அதானி குழுமம் சார்பில் உத்தர பிரதேசத்தில் ரூ.3,000 கோடி முதலீட்டில் ஏவுகணை மற்றும் வெடிமருந்து உற்பத்தி ஆலைகள் தொடங்கப்பட்டு உள்ளன.
அதானி குழுமத்தின் அங்கமான ‘அதானி டிபென்ஸ் அண்ட்ஏரோஸ்பேஸ்’ நிறுவனம் சார்பில்உத்தர பிரதேசத்தின் கான்பூரில் 500 ஏக்கர் பரப்பளவில் தெற்காசியாவின் மிகப்பெரிய ஆயுத உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டு உள்ளது. அங்கு ஏவுகணை மற்றும் வெடிமருந்து உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கடந்த திங்கள்கிழமை கான்பூரில் நடைபெற்ற விழாவில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்று அதானி ஏவுகணை, வெடிமருந்து உற்பத்தி ஆலைகளை தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் பேசும்போது, “பிரதமர் நரேந்திர மோடியின் சுயசார்பு பாரத் திட்டத்தின் கீழ் உத்தர பிரதேசத்தின் அதானி குழுமம் சார்பில் ஆலைகள் தொடங்கப்பட்டு உள்ளன. இங்குஉற்பத்தி செய்யப்படும் ஏவுகணைகள், வெடிமருந்துகள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று தெரிவித்தார்.
4,000 பேருக்கு வேலை.. ‘அதானி டிபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ்’ நிறுவன தலைமைசெயல் அதிகாரி ஆசிஷ் ராஜ்வன்சிபேசும்போது, “உத்தர பிரதேசத்தின் கான்பூர் ஆலைகளில் ரூ.3,000கோடியை முதலீடு செய்துள்ளோம். இந்த ஆலைகள் மூலம் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்தார்.
அதானி குழுமம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கான்பூர் வெடிமருந்து ஆலை மூலம் நடப்பாண்டில் 15 கோடி துப்பாக்கி குண்டுகள் தயார் செய்யப்படும். இது நாட்டின் துப்பாக்கி குண்டு தேவையில் 25 சதவீதத்தை பூர்த்தி செய்யும். வரும் 2025-ம் ஆண்டில் 20 கோடி துப்பாக்கி குண்டுகளை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கான்பூர் ஆலை மூலம்குறைந்த தொலைவு, நீண்டதொலைவு பாயும் ஏவுகணைகள் தயார் செய்யப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
‘அதானி டிபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ்’ நிறுவனத்தின் ஹைதராபாத் ஆலையில் கடந்தஜனவரி மாதம் ‘திருஷ்டி 10′ என்ற பெயரிலான ட்ரோன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வகை ட்ரோன்கள் 450 கிலோ வெடிமருந்துகளை சுமந்து செல்லும் திறன் கொண்டவை. இவை கடற்படைக்கு விநியோகம் செய்யப்பட உள்ளன. அதானி டிபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ்’ நிறுவனம் சார்பில் ராணுவத்துக்காக அதிநவீன துப்பாக்கிகளும் தயார் செய்யப்படுகின்றன.