“இளைஞர்கள் வேண்டுவது முன்மாதிரிகள்”

நெல்லை சு முத்து பேட்டியின் முதல் பகுதி  நேற்று சனிக்கிழமை வெளிவந்தது. இரண்டாம் (நிறைவு) பகுதி இன்று வெளியிடப்படுகிறது.

ஏதாவது பிரச்சினை என்றால் எல்லோரும் உடனடியாக விண்வெளி ஆராய்ச்சிக்கு இவ்வளவு செலவு செய்யவேண்டுமா என்று ஆரம்பித்துவிடுகிறார்களே. உங்கள் பதில் என்ன?

அறிவியல் என்பது சிந்தனை சார்ந்தது. அதில் இருந்து வெளிப்படும் பொருள் சார்ந்த நுட்பங்களே தொழில் நுட்பங்கள் இது. புறவெளி நோக்கி அமைந்தால் அண்டவளி ஆராய்ச்சி அகவெளி நோக்கி அமைந்தால் பிண்ட ஆராய்ச்சி. அதாவது உயிரணுக்கள் தொடர்பான ஆராய்ச்சி. அனந்தம் ஆகிய அளவில்லாத தொட இயலாத நிலை குறித்து மேன்மேலும் உயர்ந்து செல்கிறோம். வெறுமைக்குள் என்ன என்று தேடியும் நுணுக்கமுடன் ஆராய்ந்திடச் சிந்திக்கிறோம். அறிவியலின் இரண்டு உச்ச வரம்புகளுமே தேவை தாம்.

செலவுக் கணக்கு என்று பார்த்தால், விண்வெளிக்கான நிதி ஒதுக்கீடு ஆண்டுக்கு 10,000 கோடி ரூபாய் என்று இருக்கட்டும். அதன் பலன்கள் அனைத்தும் தனிமனிதனுக்கு சராசரி ஆண்டுக்கு வெறும் 75 ரூபாய்க்கு வாய்க்கிறதே. அதுவும் ஒரு நாளைக்கு 20 பைசாவுக்கு தொலைகாட்சி, செல்பேசி, வானிலை முன்னறிவிப்பு, இணைய வசதிகள், வேளாண்மை, சுகாதாரம், மின்சாரம், தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகள், நாட்டின் பாதுகாப்பு எனப்பல துறைகளிலும் விண்வெளிப் பயன்பாடு அமைவது என்பது அனைவருக்கும் எற்புடையது தானே?

பல கல்வி நிலையங்களுடனும் நீங்கள் தொடர்பு கொண்டுள்ளீர்கள் உங்கள் பார்வையில் இந்தத் தலைமுறை…..

துடிப்பாக இருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்வில் உரிய வழிகாட்டுதல்கள் மட்டுமே தேவை. நாட்டு விடுதலை ஆகிய முதலாவது தொலைநோக்கில் வென்றுவிட்டோம். இனி தொழில்நுட்பத்தில் தன்னிறைவு, தற்சார்பு, தற்காப்பு என்ற வகையில் பொருளாதாரத்திலும், மதிப்பிலும் உலக நாடுகளிடையே நம்மை உயர்த்திக்கொள்ள இந்தத் எடுத்துரைப்பவர் அவரவர் தங்கள் சுய அனுபவத்தின் வெளிப்பாடாக ஒளியூட்டினால் மட்டுமே இந்தத் தலைமுறையினர்க்குத் தங்கள் பாதையில் நம்பிக்கை பிறக்கும்.

கல்விக்கூடங்களில் பெற்ற பாடங்கள், காய்கறிகள் மாதிரி அனுபவ அறிஞர்களே அவற்றை உட்கொள்வதற்கேற்ற உணவுப் பொருளாகப் பக்குவப்படுத்தி வழங்குகிறார்கள் என்று கருதுகிறேன். பாடங்களுடன் படிப்பினைகளும் தான் முக்கியம். பெற்றோர்களின் பங்களிப்பும் கணிசமானது. இன்றைய இளைஞர்கள் வேண்டுவது முன்மாதிரிகளைத் தானே தவிர, உபதேசிகள் அல்லர்.

பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் கூறுபதைப் போல ஒரு குழந்தை நல்ல படியாக முன்னேற  வேண்டும் என்றால் மூன்று பேர் முக்கியம். அம்மா, அப்பா, ஆரம்பப் பள்ளிக்கூட ஆசிரியர். நல்ல குணமான வாழ்வு வேண்டுமென்றால் இவர்களால் தான் ஊட்ட முடியும். மூவரும் சேர்ந்து பதினைந்து வயதிற்குள் ஒரு குணமான குழந்தையாக மாற்றாவிட்டால் பிறகு கடவுளோ, பிசாசோ எந்த அரசுத் சட்டமோ அவர்களை மாற்ற முடியாது. என்னுடைய அனுபவத்தில் இதை உணர்ந்திருக்கிறேன் என்கிறார்.

உங்கள் துறைக்கு வர நினைக்கும் இளைஞர்களுக்கு உங்கள் ஆலோசனைகள்?

எந்தத் துறைப் பாடமானாலும் அன்புடன் விரும்பிப் படிக்க வேண்டும். வகுப்பறைகளுக்கு வெளியே நூலகங்களில் நல்ல நூல்களையும் கற்றறிதல், அறிஞர்கள் உரைகள் வழி கேட்டறிதல், எதனையும் கைப்பட செய்து பார்த்துப் பட்டறிதல் ஆகிய வகைகளில் அறிவு பெற வேண்டும். வாழ்வில் ஒரு குறித்த துறையில் வல்லவராக வேண்டும் என்ற தெளிவு வேண்டும். எடுத்த காரியம் எதிலும் முன்கருதல் இன்றிச் செயலாற்றிக் கூடுதலோ, குறைவோ கிடைக்கிறப் பலனை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும். அதைத்தான் திருவள்ள்வரும்,

அன்பு, அறிவு, தேற்றம் அவாஇன்மை இந்நான்கும்

நன்கு உடையான் கட்டே தெளிவு

என்கிறார்.

மாணவர்களே, விண்வெளித் துறையில் சேரவேண்டுமானால், திருவனந்தபுரத்தில் ஐ.ரு.எஸ்.டி எனப்படும் இந்திய விண்வெளி அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தில் நுழைத்தேர்வு எழுத வேண்டும். இங்கு இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டபடிப்புகள் முடித்து, இந்திய விண்வெளித் துறையிலேயே சேர்ந்து பணியாற்றலாம். சாதனைகள் புரியலாம்.

(நிறைவு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *