ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளி செல்லும் 4 வீரர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். விமானப்படையைச் சேர்ந்த குரூப் கேப்டன் பிரசாந்த் நாயர், பிரதாப், கிருஷ்ணன், சுபன்சூ சுக்லா ஆகியோர் விண்வெளிக்கு செல்ல உள்ளனர்.
நிலவை ஆய்வு செய்ய சந்திரயான் -3, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 திட்டங்களை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ, தற்போது மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் ரஷ்யாவில் பயிற்சி பெற்றனர். இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு ககன்யான் திட்டப்பணிகள் குறித்த பணிகளை நேரில் ஆய்வு செய்தார். இஸ்ரோ தலைவர் சோம்நாத், பணிகள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, கவர்னர் முகமது ஆரிப் கான், முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் முரளீதரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, விண்வெளிக்கு செல்லும் வீரர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்து கவுரவித்தார். இதன்படி விமானப்படை குரூப் கேப்டன் பிரசாந்த் நாயர், பிரசாத், கிருஷ்ணன், சுபன்சூ சுக்லா ஆகியோரை நேரில் அறிமுகம் செய்து பிரதமர் கவுரவித்தார். அவர்களுக்கு அடையாள பட்டையையும் வழங்கினார்.