எல்லையில் சீனப் படைகள் முழுமையாக வாபஸ்: இந்திய ராணுவம் தகவல்

இந்தியா-சீனா இடையேயான நல்லுறவிலும் விரிசல் தோன்றும் நிலை ஏற்பட்டுள்ளது. எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காணும் நோக்கில் இரு நாடுகளிடையே ராணுவ ரீதியாகவும் அதிகாரிகள் இடையேயும் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

அவற்றில் சுமுகத் தீா்வு எட்டப்பட்டதையடுத்து, ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வெளியேற சீன ராணுவத்தினா் ஒப்புக்கொண்டனா். எல்லைப் பகுதிகளில் படைகளைக் குறைக்கவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

இது தொடா்பாக ராணுவ அதிகாரிகள் வியாழக்கிழமை கூறுகையில், “கோக்ரா, ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் இருந்து சீனப் படைகள் முழுமையாக வெளியேறிவிட்டன. அப்பகுதிகளிலும் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியிலும் 3 கி.மீ. தூரத்துக்கு இரு நாடுகளும் படைகளைக் குவிக்கக் கூடாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக எல்லைப் பகுதிகளில் முதல் கட்ட படைகள் குறைப்பு வெற்றிகரமாக நிகழ்ந்தேறியுள்ளது.

தற்போது பாங்காங் ஏரிப் பகுதியில் படைகளைக் குறைக்கும் நடவடிக்கைகள் குறித்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் ஆலோசித்து வருகின்றனா்.