இது புதிது நேர வங்கியில் போட்டு வையுங்க

இணையதளத்தில் ஒரு செய்தி படித்தேன் எனக்கு அந்நியமாகத் தோன்றியது, ஆச்சரியமாக இருந்தது, ஆனால் மனம் சந்தோஷப்பட்டது. நாளைய தேவை அதுவாகத்தான் இருக்குமோ என ஐயமுறவைத்தது!

ஸ்விட்சர்லாந்து நாட்டுக்கு படிக்கச் சென்ற ஒரு இந்திய மாணவன் ஒரு வீட்டில் “paying guest” ஆக தங்குகிறான். வீட்டில் 60 வயது பெண் (மூதாட்டி என்று இக்காலத்தில் சொல்லக்கூடாது) வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர். ஸ்விட்சர்லாந்தில் மூத்த குடிமக்களை அரசு ஓய்வூதியம், மருத்துவப் பாதுகாப்பு, கொடுத்து சிறப்பாக கவனித்துக் கொள்வதால் யாருக்கும் எந்த கவலையும் இல்லை. கணவன் – மனைவி – குழந்தைகள் என யாரும் யாரையும் நம்பி இருக்க வேண்டிய அவசியமில்லை.

அந்தப் பெண் கணவனை பிரிந்து தனியாக வாழ்பவர். இவர் சிங்கிள் உமன். வெளிநாடுகளில் சிங்கிள் உமன், சிங்கிள் மென், சிங்கிள் மதர், என தனியாக வாழ்பவர்கள் எண்ணிக்கை அதிகம். ஆனாலும் அது சகஜம் இந்த பெண்ணோடு 86 வயது முதியவர் ஒருவரும் இருந்தார்.

இந்தப் பெண் முகமலர்ச்சியோடு அவருக்குப் பணிவிடை செய்து வந்தார் நம்முடைய இந்திய மாணவனுக்கு இரண்டு சந்தேகம்: அந்தப் பெண்ணிடமே கேட்டுவிட்டான். யார் அந்த முதியவர்? உங்கள், “நண்பரா? உறவினரா? அல்லது என்னைப்போல் பேயிங் கெஸ்ட்டா அதாவது பணம் பெற்று பணிவிடை புரிகிறீர்களா?”  அதற்கு அந்தப் பெண்மணி சொன்னார், ”எனக்கு எங்கள் நாட்டு அரசாங்கம் எல்லாம் கொடுக்கிறது. என் வாழ்க்கைக்காக நான் சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை இந்த முதியவர் எனக்கு எந்த வகையிலும் தெரிந்தவர் அல்ல.நான் அவருக்கு பணிவிடை  புரிகிறேன்.”

காசுக்காக அல்ல. என் குளிர் காலத்திற்காக என்றார். நம் மாணவனுக்கு ஒரே ஆச்சரியம் நம் பாரத பண்பு இந்நாட்டில் கூட உள்ளது என்று ஆனால் அந்த ஆச்சரியம் சிறிது நேரம் கூட தொடரவில்லை. வேறு ஒரு ஆச்சரிய மாக மாறியது. அந்தப் பெண்மணி தொடர்ந்தார்.

 ”எங்கள் நாட்டில் இதுமாதிரி நாங்கள் செய்யும் “சேவைகள்” அரசாங்கத்தாலும் தனியாராலும் “நேர வங்கி” (டைம் பேங்க்) என்ற அமைப்பின் மூலம் எங்கள் சேவை கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. நாங்கள் வயது மூப்பு அடைந்த பிறகு உடல் நலிவுற்ற  அல்லது நோய்வாய்ப்பட்ட காலங்களில் நமக்கு உதவி செய்ய யார் வருவார்கள்? செவிலியரைத்தான் தான் அழைக்க வேண்டுமா? சொந்தக்காரர்கள் வருவார்களா?  என ஏங்கி இருக்க வேண்டாம்.  மாறாக இந்த வங்கிகளுக்கு போன் போட்டால் அவர்கள் நமக்காக ஆட்களை அனுப்பி வைப்பார்கள். நாம் இதுபோல “சேவை செய்து” சம்பாதித்து நம் கணக்கில் வைத்திருக்கும் “சேவை நேரத்திற்கு” தகுந்த அளவு நமக்கும் சேவை செய்ய ஆட்கள் வருவார்கள். அந்த மாதிரி என் சேவை வங்கியில் நேர வங்கியில் நான் ‘நேரப்பணம்’ போடுவதற்காகத் தான் இம்முதியவருக்கு இலவசமான பணி புரிந்து வருகிறேன்” என்றார்.

நம் மாணவனுக்கு மட்டுமல்ல படித்த எனக்குமே திக்கென ஆகிவிட்டது இது ஒரு நல்ல concept ஆக எனக்கும் பட்டது. காரணம் மாறி வரும் உலகில் வாழ்க்கைச் சூழலில் மனித உறவுகளில் தனிமை ஒரு மாபெரும் சாபக்கேடு. அது ஒரு மனோதத்துவ அச்சுறுத்தல். சைகலாஜிகல் திரெட்.

 இந்த முறை நம் நாட்டுக்கு அன்னியமானது. ஆனாலும் அன்னியர்கள் நம்மீது படையெடுத்து வருவதை நம்மை ஆக்கிரமிப்பதை நாம் ஊக்குவிக்க ஆரம்பித்து விட்டோம் என்பதை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும்! அதற்கு முன்பாக “டைம் பேங்க்” கதையை சொல்லி முடித்து விடுகிறேன்!

1990 ல் இங்கிலாந்தில் மார்ட்டின் சைமன் என்பவரும் அமெரிக்காவில் டாக்டர் டெகர் கேன் என்பவருமாக ஒரு இயக்கமாக “டைம் பேங்கை” உருவாக்கினார்கள். இதற்கு முன்பாக 1973 ல் ஜப்பானில் டெரூகோ மிசு ஹூமா என்கிற பெண் டைம் பேஸ் சித்தாந்தத்தை துவக்கினார்.

குடும்ப உறவுகளில் நம்பிக்கை, தனிமையிலிருந்து பாதுகாப்பு என்பதே இதன் நோக்கமாக இருந்தது இந்த “இயக்கம்” இன்றைக்கு காலத்தின் கட்டாயமாகிவிட்டது. இருபது ஆண்டுகளுக்கு முன் கோவை ரயில்வே ஸ்டேஷனில் பிஸ்லரி குடிநீர் பாட்டில் தண்ணீரை எல்லாம் காசு கொடுத்து யாராவது வாங்குவார்களா என்று ஏளனமாக அதை பார்த்தேன். இன்று தண்ணீர் பாட்டில் வைக்க பைகளில், பெட்டிகளில், கார், ஸ்கூட்டர், ரயில்களில் தனி ஏற்பாடு உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன் சாம்பார் பொடி, இட்லிப்பொடி கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்டபோது ‘வேலை வெட்டி இல்லாதவர்கள்’; வியாபாரம் ஆகுமா இது? என கேட்டவர்களில் நானும் ஒருவன். இன்று சமையல் மசாலா சக்கைபோடு போடுகிறது காரணம் வீட்டில் யாரும் அரைக்கத் தயாரில்லை.

 Old age home  முதியோர் இல்லங்கள் நாம் நினைத்துப் பார்க்காத பாவத்தின் சம்பவங்கள் இன்று பெருகி வருகிறது

அன்பும் அறனும் உடைத்தாயின்- – இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

இது மீண்டும் வருமா என ஏங்கும்  உள்ளங்கள் பெருகி வரும் போது நம் பாரத கலாச்சாரம் பலன் கருதா சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. அச்சேவை தான் பயன் தரும் சடங்காக மாறி உள்ளது. இன்றைய காலகட்டத்தில் உறவுகள் ஊசலாடும் நேரத்தில் ரத்த சொந்தம் இல்லாவிடிலும் ரத்த பந்தம் உருவாக்கிட நாமும் டைம் பேங்க் கான்செப்ட் அங்கீகரிக்கலாம் என நினைக்கிறேன்.

எத்தனை கோடிகள் இருந்தாலும் பணம் உறவுகளை உருவாக்கிவிடாது.  மறைந்த தமிழக முதல்வர் ஜெ வின் இறுதிக்காலம் இதற்கு உதாரணம்! உண்மையான உள்ளத்தோடு செய்யப்படும் சேவைகள் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்; அவை தேவையான போது திரும்ப தனக்குக் கிடைக்க வேண்டும் என்பதை இயக்கமாக நடத்தவேண்டும். இப்போதும் அது நடக்கிறது. ஆனால் அதன் பயன்  நமது கணக்கில் அல்ல, நாட்டின் கணக்கில், நம் பாவ புண்ணியக் கணக்கில் என்பதே ஹிந்து இயக்க சித்தாந்தம்! சிதைந்த உறவுகளுக்கு மத்தியில் டைம் பேங்க் புதிய உறவுகளை கடன் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.