச் சிலையை நிறுவ நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் தருண்விஜய் பெரு முயற்சி மேற்கொண்டார். முதலில் ஹர்கி பவுரி என்ற இடத்தில் திருவள்ளுவரின் சிலையை நிறுவ உத்தேசிக்கப்பட்டிருந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக இதற்கு எதிர்ப்பு எழுந்தது. சங்கராச்சாரியார் சதுக்கத்தில் திருவள்ளுவர் சிலையை நிறுவ முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கும் எதிர்ப்பு தாம்கோதி விருந்தினர் மாளிகைக்கு திருவள்ளுவர் சிலை கொண்டு செல்லப்பட்டது. இங்கு திருவள்ளுவர் சிலை திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உத்திரபிரதேச கவர்னர் ராம் நாயக், மேகாலயா கவர்னர் சண்முகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விருந்தினர் மாளிகையில் திருவள்ளுவர் சிலை திறந்துவைக்கப்பட்டது குறுகிய கால ஏற்பாடுதான். வெகுவிரைவில் கங்கைக்கரையில் கம்பீரமான முறையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்பது திண்ணம்.
ஜாதி, மத, மொழி, பிராந்திய எல்லைகள் எல்லாவற்றையும் கடந்தவர் திருவள்ளுவர். திருக்குறள் தமிழில்தான் எழுதப்பட்டுள்ளது என்ற போதிலும் திருக்குறளில் ஓரிடத்தில் கூட தமிழ் என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. உலகப் பொதுமறை என்று கருதத்தக்க அளவுக்கு சிறப்புடைய நூல் திருக்குறள். இதில் கூறப்பட்டுள்ள கருத்துகள் அறத்துக்கும் பொருளுக்கும் இன்பத்துக்கும் பொருத்தமானவை.
சர்வதேச அளவில் சில கோட்பாடுகள் இப்போதுதான் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளன. ஆனால் பன்னெடுங்காலத்துக்கு முன்பே இவற்றை சுருக்கமாகவும் தெளிவாகவும் ஆழமாகவும் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளதை நோக்கும்போது சொல்லொணா வியப்பு ஏற்படுகிறது.
திருவள்ளுவர் ஒரு தலித். அவரது சிலையை கங்கைக்கரையோரம் நிறுவினால் அது தீட்டு என்ற விஷமத்தனமான பொய் சமூக விரோத சக்திகளால் பரப்பப்பட்டுள்ளது. ஆலயங்களுக்குள் தலித் மக்கள் சென்று வழிபடுவதற்காக தொடர்ந்து தருண்விஜய் போராட்டம் நடத்திவருகிறார். இப்பின்னணியில்தான் திருவள்ளுவரும் தலித் என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளது.
சமூக ரீதியான எந்த வகைப்பாட்டுக்குள்ளும் திருவள்ளுவரை அடக்கிவிட முடியாது. இவ்வாறு அடக்க முற்படுவது குங்குமச் சிமிழுக்குள் குதிரையை திணிப்பதற்கு ஒப்பானது.
கங்கைக்கரையில் பல சமூக சீர்திருத்தவாதிகள், கவிஞர்கள், ஞானிகள், தலைவர்கள் உள்ளிட்டோரின் சிலைகள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன. திருவள்ளுவரின் சிலையை கங்கைக்கரையோரம் நிறுவினால் அது கங்கைக்கரையின் கம்பீரத்தை மேலும் செழுமைப்படுத்தும்.
திருவள்ளுவர் சிலை விவகாரத்தில் எழுந்துள்ள தேவையற்ற சர்ச்சையை எவ்வளவு விரைவில் முடிவுக்கு கொண்டுவருவது சாத்தியமோ அவ்வளவு துரிதமாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும். யாரும் இப்பொறுப்பை தட்டிக்கழிக்கக் கூடாது. ஏனெனில், இதை நிறைவேற்றுவதில் அனைத்து தரப்பினருக்கும் பொறுப்புண்டு.