தமிழ் மண்ணில் இன்று இலக்கியம் செய்பவன் படைப்பாளி; இது பற்றி மகிழ்ச்சி. முன்பு இங்கே இலக்கியம் செய்தவன் பக்தன்; இது பற்றி மிக்க மகிழ்ச்சி. பக்தன் இலக்கியம் படைத்து தமிழுக்கு செழுமை சேர்த்தான்; பார்த்தான் இறைவன்.
இலக்கியம் செய்வதில் பக்தனுக்கு பக்கத் துணையாக நின்றான். அடி எடுத்துக் கொடுத்தான்; அதோடு நிற்கவில்லை; அரங்கேற்றம் நடத்திக் கொடுத்தான்; தன் ஆக்கத்தில் பிழை சொன்னால் படைப்பாளியாக சீறினான்;
கருணையுடன் பொற்கிழி பெற்றுக் கொடுத்து பிழைப்புக்கு வழிகாட்ட வந்தான்; புலவனை ஆதரித்து அதன் மூலம் இலக்கியத்தை ஆதரிக்க சீமான்களுக்கு ஓலை அனுப்பினான்; புலவனுக்கு பெரும் பொருள் கிடைக்க பரிந்துரைக் கடிதம் கூட எழுதி அனுப்பினான்;
இறைவியோ தமிழ்ப் புலவன் உயிரைக் காப்பாற்ற தன் மூக்குத்தியையே கூட பயன்படுத்தினாள்; இலக்கியத்தின் தரம் கண்டு சிறுமியாக வந்து புலவனுக்கு பரிசளித்து கௌரவித்தாள். தமிழ் இலக்கியத்தின் அச்சு அசலாக அதே அனுபவம், ஒவ்வொரு பாரதிய மொழியின் இலக்கிய வளாகத்திலும் விளங்குகிறது.
காரணம், இறைவன் தந்த இலக்கியம் காட்டும் கலாச்சாரத்தால் தொன்றுதொட்டு பாரத தேசம் ஒன்றாக இருந்து வரும் அற்புதம். அதன் அற்புதக் காட்சிகளை தொடர்ந்து தரிசிக்க வாசகர்களை அன்புடன் அழைக்கிறோம். வாரீர்! முதல் காட்சி காணீர்!! – − ஆசிரியர்
பிரபஞ்சத்தின் முதல் ஓசையே ஈசனின் உடுக்கையிலிருந்து வெளிப்பட்டது தானே? அந்த ஓசையிலிருந்து தோன்றிய மொழியும், மொழியிலிருந்து பிறந்த இலக்கியமும் தெய்வீகமேதான். வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் பண்டைய பாரதத்தில் எல்லா கவிஞர்களும், புலவர்களும் இறையருள் பெற்றவர்களாகவே விளங்கினர்.
ஒரு சில படைப்பாளிகளும் அவர்தம் படைப்புகளும் இறைவனால் நேரிடையாக அங்கீகரிக்கப் பட்டிருப்பது அதிசயமான உண்மை. உதாரணமாக ராமாயணம், மஹாபாரதம் இரண்டும் இதிகாசம் என்பதைத் தாண்டி, மிகச் சிறந்த இலக்கியங்கள்கூட, ஏறத்தாழ பாரதத்தின் அனைத்து மொழிகளிலும் இயற்றப்பட்ட காவியங்கள் இவை.
ராமாயணக் காவியத்தை இயற்ற வால்மீகி முனிவருக்கு வழிகாட்டியது தேவமுனி நாரதரே! லிட்ஃபெஸ்ட் போல ஊர் ஊராகச்சென்று, ராமக் கதையைப் பாடிப் பரப்பியவர்கள் லவ – குசா சகோதரர்கள். மஹாபாரதத்தை வியாசர் டிக்டேட் செய்ய வேகமாக எழுதியது சாட்சாத் விநாயகர். தனயன் தான் டிக்டேஷன் எடுத்தான் என நினைக்க வேண்டாம். அவன் தந்தையும் தான்.
ஆம்! தில்லையில் திருவாசகப் பாடல்களை மாணிக்கவாசகர் பாடப்பாட சிவபெருமானே ஏட்டில் குறித்துக்கொண்டதாக வரலாறு. பெரிய புராணம் என்று புகழ்பெற்ற திருத்தொண்டர் புராணமாக அறுபத்துமூன்று நாயன்மார் வரலாற்றை சேக்கிழார் எழுத “உலகெலாம் உணர்ந்து” என அடியெடுத்துக் கொடுத்தவனே சிவபெருமான் தான்.
திருவண்ணாமலையில் அருணகிரிநாதரை தடுத்தாட்கொண்டு, முருகப்பெருமான் “முத்தைத்தரு” என அடி எடுத்துக்கொடுத்தார். முத்தைத்தரு என்பது அருணகிரிநாதர், முருகப் பெருமானைப் போற்றிப் பாடிய முதல் திருப்புகழ் பாடல். பிரம்ம தேவர் நான்கு வேதங்களின் சாராம்சமாக நாட்டிய சாஸ்திரம் உருவாக்கி பரதமுனிவருக்கு அருளினார்.
தமிழால் பக்திநெறி பரப்ப பேயுரு வேண்டினாள் காரைக்கால் அம்மை. வழங்கினான் ஈசன். தமிழால் நன்னெறி வளர்க்க ஔவையின் வேண்டுதலுக்கிணங்கி அவளை பேரிளம்பெண் ஆக்கினான் விநாயகன். இதுபோல சுவாரசியங்கள் இன்னும் வரும்.
