நமது நாட்டை மதிப்பது என்பது ஒவ்வொரு குடிமகனும் நாள்தோறும் தன் செயல்களில் காட்ட வேண்டிய பண்பாடு. கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், கோரிக்கைகள் இருக்கலாம், அரசாங்கத்தின் செயல்பாடுகளை விமர்சிக்கவும் உரிமை உண்டு. ஆனால் அந்த உரிமைக்கு ஓர் எல்லை உண்டு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நமது குரல் மற்றவரின் அமைதியைக் குலைக்காமல், மற்றவரின் உரிமையைப் பாதிக்காமல் எழ வேண்டும். அதுவே நாகரிக சமூகத்தின் அடையாளம்.
நமக்குக் கருத்து சொல்ல அரங்கம் உண்டு, ஊடகம் உண்டு, நீதிமன்றம் உண்டு, தேர்தல் உண்டு. இத்தனை வழிகள் திறந்திருக்கும்போது, வன்முறையையோ, அவதூறையோ கையிலெடுக்க வேண்டிய அவசியமில்லை. சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பதே, நமது நாட்டிற்குப் பெருமை சேர்க்கும். ஒரு குடிமகன் காட்டும் பொறுப்புணர்வுதான், அந்த நாட்டின் முதிர்ச்சியை உலகிற்குக் காட்டுகிறது.
உலகில் பல நாடுகள் இன்றும் ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றன. அப்படியிருக்க, முழுமையான ஜனநாயகத்தையும், பேச்சு சுதந்திரத்தையும், வாக்களிக்கும் உரிமையையும் நாம் அனுபவிப்பது சாதாரண விஷயமல்ல — அது ஒரு பேரருள். இதை நாம் மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும், பாதுகாக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
ஜனநாயகத்தில் அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்பதும், அதன் செயல்பாடுகளை விமர்சிப்பதும் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. ஆனால் அந்த உரிமை வன்முறையாகவும், பொதுச்சொத்துக்கு சேதமாகவும், காவல்துறையினர் மீதான தாக்குதலாகவும் மாறும்போது, போராட்டத்தின் உண்மையான நோக்கமே மறைந்துவிடுகிறது.
டெல்லி போராட்டத்தில் காயமடைந்த காவலர்களின் குடும்பத்தினர், தங்கள் வேதனையை ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளனர். “வேலைக்குச் சென்ற கணவர் பாதுகாப்பாகத் திரும்புவாரா? என்ற அச்சத்தில் மணிக்கணக்கில் தவித்தோம்” என்கிறார் ஒரு காவலரின் மனைவி. காயங்களுடன் இரவில் தந்தை வீடு திரும்பியதைக் கண்ட சிறு குழந்தைகள் கூட பயமும், மன அழுத்தமும் அடைந்ததாக குடும்பங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு காவலரின் மகள், “என் தந்தை கூட்டத்தினரால் சூழப்பட்டுத் தாக்கப்பட்டார்” என்று கண்ணீருடன் தெரிவித்தார். உடல் காயங்களைவிட, சமூக ஊடகங்களில் காவலர்கள் குற்றவாளிகளாகச் சித்தரிக்கப்படுவதே, குடும்பங்களை மேலும் புண்படுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர்.
காவல்துறையினரும் நம்மைப் போன்ற மனிதர்களே; அவர்களுக்கும் பெற்றோர், துணைவர், பிள்ளைகள் உள்ளனர். தவறு நடந்திருந்தால், சட்டப்படி விசாரணை நடத்தி பொறுப்பை நிர்ணயிக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த காவல்துறையை அவமதிப்பதும், தாக்குதலை நியாயப்படுத்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
மனித நாகரிகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைத்து நின்றது, இன்றும் நிலைத்து நிற்கிறது, இனி வரும் தலைமுறைகளுக்கும் நிலைத்து நிற்க வேண்டும். நாம் அதை எப்படிப் பெற்றோமோ, அதே பாதுகாப்புடன், அதே கண்ணியத்துடன் அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்பதே நமது கடமை. அதை ஒற்றுமையின் பாதையில் வளர்த்தெடுப்போம். எல்லை மீறாத குரலும், எல்லையற்ற பொறுப்புணர்வும் இணையும்போதே, நமது நாடு என்றென்றும் பாதுகாப்பாகவும், பெருமையுடனும் நிலைத்து நிற்கும்.
கட்டுரையாளர்: மருத்துவர் சுபா