“ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு” திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்படும் சிறு, குறு தொழில்முனைவோரை, ரயில் நிலையங்களில் 60 நாட்கள் வரை அரங்குகள் அமைத்து, விற்பனை செய்ய அனுமதிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
உள்ளூர் வணிகத்தை ஊக்கப்படுத்தவும், கைவினைஞர்கள் தயாரித்த பொருட்களை பிரபலப்படுத்தும் வகையில்,”ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்டம்” என்பதை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காஞ்சிபுரம் சில்க் புடவைகளின் அரங்குகடந்த ஆண்டு மார்ச் 25-ம் தேதிஅமைக்கப்பட்டது. இதன்பிறகு, பல்வேறு ரயில் நிலையங்களில் படிப்படியாக அரங்குகள் விரிவுபடுத்தப்பட்டன. தெற்கு ரயில்வேயில் தற்போது 180 நிலையங்களில் அரங்குகள் அமைத்து பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
சென்னை கடற்கரையில் ஆரணி பட்டுசேலை, பல்லாவரத்தில் சணல் தயாரிப்புகள், வாணியம்பாடியில் ஆம்பூர் தோல் தயாரிப்புகள், ஸ்ரீவில்லிபுத்துாரில் பால்கோவா, மணப்பாறையில் முறுக்கு,திருநெல்வேலியில் பனை பொருட்கள், தஞ்சாவூரில் பொம்மைகள் உள்ளிட்ட பல நுாற்றுக்கணக்கான ரயில் நிலையங்களில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டு, இந்த அரங்குகள் ஒதுக்கப்படுகின்றன. இந்த திட்டத்துக்கு உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும்சிறு, குறு தொழில் முனைவோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ், ரயில் நிலையங்களில் 60 நாட்கள் வரை அரங்குகள் அமைக்க சிறு, குறு தொழில்முனைவோரை அனுமதிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தெற்குரயில்வேயில் உள்ள ரயில் நிலையங்களில் பட்டுப் புடவை, கைத்தறி துணிகள், தோல் பொருட்கள் உட்பட 1,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. உள்ளூர் தயாரிப்பாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், ஒரு முறைதேர்வு செய்யப்படுவோர் 60 நாட்கள் வரை விற்பனை செய்ய அனுமதியளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ரயில் கோட்டத்தில்மேலும், 62 ரயில் நிலையங்களில், விற்பனையாளர்களை தேர்வுசெய்யும் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளன. அடுத்தகட்டமாக, மேலும் 100 ரயில் நிலையங்களில் அரங்குகள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.