நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலான பல்வேறு அமைப்புகளை தொடங்கி, மக்கள் பயன்பெறும் வகையில் பணி செய்து வருகின்றனர். இந்த வாரம் உலகின் மிகப்பெரிய மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) பற்றி அறிவோம்…
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் நூற்றாண்டு கால பயணத்தில், அதன் சிந்தனைப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு, பாரதத்தில் அரசியல், கல்வி, சேவை உள்ளிட்ட பல துறைகளில் பல அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இன்றைய பாரதத்தில், சங்கத்தின் இருப்பு இல்லாத இடத்தை காண்பது அரிது. அத்தகைய ஒரு தேசிய உணர்வுடனான மாணவர் இயக்கமாக அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) விளங்குகிறது. 2025 டிசம்பர் நிலவரப்படி 76,98,448 உறுப்பினர்களுடன், உலகின் மிகப்பெரிய மாணவர் அமைப்பாகத் திகழ்கிறது.
ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பாக மட்டுமல்லாமல், மாணவர்களையும், ஆசிரியர்களையும் ஒருங்கிணைக்கும் முழுமையான அமைப்பாக செயலாற்றுகிறது. பாரதத்தில் உள்ள பிற மாணவர் அமைப்புகள் பெரும்பாலும் அரசியல் கட்சிகளின் கிளைகளாகவும், அரசியல்வாதிகளின் நேரடி தாக்கத்திலும் செயல்படுகின்றன. ஆனால் ஏ.பி.வி.பி முழுமையாக சுயாதீன அமைப்பு வடிவமைப்புடன் தனித்துவமாக விளங்குகிறது. 1860 ஆம் ஆண்டின் Societies Registration Act சட்டத்தின் கீழ், 1949ல், ஏபிவிபி அரசு சாரா அமைப்பாக (NGO) பதிவு செய்யப்பட்டது. பேராசிரியர் ஓம் பிரகாஷ் பாஹல் முதல் தேசியத் தலைவராகவும், ஸ்ரீ கேசவ்தேவ் வர்மா முதல் தேசிய பொதுச் செயலாளராகவும் பணியாற்றினர்.

கல்வித் துறையில் மட்டுமல்லாது, மாணவர்கள், ஆசிரியர்கள், சமூகத்தினர் ஆகிய கல்விசார் வட்டாரத்தின் சிந்தனை மற்றும் மனநிலைகளில் நல்ல, அர்த்தமுள்ள மாற்றங்களை ஏற்படுத்துவதையே ஏ.பி.வி.பி தனது இலக்காகக் கொண்டுள்ளது. அடிப்படைச் செயல்பாடுகள் கல்லூரிகளை மையமாகக் கொண்டது. ஆண்டுதோறும் நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை மூலம் மாணவர்கள் ஏ.பி.வி.பி.யில் அறிமுகமாகி இணைகின்றனர். ஸ்வாமி விவேகானந்தர் கற்பித்த மனிதர் உருவாக்கம் (Man-Making) என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட இயல்பான செயல்பாட்டு அமைப்புகளின் வழியாக மெதுவாக வளர்க்கப்படுகிறார்.
ஏ.பி.வி.பி.யின் முன்னாள் தேசியத் தலைவர் பேராசிரியர் யஷ்வந்திராவ் கேல்கர், அமைப்பின் சிந்தனை, பண்பாடு, தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றை வடிவமைத்த முக்கிய சிற்பியாகக் கருதப்படுகிறார். மாணவர்களை எதிர்காலத் தலைவர்களாக ஒழுக்கம், சேவை, பண்பு மூலம் பயிற்றுவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த சிந்தனைத் தெளிவே அரசியல் மாற்றங்களையும், வளாகச் சுழற்சிகளையும் கடந்து ஏ.பி.வி.பி தன்னை நிலைநிறுத்திக் கொள்ள உதவியது.
“சலோ ஸ்ரீநகர்” முதல் “சலோ கேரளா” வரை, ஏ.பி.வி.பி.யின் போராட்டங்கள், தேசிய ஒருமை, கல்வி மற்றும் பாரதத்தின் நாகரிகப் பயணத்தில், மாணவர்களின் பங்கேற்பு என்பதை தம் ஒரே சிந்தனையாகக் கொண்டு செயல்படுகின்றது. அதிகார அரசியலில் ஈடுபடாது; கோடிக்கணக்கான பாரதப் பிரதிநிதிகளின் கனவுகளை பிரதிபலிக்கும்.
தமிழ்நாட்டில் ஏ.பி.வி.பி.யின் செயல்பாடுகள், 1969ல் தொடங்கப்பட்டன. ஆரம்பத்தில் இது ‘தேசிய மாணவர் இயக்கம்’ என்ற பெயரில் இயங்கியது. ஒரே சிந்தனைப் பின்னணியுடன், “அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்” என்ற பெயர், தமிழ்நாட்டிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் பெண் சிசுக் கொலை உச்சத்தில் இருந்த காலத்தில், ஏ.பி.வி.பி அதை கடுமையாகக் கண்டித்து, அந்த பிரச்சினையை சமூகத்தின் மையத்துக்கு கொண்டு வந்தது. தமிழ்நாட்டில் ஏ.பி.வி.பி.யில் பணியாற்றியதற்காக பேராசிரியர் கே.ஆர். பரமசிவம் ஜி, இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
2022ல் தஞ்சாவூரில், கட்டாய மதமாற்றம் காரணமாக லாவண்யா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரத்தில் ஏ.பி.வி.பி.யின் தலையீடு உள்ளூர் அளவிலேயே நின்றுவிடாமல், தேசமெங்கும் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தது. தமிழ்நாட்டில் முதல்வரின் இல்லம் வரை போராட்டம் நடத்தப்பட்டது, கார்யகர்த்தர்கள் சிறையில் இருந்துகொண்டே ஒரு பெண் குழந்தைக்கான நீதிப்போராட்டத்தை வழிநடத்தினர்.
ஒரு வருடத்திற்கு முன்பு, அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு பெண் மாணவி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். ஏ.பி.வி.பி.யின் தலையீட்டினால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைத்தது. இதற்காக ஏ.பி.வி.பி கார்யகர்த்தர்கள், காவல்துறையால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இன்றைய விவாதம், ஜென் இசட் தலைமுறையை மையமாகக் கொண்டது. அவர்கள் ஏ.பி.வி.பி.யுடன் எவ்வளவு தொடர்பில் உள்ளனர் என்பதை நாம் பார்க்க வேண்டும். அண்டை நாடுகளில் சமூக, அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டபோது, அதே நிலை பாரதத்திலும் ஏற்படும் என சிலர் எதிர்பார்த்தனர். ஆனால், நமது இளைஞர்கள் எந்த தேச விரோத சக்திகளுக்கும் இடம் கொடுக்காமல், தேச நலனுக்காக ஒன்றிணைந்து நிற்பதை நிரூபித்துள்ளனர்.

2025 மார்ச் 29 அன்று நடைபெற்ற பாட்னா பல்கலைக்கழக மாணவர் சங்க (PUSU) தேர்தலில் ஏ.பி.வி.பி தலைவர் பதவியை கைப்பற்றியது. மைதிலி மிரினாலினி, ஏ.பி.வி.பி வேட்பாளர், அந்தப் பல்கலைக்கழக வரலாற்றில் முதல் பெண் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, பஞ்சாப் பல்கலைக்கழக வளாக மாணவர் கவுன்சில் (PUCSC) தேர்தலில், ஐந்து தசாப்தங்களுக்குப் பிறகு முதல் முறையாக ஏ.பி.வி.பி தலைவர் பதவியை வென்றது. ஆய்வாளர் கௌரவ் வீர் சோஹல் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2025 செப்டம்பர் 18 அன்று நடைபெற்ற டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில், ஏ.பி.வி.பி.யின் ஆரியன் மான், NSUI வேட்பாளர் ஜாஸ்லின் நந்திதா சௌதரியை 16,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். குணால் சௌத்ரி செயலாளராகவும், தீபிகா ஜா இணைச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
செப்டம்பர் 19 அன்று நடைபெற்ற ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் (HCU) மாணவர் சங்க தேர்தலில், ஆறு முக்கிய பதவிகளையும் ஏ.பி.வி.பி கைப்பற்றி, மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, இடதுசாரி ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஏ.பி.வி.பி முதன்முறையாக மாணவர் அமைப்பை முழுமையாகக் கட்டுப்பாட்டில் எடுத்தது.
வளாக வன்முறைத் தடுப்பு, 2,300 ஏக்கர் நிலம் தொடர்பான பிரச்சினைகள், விடுதிகள், கட்டணங்கள் உள்ளிட்ட மாணவர் நலச் சிக்கல்களை மையமாகக் கொண்டு பிரச்சாரம் செய்தது. சிவா பலேபு, தேவேந்திரா, ஸ்ருதி பிரியா, சௌரப் சுக்லா, வீனஸ், ஜ்வாலா ஆகியோர் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
இதில் குறிப்பிடத்தக்கது, மணிப்பூரைச் சேர்ந்த வீனஸ், ஏ.பி.வி.பி சார்பில் கலாச்சாரச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மணிப்பூர் மக்களைப் பற்றி பொய்யான கதைகளை சில எதிர்க்கட்சித் தலைவர்கள் பரப்பிய வேளையில், வீனஸ் அளித்த சாட்சியம், அந்த மாநிலங்களின் சகோதர, சகோதரிகள் தாங்கி நிற்கும் தேசிய உணர்வே, இடதுசாரி தீவிரவாதத்தை எதிர்க்கும் வலிமையான ஆயுதம் என்பதை வெளிப்படுத்தியது.
இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் ஜென் இசட்க்கு அரசியல் செய்திகளின் முதன்மை ஆதாரமாக மாறியுள்ளன. இதனால் அவர்கள் அரசியல்வாதிகளைப் பற்றிய நேரடியான கருத்துகளைப் பெறவும், தங்களுக்கு முக்கியமான விஷயங்களில் ஒன்றிணையவும் முடிகிறது. ஆனால் சமீபத்திய சூழ்நிலைகளும், பாரதத்தின் மத்திய பல்கலைக்கழகத் தேர்தல் முடிவுகளும் காட்டுவது என்னவெனில், ஜென் இசட்க்கு பாரதத்தின் பண்பாடு மற்றும் பாரம்பரிய மதிப்புகளைப் பேணிக்காக்க, யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நன்கு புரிந்து வைத்துள்ளனர்.
யஸ்வந்த் ராவ் கேல்கர், முன்கூட்டியே விரிவாகத் திட்டமிடுவதின் அவசியத்தை வலியுறுத்தினார். “பரிசர் சலோ அபியான்”, “பரிஷத் கி பாத்ஷாலா”, “மிஷன் சஹாசி”, “ரிதுமதி அபியான்” போன்ற முன்னெடுப்புகளும், “ஸ்டூடண்டஸ் ஃபார் சேவா”, “ஸ்டூடண்ட்ஸ் ஃபார் டெவலப்மென்ட்”, “ராஷ்ட்ரீய கலா மஞ்ச்”, “கேலோ பாரத்” போன்ற முன்னெடுப்புகளின் வழியாக மேற்கொள்ளப்படும் பல்துறைச் செயல்பாடுகளும் உயிரோட்டமிக்க மாணவர் சமூகத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன.
மற்றொரு பக்கம், பாரதம் முழுவதும் ஏ.பி.வி.பி எவ்வாறு இந்தத் தேர்தல்களில் வெற்றி பெற்றது என்ற வியப்பில் விவாதித்துக் கொண்டிருக்கின்றன. எதிர்கால மாணவர் முயற்சிகளுக்கான ஆரம்பத் திட்டமிடலில் ஈடுபட்டு, மாணவர்களுக்கு அர்த்தமுள்ள, மகிழ்ச்சியான வாழ்க்கையை உருவாக்கும் பணியில், ஏ.பி.வி.பி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
கட்டுரையாளர்: – ஆர். இந்துசூடன்
மத்திய செயலாக்ககுழு உறுப்பினர், ஏ.பி.வி.பி.
தமிழில்: திவ்யா இரா.கு, முனைவர் பட்ட ஆய்வாளர், சென்னை