இந்து தெய்வங்களை அவமதித்ததால் திருமாவளவன் மீது வழக்கு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி சார்பில், புதுச்சேரி கம்பன் கலையரங்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில், அந்தக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.
இந்த மாநாட்டில் இந்து தெய்வங்களை அவமதிக்கும் வகையில் திருமாவளவன் பேசியதாகக் கூறப்படுகிறது. பொதுக்கூட்டத்தில் இந்து தெய்வங்களை திருமாவளவன் அவமதித்ததாகக் கூறி, பெரம்பலூரைச் சேர்ந்த இந்து முன்னணி நகரச் செயலர் தி.நா.கண்ணன் அளித்த புகாரின் பேரில், தமிழக போலீஸார் திருமாவளவன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இருப்பினும், சம்பவம் நடைபெற்ற பகுதி புதுவை மாநிலம், ஒதியஞ்சாலை காவல் சரகத்துக்கு உள்பட்டது என்பதால், இந்த வழக்கு தொடர்பான கோப்பு, புதுவை காவல் துறை தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீஸார் இந்த வழக்கை புதுச்சேரி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இதுதொடர்பாக நீதிமன்ற அனுமதிக்குப் பிறகு, டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்ஸவாவின் உத்தரவின்பேரில், புதுச்சேரி ஒதியஞ்சாலை போலீஸார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மீது மத அவமதிப்பு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.