இந்தியா-ரஷியா இடையே 15 ஒப்பந்தங்கள் – மோடி-புதின் முன்னிலையில் கையெழுத்து

இந்தியா, ரஷியா இடையே வர்த்தகம், பாதுகாப்பு, முதலீடு, விண்வெளி, எண்ணெய்-எரிவாயு, அணுசக்தி, கல்வி, கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
ரஷியாவின் விளாடிவோஸ்டோக் நகரில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் ஆகியோர் இடையே புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர், அவர்கள் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

சென்னை-விளாடிவோஸ்டோக் இடையே கப்பல் போக்குவரத்து

இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே, சென்னை – விளாடிவோஸ்டோக் துறைமுகங்கள் இடையே கடல்சார் தொலைதொடர்புகளை மேம்படுத்துவதற்காக, இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் ரஷிய போக்குவரத்து அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது, இந்தியாவுக்கும், ரஷியாவின் தொலை கிழக்கு பிராந்தியத்துக்கும் இடையேயான ஒத்துழைப்புக்கு மேலும் உத்வேகம் அளிக்கும்.

ஹைட்ரோகார்பன் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இந்தியாவிலும், ரஷியாவிலும் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் திட்டங்களை ஒருங்கிணைந்து செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய முடிவு செய்யப்பட்டுள்ளது. நீர்மின், அனல்மின் உற்பத்தி துறைகளிலும் பங்களிப்பு அதிகரிக்கப்படும்.  இதுதொடர்பாக மத்திய பெட்ரோலியத் துறை மற்றும் ரஷிய எரிசக்திதுறை அமைச்சகங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
எரிசக்தி துறையில் மட்டுமன்றி, வனங்கள், வேளாண் துறைகளிலும் ரஷியாவுடனான ஒத்துழைப்பை இந்தியா விரும்புகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இரு தலைவர்களும் அக்கறை கொண்டுள்ளனர். அதன் அடிப்படையில், இந்தியா, ரஷியா இடையே புலிகள் பாதுகாப்பு மாநாட்டை அடுத்த ஆண்டு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் விஜய் கோகலே.

ககன்யான் வீரர்களுக்கு ரஷியா பயிற்சி

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை, 2022-ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்த இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலத்தில் செல்லவிருக்கும் இந்திய விண்வெளி வீரர்கள், ரஷியாவில் பயிற்சி பெற உள்ளனர். அதிபர் புதினுடனான சந்திப்புக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி இதைத் தெரிவித்தார்.

ககன்யான் விண்கலத்தில் செல்லவிருக்கும் வீரர்களை தேர்வு செய்யும் பணியை இஸ்ரோ தொடங்கியுள்ளது. அடுத்த மாதத்துக்குள் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று இஸ்ரோ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *