குஜராத், காந்திநகரில், ஆர்.எஸ்.எஸ் உட்பட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்ற, மூன்று நாள் கூட்டம் நடந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உட்பட, பலர் பங்கேற்றனர். அதில், அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயில், தேசத்தின் சுயமரியாதை, கௌவுரவத்தின் சின்னமாக விளங்கும். அயோத்தியில், ராமர் கோயில் கட்டுவதற்காக நடந்த அடிக்கல் நாட்டு விழா, தேச வரலாற்றில் ஒரு திருப்புமுனை. ராமர் கோயில் கட்டும் பணியில், மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என, ஆர்.எஸ்.எஸ்., விரும்புகிறது. இதற்காக, ஐந்து லட்சம் கிராமங்களில், 10 கோடிக்கும் அதிகமான குடும்பங்களை தொடர்பு கொண்டு, ஆர்.எஸ்.எஸ், மற்றும் அதன் பல்வேறு அமைப்புகள் நிதி வசூலிக்கும். ‘ஹிந்துக்கள் அனைவரும் ஒன்று, அனைவரும் சரிசமமானவர்கள்’ என, ஆர்.எஸ்.எஸ் மக்களிடம் எடுத்துக்கூறும். ஹிந்து கலாசாரத்தின் பெருமையான கூட்டுக்குடும்ப முறை மக்களிடம் எடுத்துக் கூறப்படும். குடும்பங்கள் உடைவது, சமூகத்துக்கு நல்லதல்ல. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதற்காக, மரம் நடுதல், நீர்நிலைகளை பாதுகாப்பு போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில், ஆர்.எஸ்.எஸ், ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டது.