ஆர்.எஸ்.எஸ் மீது பெரும் மதிப்பு கொண்டவர் தேவர்

ஆர்.எஸ்.எஸ். மீதும், அதன் இரண்டாவது தலைவர் குருஜி கோல்வாலகர் மீதும், பெரும் மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தார் தேவர் பெருமகனார். ஆர்.எஸ்.எஸ் மீது அவருக்கு மதிப்பு ஏற்பட காரணம், முத்துராமலிங்க தேவர், அடிப்படையிலேயே கொண்டிருந்த ஹிந்துத்துவ சிந்தனைகள் தான் என்றால் மிகையாகாது.
“நமக்கு வேண்டுவது என்ன? ராமலிங்க சுவாமிகள், சுவாமி விவேகானந்தர், சுவாமி ராம தீர்த்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற பெரிய ஞானிகளுடைய தெய்வீக உள்ளமும், தேசத்திற்காக எதையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிற தேசாபிமானிகளின் வீரமும். இந்த இரண்டும் கலந்து நமக்குத் தேவை” என்பது தேவரின் சிந்தனை. இந்த கருத்தை ஆரம்பத்திலிருந்து பின்பற்றி வருகிறது ஆர்.எஸ்.எஸ்.
அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒரு கூட்டத்தில், ஹிந்து மதம் ஒரு அடுப்பங்கரை மதம் என்று கிண்டல் செய்தார். அதைக் கேள்விப்பட்டு வெகுண்டெழுந்த தேவர், “ஹிந்து மதம் என்ன காங்கிரஸ் கட்சியா, அடுப்பங்கரை அரசியல் செய்வதற்கு?” என்று துணிச்சலாக கேட்டார். “நாட்டின் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் இப்படி பேசினால் அது தவறு. பிறகு அதைக் கொண்டு மற்றவர்களும் பேசுவார்கள். இங்குள்ள ஈ.வெ. ராமசாமியோ, சி.என். அண்ணாதுரையோ பேசுவது பற்றி நான் கவலைப்படவில்லை, நாட்டின் பிரதமர் பேசுவது பற்றி கவலைப்படாமல் இருக்க முடியவில்லை. இப்படி இவர் இருக்கிற காரணத்தினால் தான், நாட்டிலே இருக்கிற சில்லறைகள், மதத்தை தூற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், என்று திராவிட சில்லறைகளை சல்லி சல்லியாக நொறுக்கி விட்டார்.
மொழியின் பெயரால் பிரிவினை பேசுவது, வடமொழியையும், தென் மொழியையும் பிரித்து பேசுவது கொடிய பாவம் என்றார் தேவர்.
‘வானவன் கான் வானவர்க்கும் மேலானான் காண்
வடமொழியும் தென் தமிழும் ஆனவன் காண்’
என்று அப்பர் பெருமான் சிவபெருமானைப் போற்றியதைக் குறிப்பிட்டு, வடமொழி, தென்மொழி இரண்டும் நம் சொந்த மொழிகள், நமக்குள் பேதம் கூடாது என்று கூறினார்
அந்த நாட்களில் நமது மக்களிடையே, “நம்மால் ஒன்றும் செய்ய முடியாது, பல அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் வெள்ளையர்கள் கண்டுபிடித்தவை” என்ற எண்ணம் வேரூன்றி இருந்தது.
தேவர் அவர்கள், எண்ணற்ற வானியல் மற்றும் கணித கோட்பாடுகள் இந்தியரால் ஏற்படுத்தப்பட்டவை என்று மக்களுக்கு புரிய வைத்தார். பூமி மட்டுமல்ல இதற்கு அப்பாற்பட்ட உலகங்களும் உள்ளன என்பதை நம் முன்னோர்கள் அறிந்திருந்தனர் என்று அடிக்கடி கூறுவார். நம் நாட்டை பற்றியும், நம் முன்னோர் பற்றிய பெருமிதம் மற்றும் ஆழ்ந்த நம்பிக்கைகளும் அவருக்கு எப்போதும் உண்டு.
தேசத்தின் நன்மையே தெய்வீகம் என்ற இத்தகைய ஹிந்துத்வ பார்வைதான் ‘தேசியமும், தெய்வீகமும் என் இரு கண்கள்’ என பெருமையுடன் அவரை முழங்க வைத்தது.
தொகுப்பு : V.C. ஸ்ரீகாந்த்