ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் அவர்களின் விஜயதசமி உரை

இன்று மிகக் குறைந்த எண்ணிக்கையோடு விஜயதசமி விழா கொண்டாடப்படுவதை நாம் காண்கிறோம். இதற்கான காரணம் நம் அனைவருக்கும் தெரியும்.  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் தடை உள்ளது.

கடந்த மார்ச் மாதத்திலிருந்து உலகம் முழுவதுமான அனைத்து விஷயங்களையும் கொரோனா பற்றிய பேச்சு முடக்கி வைத்துள்ளது.  கடந்த விஜயதசமி நாளிலிருந்து இன்று வரை பல குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.

2019 விஜயதசமிக்கு பல நாட்கள் முன்பாகவே பாராளுமன்ற நடைமுறைகளை முறையாக பின்பற்றி சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது.  தீபாவளிக்கு பிறகு நவம்பர் 9 அன்று உச்சநீதிமன்றம் ராமஜன்ம பூமி விஷயத்தில்  தனது தெளிவான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது.   பாரதியர்கள் உண்மையைப் புரிந்து கொண்டு மிகுந்த கட்டுப்பாட்டுடன் இந்த தீர்ப்பினை ஏற்றுக்கொண்டார்கள்.  ஆகஸ்ட் 5 அன்று அயோத்தியில் நடைபெற்ற புதிய ஆலய நிர்மாணப் பணிக்கான பூமி பூஜை விழாவினை மக்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடனும் மகிழ்ச்சியுடனும் புனிதமான நட்புணர்வுடனும் கொண்டாடியதன் மூலம் நாம் அதனை உணர்ந்து கொள்ள முடிந்தது.  நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டத்தின் நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.  அண்டை நாடுகளிலிருந்து மதத்தின் பெயரால் துரத்தியடிக்கப்படும் மக்களுக்கு வெகுவிரைவில் நம் நாட்டின் குடியுரிமை கிடைப்பதற்கு இது வழிவகை செய்கிறது.  பாரத நாட்டில் குடியுரிமை விஷயத்தில் மதத்தின் பெயரால் எந்த வேறுபாடும் எந்தக்காலத்திலும் காட்டப்படவில்லை.  வெளிநாடுகளிலிருந்து பாரதத்தில் குடியேறுபவர்களுக்கு குடியுரிமை வழங்கும் நெறிமுறைகள் துவக்க காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வருகின்றது.  இன்றும் அது தொடர்கிறது.  முஸ்லிம்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காகவே இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நமது முஸ்லிம் சகோதரர்களின் மனதில் தவறான எண்ணத்தினைப் பதியவைக்க இச்சட்டத்தினை எதிர்ப்பவர்கள் முயற்சிகள் செய்து வருகின்றனர்.  இதற்கு விரோதமாக பல போராட்டங்களை நடத்தி ஆட்சேபனைக்குரிய வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு லாபம் சம்பாதிக்க விரும்புகின்றனர்.  இது தேசத்தில் பதற்றத்தையும் மக்கள் மனதில் மதத்தின் பெயரால் அமைதியற்ற தன்மையையும் உருவாக்கியது.  இந்த கொந்தளிப்பான சூழ்நிலையிலிருந்து அமைதியை நோக்கி திரும்பக் கூடிய காலகட்டத்தில் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டுவிட்டது.  இதன் காரணமாக மக்கள் மற்றும் ஊடகங்களில் விவாதங்களில் இருந்து இது மறைந்துவிட்டது.  இருப்பினும் தொடர்ந்து பிரச்சனைகளை தூண்டி விடுவதன் மூலம் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தும் சதித்திட்டமானது நாடு முழுவதும் நடந்து வருகிறது.  ஊடகங்களில் கொரோனா பற்றிய விவாதம் அதிக இடத்தை பிடித்துக் கொண்டதால் ஒட்டுமொத்த மக்களின் மனதில் இவை பெரிய தாக்கத்தினை ஏற்படுத்த முடியவில்லை.

உலகம் முழுவதும் இதே நிலை காணப்படுகிறது.  உலகின் மற்ற நாடுகளை ஒப்பிடும் பொழுது பிரச்சனையைத் திறமையாகக் கையாளும் விஷயத்தில் பாரதத்தின் உறுதிப்பாட்டைக் காணமுடிகிறது.   மற்ற நாடுகளைக் காட்டிலும் நாம் இப்பெருந்தொற்றின் அழிவிலிருந்து  தப்பித்ததற்குச் சில காரணங்கள் உள்ளன.  அரசின் உடனடி நடவடிக்கையால் இப்பெரும் தொற்றிலிருந்து மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள எச்சரிக்கை செய்ய முடிந்தது.  மக்களை எச்சரிக்கை செய்யும் விஷயத்திலும் அவற்றினை நடைமுறைப் படுத்துவதிலும் மிகச்சிறந்த ஏற்பாடுகள் இருந்தது.  ஊடகங்களும் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து மக்களை அறிவுறுத்தின.  சாதாரண மக்களும் கூட நோய்த்தொற்றின் காரணமாக பயத்தினாலும் எச்சரிக்கை உணர்வினாலும் விதிகளை உறுதியுடன் கடைப்பிடிப்பதைக் காணமுடிந்தது.  அரசு ஊழியர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவலர்கள், நகராட்சி ஊழியர்கள்,  துப்புரவுப் பணியாளர்கள் ஆகிய அனைவருமே மிகுந்த பொறுப்புணர்வுடனும் ஈடுபாட்டுடனும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சேவை செய்தனர்.  இவர்கள் அனைவருமே தங்கள் குடும்பத்திலிருந்து தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு தங்களது உயிரையும் பணயம் வைத்து இரவு பகலாக போர்க்கால அடிப்படையில் முன்னணியில் நின்று பணியாற்றினர்.  நாட்டின் குடிமக்களும் தங்களால் இயன்ற அளவில் பொருள்களை சேகரித்து தேவையானவர்களுக்குக் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தனர்.  இந்த சோதனையான காலகட்டத்திலும் சிலர் தங்களது சுயநலத்திற்காக இந்த சூழ்நிலையை லாபமாக்கிக் கொண்டதையும் பார்க்க முடிந்தது.  ஆயினும் அரசு,  மக்கள், அதிகாரிகள் ஆகியோர் பரஸ்பரம் உதவிக்கொண்டவையே மிகப்பெரிய அளவில் காணமுடிந்தது.  மகளிரும் இப்பணிகளில் சுய ஊக்கத்துடன் ஈடுபட்டனர்.  இப்பெரும் தொற்றின் காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் வேலையையும் ஊதியத்தையும் இழந்தவர்களும் பசியையும் பட்டினியையும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையிலும் மிகுந்த பொறுமையைக் கடைப்பிடித்தனர்.  தாங்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளான போதும் அவை அனைத்தையும் பொருட்படுத்தாமல் மற்றவர்களுக்கு சேவை செய்வதையே தங்களது கடமையாக மேற்கொண்ட பலரது செயல்பாடுகளை அறிய முடிந்தது.  புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பது, அவர்களது பயணப் பாதையில் தேவையான உணவு மற்றும் தங்குமிட வசதிகளைச் செய்து கொடுப்பது, பாதிக்கப்பட்டோர் வீடுகளுக்கு உணவுப்பொருள்களை கொண்டு சேர்ப்பது ஆகிய விஷயங்களில் முழு சமுதாயமும் மிகுந்த முயற்சியினை மேற்கொண்டது.  பிரச்சனை மிகப்பெரியதாக இருந்தபோதும் கூட சமுதாயம் ஒற்றுமையையும் பொறுப்புணர்வினையும் வெளிப்படுத்தும் விதமாக மிகப்பெரிய அளவில் தொண்டு பணிகளை செய்ததைக் காணமுடிந்தது.  நமது பாரம்பரியமான சுத்தம் மற்றும் ஆரோக்கியம் பேணும் வழிமுறைகளும் ஆயுர்வேதம், சித்தா போன்ற நமது பாரம்பரியமான மருத்துவ முறைகளின் மூலம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கிக் கொள்வதும் இக்கால கட்டத்தில் மிகவும் உபயோகமாக அமைந்தது என்பதுவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

ஆங்கிலத்தில் social capital  சமுதாயச் செல்வம்) என அழைக்கப்படும் ஒற்றுமை உணர்வு, ஆழ்ந்த இரக்கம் மற்றும் கருணை, பிரச்சனைக்குரிய காலங்களில் பரஸ்பரம் உதவிக் கொள்ளுதல் போன்ற நமது நூற்றாண்டுகால பண்பாடும் மூல்யங்கள் இச்சூழ்நிலையில் நமக்குக் காணக் கிடைத்தன.  பொறுமை, ஒன்றிணைந்து வேலை செய்வது, தன்னம்பிக்கை ஆகியவை பலருக்கு சுதந்திரத்திற்குப் பிறகு இதுவே முதலாவது அனுபவம்.  மருத்துவ பணியாளர்கள், நகராட்சி ஊழியர்கள் மற்றும் சேவைப் பணிகளில் ஈடுபட்ட சமுதாயத்தின் பல்வேறு தரப்பிலானவர்களில் உயிரோடு இருப்பவர்களுக்கும் சேவைப் பணியிலேயே தங்களது உயிரை சமர்ப்பித்தவர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.  அவர்கள் அனைவரும் பாக்கியவான்கள்.  இப்பணியில் உயிர் நீத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

இந்த நிலைமையில் இருந்து மீண்டு வருவதற்கு மற்றொரு விதமான தொண்டு உபாயம் தேவைப்படுகிறது.  கல்விக்கூடங்களை மீண்டும் துவங்குவது, ஆசிரியர்களுக்கு ஊதியம் அளிப்பது, பள்ளி; கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுப்புவது, கட்டணங்களைச் செலுத்துவது ஆகியவை இக்காலகட்டத்தில் ஒரு பிரச்சனை ஆகலாம். கொரானாவின் காரணமாக கட்டணம் வசூலிக்க முடியாத பள்ளிகள் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க இயலாது.  வேலை இழந்த, தொழில் இழந்த பெற்றோர்களால் தங்களது குழந்தைகளுக்குக் கல்வி கட்டணம் செலுத்த இயலாது.  ஆகவே கல்விக்கூடங்களை மீண்டும் திறப்பது, மாணவர்களுக்கான கட்டணங்களைச் செலுத்துவது, ஆசிரியர்களுக்கான ஊதியம் அளிப்பது ஆகிய தொண்டுப்பணிகள் குறித்து நாம் திட்டமிட வேண்டியுள்ளது.   புலம்பெயர்ந்ததனால் பலர் வேலை இழந்துள்ளனர்.  புதிய வேலைகளை தேடிக் கொள்வதும் அதற்குத் தேவையான பயிற்சி பெறுவதும் அவர்களது பிரச்சனை.  புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பாதியில் விட்டுச் சென்ற பணிகளை மேற்கொள்வதற்கு புதிய தொழிலாளர்களை தேடுவதும் அவர்களுக்கு பயிற்சி அளிப்பதும் தொழில் முனைவோரின் பிரச்சனை.  இக்காரணங்களினால் குடும்பங்களிலும் சமுதாயத்திலும் பொருளாதாரப் பிரச்சினையும் மனக்குழப்பங்களும் ஏற்படும்.  இதனால் சமுதாயத்தில் ஏற்படும் குற்றங்கள், மன அழுத்தம், தற்கொலைகள் ஆகியவற்றினைத் தடுப்பதற்காக பெரிய அளவிலான மனநல ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் தேவை.

கடந்த மார்ச் மாதம் முதலே ஸ்வயம்சேவகர்கள் இந்த இக்கட்டான சூழலில் சமுதாயத்திற்குத் தேவையான அனைத்தையும் செய்யும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள்.  இந்தப் புதுவகையான தொண்டு பணியை ஸ்வயம்சேவகர்கள் தங்களது முழு சக்தியையும் ஈடுபடுத்துவார்கள்.  சமுதாயத்தின் மற்ற உறுப்பினர்களும்கூட இந்த பிரச்சனையை எதிர்கொள்வதற்கு நீண்ட காலம் தொடர்ந்து முயற்சி செய்வதோடு தேவையானவற்றை நல்குவார்கள் என்று நம்புகிறேன்.

உலகம் கொரானாவைப் பற்றி இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை.  இது உருவத்தை மாற்றிக் கொள்ளக்கூடிய ஒரு விஷ அணு.  வெகு சீக்கிரத்திலேயே தொற்றிக் கொள்வது.  மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தாது.  இப்படித்தான் நாம் இதனை புரிந்து கொண்டுள்ளோம்.  எனவே நீண்ட காலம் இதனோடு வாழ்வதோடு இதனிடமிருந்து தப்பித்துக் கொள்வதும் அவசியமாகும்.  இந்த நோயினால் ஏற்படக் கூடிய பொருளாதார மற்றும் சமுதாயப் பிரச்சனைகளிலிருந்து நமது சமுதாயத்தைக் காக்க கூடிய பணியில் நாம் நீண்ட காலம் ஈடுபட வேண்டியுள்ளது.  மனதில் பயம் கொள்ள தேவையில்லை.  இயல்பாக தொடர்ந்து செயல்படுவது அவசியம்.  சமுதாயத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பும் நேரத்தில் விதிகளைக் கடைப்பிடிப்பதும் மற்றவர்களை கடைபிடிக்க செய்வதும் நம் அனைவரின் பொறுப்பாகும்.

இப்பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் சமுதாயத்தில் பல்வேறு புதிய கோணங்களும் வெளிப்பட்டுள்ளன.  உள்முகமாக சென்று சிந்தனை செய்வதற்கான புதிய முறையானது உலகம் முழுவதிலும் துவங்கியிருக்கிறது.  ‘New normal’ என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் எதிரொலிக்கிறது.  கொரோனா பெருந்தொற்றானது மக்களின் வாழ்க்கையை ஸ்தம்பிக்கச் செய்து இயந்திரத்தனமான செயல்பாடுகளையும் நிறுத்தியுள்ளது.  மக்களின் அன்றாட பழக்கவழக்கங்கள் மட்டுமே அவசியம் என்றும் பல மூட பழக்க வழக்கங்கள் நம்மை அடிமைப்படுத்தியுள்ளன என்றும் நினைத்துக்கொண்டிருந்த நாம் அவற்றின் நன்மைகளைக் குறித்தும் பரிசீலனை செய்யக்கூடிய காலம் வந்துள்ளது.   ஒருவார கால முழு அடைப்பின் மூலமாகவே நாம் சுவாசிக்கும் காற்றின் தரத்தின் வேறுபாட்டினை உணர முடிந்தது.  நதிகள் ஊற்றுகள் குளங்கள் போன்ற நீர் நிலைகளில் தூய்மையான தண்ணீர் இருந்ததைப் பார்த்தோம்.  ஜன்னலுக்கு வெளியே தோட்டத்தில் பறவைகளின் கீச்சொலிகளைக் கேட்க முடிந்தது.  பணம் சம்பாதிப்பதற்காகவும் சுக போகங்களை அனுபவிப்பதற்காகவும் ஓடிக்கொண்டிருந்த நாம் அவற்றிலிருந்து நம்மை விலக்கி கொண்டுள்ளோம்.  இதன் காரணத்தால் வாழ்க்கையில் ஒரு புதுமையான ஆனந்த அனுபவத்தைப் பெற்றோம்.   சில நல்ல பழக்க வழக்கங்களின் சிறப்பினை உணர்ந்துள்ளோம்.  தேவைக்குக் கடைப்பிடிக்க வேண்டியவை; தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியவை, தற்காலிகமானது; நிலைத்து நிற்பது ஆகியவற்றைப் பற்றிய தெளிவினை உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா கற்பித்துள்ளது.  கலாச்சாரத்தின் மேன்மை மீண்டும் நம் கவனத்திற்கு வந்துள்ளது.  நமது பாரம்பரியமான பழக்கவழக்கங்களை காலத்திற்கும் இடத்திற்கும் தகுந்தவாறு எப்படி தொடர்ந்து கடைப்பிடிப்பது என்று பல குடும்பங்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளன.  நமது குடும்ப வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் இயற்கையோடு இயைந்த வாழ்வின் அவசியத்தையும் மக்கள் உணரத் துவங்கியுள்ளனர்.

இந்தச் சிந்தனைகள் கொரேனா பெருந்தொற்றின் பக்க விளைவா அல்லது சமுதாயம் உண்மையிலேயே நல்ல விஷயங்களை நோக்கித் திரும்பி இருக்கிறதா என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்லும்.  ஆனால் இந்த பிரச்சனையினால் வாழ்க்கையின் மிகச்சிறந்த மூல்யங்களை நோக்கி மனிதர்களின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது என்பது தெளிவு.

சந்தை பொருளாதாரமே உலகத்தை இணைக்க கூடியது என்ற கருத்து பலருடைய சிந்தனையில் சமீப காலம் வரை இருந்து வந்தது.  அந்தந்த நாடுகளின் விசேஷ தன்மையோடு தங்களைத் தற்காத்துக் கொண்டு உலகளாவிய ஒத்துழைப்பு நல்குவது என்ற கருத்தே தற்போது அனைவரின் மனங்களிலும் இடம்பிடித்திருக்கிறது.  சுதேசியின் மகத்துவத்தைப் பற்றி அனைவரும் மீண்டும் பேசத் தொடங்கியுள்ளனர்.  மேற்கூறிய கருத்துக்களை பாரதியக் கண்ணோட்டத்தில் மறு சிந்தனை செய்வதற்கும் நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களை நோக்கி முன்னேறிச் செல்வதற்கும் அடி எடுத்து வைக்க வேண்டும்.

இந்தப் பெருந்தொற்றைப் பரப்பியதில் சீனாவின் பங்கு கேள்விக்குரியதாக இருக்கும்போதும் தனது பொருளாதார திமிரினால் பயங்கரவாதத்தை ஊக்குவித்து பாரதத்தின் நிலப்பகுதிகளை ஊடுருவல் அதன் முயற்சி உலகறிந்த உண்மை.   இந்த ஊடுருவலிற்கு எதிராக பாரத அரசும் ராணுவமும் மக்களும் ஒன்றிணைந்து தங்களது வீரத்தினை வெளிப்படுத்தினர்.  இது சீனாவிற்கு எதிர்பாராத அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  வருங்காலத்தில் நாம் மிகவும் விழிப்புடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும்.  கடந்த காலங்களிலும் சீனாவின் எல்லையை விரிவாக்குகின்ற முயற்சியினை உலகம் பலமுறை கண்டுள்ளது.  பொருளாதாரத்திலும் படை பலத்திலும் உள்; வெளி பாதுகாப்பிலும் அண்டை நாடுகளுடனான உறவினை மேம்படுத்துவதிலும் உலகளாவிய கொள்கைகளிலும் சீனாவை விட உயர்ந்த இடத்தை பிடிப்பதே அதன் ராக்ஷாச மனோபாவத்தை அடக்குவதற்கான ஒரே வழியாகும்.  இவ்விஷயத்தில் நமது ஆட்சியாளர்கள் முன்னோக்கி செல்வதை நாம் காண்கிறோம்.  ஸ்ரீலங்கா, பங்களாதேஷ், நேபாள், மற்றும் மியான்மார் ஆகிய நாடுகள் நமது அண்டை நாடுகளாகவும் நட்பு நாடுகளாகம் உள்ளன.  அவை நீண்ட நெடுங்காலமாக நமது இயல்பினை ஒத்ததாக உள்ளன.  இவற்றோடு நமது நட்பினை உறுதிப்படுத்துவதில் விரைந்து செயல்பட வேண்டும்.  இவ்விஷயத்தில் முட்டுக்கட்டையாக இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் மற்றும் சச்சரவுகளை விரைவில் சரி செய்துவிட வேண்டும்.

நாம் எல்லோருடனும் நட்புறவையே விரும்புகிறோம்.  அதுவே நமது இயல்பாகும்.  இந்த நமது நல்லெண்ணத்தை பலவீனமாகக் கருதி நம்மை ஆட்டுவிக்கவும் அடிபணியவைக்கவும் செய்யும் முயற்சிகள் பலிக்காது.  துஷ்டர்களுக்கு இப்பொழுதாவது இது புரிய வேண்டும்.  ராணுவ வீரர்களின் உறுதியான தேசபக்தியும் தலைவணங்காத வீரமும் நமது ஆட்சியாளர்களின் நேர்மையான அணுகுமுறையும் நாட்டு மக்களின் நீதி நேர்மையையும் சீனாவிற்கு முதல்முறையாக தெளிவான செய்தியை கொடுத்துள்ளது.  இதனை சீனா கவனத்தில் கொள்ள வேண்டும்.  அதன் அணுகுமுறையில் மாற்றம் தேவை.  இது நடக்காவிடில் நம் நாட்டு மக்களின் உறுதிப்பாட்டிலும் விழிப்புணர்விலும் தயார் நிலையிலும் எவ்வித குறைபாடும் இருக்காது என்பது தெளிவாக தெரிகிறது.

நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்கு நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு வெளிநாடுகளில் இருந்து ஏற்படும் அச்சுறுத்தல் மட்டுமே காரணமல்ல.  சமுதாயத்தின் விழிப்புநிலை, முழுமையான புரிதல், சமத்துவம் ஆகியவையும் அரசு மற்றும் தேசிய தலைமையின் முழுமையான முன் தயாரிப்பும் மிக அவசியம் என்பதனை கடந்த ஆண்டு முழுவதும் நாட்டில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை உற்று நோக்கும் போது நாம் அறிந்து கொள்கிறோம்.  அதிகாரத்தை இழந்தவர்கள் மீண்டும் அதனை கைப்பற்றுவதற்கு முயற்சிப்பது ஜனநாயகத்தில் சாதாரணமான விஷயம்.  ஆரோக்கியமான போட்டி ஏற்றுக் கொள்ளக்கூடியதே.  எதிரிகளுக்கிடையேயான போராட்டமாக இது மாறிவிடக்கூடாது.  வெறுப்புணர்வு மற்றும் பிளவு ஏற்படுத்துதல், மோசமான செயல்களை ஊக்குவித்தல் ஆகியவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.  பாரதத்தை துண்டாட நினைப்பவர்களும் பலவீனப்படுத்த நினைப்பவர்களும் இதனால் லாபமடைகின்றனர்.  வேற்றுமைகளை பிளவுகளாகக் காட்டியும் ஏற்றத்தாழ்வுகளை பெரிதுபடுத்தி காட்டியும் மக்களுக்குள் சண்டையை ஏற்படுத்தியும் பிளவுபடுத்தும் பிரிவினைவாத சக்திகள் உலகம் முழுவதும் இருக்கின்றன.  அவற்றின் தலையீடு பாரதத்திலும் உள்ளது.  அவர்களுக்கு வாய்ப்பளிக்கக்கூடிய எந்த விஷயத்தையும் நாம் உருவாக்கி விடக் கூடாது என்ற விஷயத்தில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.  சமுதாயத்தில் எந்தவிதமான குற்றச் செயல்களோ கொடுமைகளோ நிகழக்கூடாது.  குற்றவாளிகள் மீதுமிகுந்த கட்டுப்பாடு அவசியம்.  குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.  அரசு மற்றும் ஆட்சியாளர்கள் பொது மக்களின் ஒத்துழைப்போடு இதனை செயல்படுத்த வேண்டும்.  அரசாங்கத்திற்கு ஆதரவான அல்லது எதிரான கருத்துக்களை தெரிவிக்கும் போது நமது செயல்பாடுகள் தேசிய ஒருமைப்பாட்டினை பேணி காப்பதாக அமைய வேண்டும்.  சமுதாயத்தில் உள்ள பல்வேறு இன, ஜாதி, மொழி, மத, மாநில வித்தியாசங்களைப் பற்றி கருத்துக்கள் கூறும்பொழுது அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கும் விதமாகவும் சட்டத்திற்கு உட்பட்டதாகவும் இருப்பதில் கவனம் கொடுக்க வேண்டும்.  நமது நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படக் கூடியவர்கள் நமது ஜனநாயகம், சட்ட திட்டங்கள், மத அடிப்படை உரிமைகள், இவைகளை வேறுபடுத்தி காட்டுபவர்களாகவும் மக்களை குழப்பு பவர்களாகவும் ஆகியுள்ளார்கள்.  நமது நாட்டின் பாராளுமன்றத்தில் 1949 நவம்பர் 25 அன்று பேசிய மரியாதைக்குரிய டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் இந்த விஷயத்தைக் குறிப்பிடும்போது அராஜகத்தின் இலக்கணம் (grammar of anarchy) என்று பதிவு செய்துள்ளார்.  இப்படிப்பட்ட பிரிவினைவாதிகளின் சதித் திட்டங்களை முறியடிக்கவும் அவர்களிடமிருந்து விலகியிருக்கவும் சமுதாயத்திற்குக் கற்பிக்க வேண்டும்.

சங்கம் உபயோகப்படுத்தக்கூடிய சில வார்த்தைகளை எந்தக் கண்ணோட்டத்தோடு உபயோகப்படுத்துகிறோம் என்ற விஷயத்தை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.  இந்த வார்த்தைகளை வைத்தே சங்கத்தின் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்தி விடக்கூடாது.  ஹிந்துத்துவம் என்பது அப்படி ஒரு வார்த்தை.  இதன் பொருளை வழிபாட்டு முறையோடு சம்பந்தப்படுத்தி குறுகிய கண்ணோட்டத்தில் வைத்திருக்கிறார்கள்.  அப்படிப்பட்ட குறுகிய கண்ணோட்டத்தோடு சங்கம் அந்த வார்த்தையை உபயோகப்படுத்தவில்லை.  பன்னெடுங்காலமாகத் தொடர்ந்து வரக்கூடிய ஆன்மீக அடிப்படையிலான நமது பாரம்பரியத்தையும் பாரதத்தின் மிகப் பெரிய செல்வமாகிய வாழ்க்கை மூல்யங்களையும் அடிப்படையாகக் கொண்டு நமது தேசத்தை அடையாளப்படுத்த கூடிய ஒரு வார்த்தையாகும்.  மிக நீண்டகாலமாக தங்களது வாழ்க்கையில் உயர்ந்த பண்புகளைக் கடைப்பிடித்ததோடு அதனை வெற்றிகரமாக இந்த ஆன்மீக நிலப்பரப்பு முழுவதும் பரப்பிவந்த நமது பெருமைமிகு முன்னோர்களை நினைவு கூறக்கூடிய பாரதத்தின் குழந்தைகளாகிய 130 கோடி மக்களையும் இணைக்கக்கூடிய இணைப்புச் சொல் தான் அது என்று சங்கம் நம்புகிறது.   இந்த வார்த்தையின் சரியான அர்த்தத்தினை நாம் சரியாகப் புரிந்துகொள்ள மறந்ததனால் நமது தேசத்தையும் சமுதாயத்தையும் இணைக்கக்கூடிய நூலிழையினைப் பலவீனப் படுத்துகிறோம்.  பிரிவினைவாதிகளும் சமுதாயத்திலும் தேசத்திலும் தொடர்ந்து சண்டையை ஏற்படுத்த நினைப்பவர்களும் ஒற்றுமையை ஏற்படுத்தக் கூடிய இந்த வார்த்தையையே தங்களது விமர்சனத்திற்கும் திரிபுகளுக்குமான முதல் வார்த்தையாகப் பயன்படுத்துகிறார்கள்.  உண்மையிலேயே நம் வாழ்வியல் நடைமுறையில் இருக்கக்கூடியதும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டும் மதித்துப் போற்றப்பட்டதுமான சில வித்தியாசங்களை வேறுபாடுகளாகத் திரித்துக் கூறுவதற்கும் பிரிவினையை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.  ஹிந்து என்ற வார்த்தை ஒரு பிரிவினருக்கானதோ வழிபாட்டு முறையினருக்கானதோ அல்ல; ஒரு மாநிலத்திற்காக உருவாக்கப்பட்ட வார்த்தையல்ல; ஒரு ஜாதியினரைக் குறிப்பிடுவதற்காக ஏற்பட்டதல்ல; ஒரு மொழியால் கொடுக்கப்பட்ட பரிசும் அல்ல; இந்த அனைத்து விசேஷமான அடையாளங்களையும் பெருமையோடு பாதுகாத்து, மதிப்பளித்து ஏற்றுக்கொண்ட, பக்தியையும் கலாச்சாரத்தையும் போதித்து உயர்ந்த நாகரிகத்தோடு சேர்த்திணைத்துப் பிணைத்து வைக்கக் கூடிய வார்த்தையாகும்.  இந்த வார்த்தையினை ஏற்றுக் கொள்வதில் மாற்றுக்கருத்து உடையவர்களும் இருக்கலாம்.  இதே அர்த்தத்தில் அவர்கள் வேறு வார்த்தைகளை உபயோகப் படுத்துவதில் நமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.  தேசத்தின் ஒற்றுமையையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு விரிவான கண்ணோட்டத்தில் விரும்பி ஏற்றுக்கொண்டு சங்கம் இந்த வார்த்தையை பயன் படுத்துகிறது.  ஹிந்துஸ்தானம் ஹிந்து ராஷ்ட்ரம் என்று சங்கம் கூறும்போது அதற்குப் பின்புலமாக எந்த அரசியல் காரணங்களோ ஆட்சி அதிகாரக் கண்ணோட்டமோ கிடையாது.  ஹிந்துத்துவம் என்ற வார்த்தை நமது தேசத்தின் இயல்பினை எடுத்தியம்புவதாகும்.  நம் தேசத்தின் அனைவரது தனிப்பட்ட, குடும்ப, தொழில்ரீதியான, சமுதாய வாழ்வோடு பின்னிப்பிணைந்திருக்கக்கூடிய அனைத்து பழக்கவழக்கங்களும் ஹிந்து தத்துவங்களால் ஆட்கொள்ளப்பட்டிருப்பதால் நமது தேசத்தின்தனித்தன்மை ஹிந்து என்று நாம் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளோம்.  இந்த வார்த்தையினைப் பயன்படுத்துவதால் எந்த ஒருவருக்கும் தனது தனிப்பட்ட வழிபாட்டுமுறை, மொழி ஆகிய தனித்தன்மைகளை விட்டு விட வேண்டிய அவசியமில்லை.  தன்னுடையவையே உயர்ந்தவை என்று நிலைநாட்டக் கூடிய எண்ணத்தை கை விட்டாலே போதுமானது.  பிரிவினை எண்ணங்களை நமது மனதிலிருந்து அகற்றி விட வேண்டும்.  புரட்சிகர எண்ணங்களை விதைத்து பிரிவினையை ஏற்படுத்தக்கூடிய மற்றும் நமது தனித்தன்மையை நிலைநாட்டும் கற்பனையை வளர்க்கக்கூடிய சுயநல வாதிகள் மற்றும் வெறுப்பில்னைத் தூண்டிவிடக்கூடியவர்களிடமிருந்து விலகி இருப்பதில் ஒவ்வொருவரும் கவனம் கொடுக்க வேண்டும்.

நமது தேசத்தின் சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்களிடையே பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அவர்களை தூண்டிவிட்டு இந்த தேசத்தில் தொன்றுதொட்டு நிலவி வருகின்ற வேற்றுமையில் ஒற்றுமை என்ற சிறப்பான விஷயத்தினை குறைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.  பாரதம் சிதறுண்டு போகும் என்ற கோஷத்தை எழுப்பக்கூடியவர்கள் இந்த சதிகார கும்பலோடு இணைந்துள்ளார்கள்.  அவர்களுக்குத் தலைமை ஏற்கவும் செய்கிறார்கள்.  அரசியல் சுயநலம், பிரிவினைவாத எண்ணம், பாரதத்தின் மீது வெறுப்புணர்வு, பாரதத்தின் மேன்மையைக்குறை கூறுவது இப்படிப்பட்ட சிந்தனைகளோடு பாரதத்தின் ஒற்றுமைக்கு எதிராக வேலை செய்து வருகிறார்கள்.  இதனை முழுமையாகப் புரிந்து கொண்டு பொறுமையாக நமது வேலைகளை முன்னெடுத்து செல்ல வேண்டும்.  இவர்களது சூழ்ச்சியில் வீழ்ந்துவிடாமல், சட்டத்திற்கு உட்பட்டு அகிம்சை வழியில் சமுதாயத்தை இணைக்கக்கூடிய ஒரே நோக்கத்தோடு நாம் பணிபுரிய வேண்டும்.  சுய கட்டுப்பாடு, சமமான மனநிலை, மற்றவர்களின் நன்மையை கருத்தில் கொள்வது இவற்றோடு நாம் செயல்படும்போது மட்டுமே இணக்கமான சூழ்நிலை உருவாகும்.  இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நல்ல தீர்வுகள் ஏற்படும்.  இதற்கு மாறாகச் செயல்பட்டால் அவநம்பிக்கையே ஏற்படும்.  நம்பிக்கையற்ற தன்மையோடு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது முட்டாள் தனமானது.  பிரச்சனையின் உண்மையான காரணத்தைப் புரிந்துகொள்ள முடியாது.  எதிர்வினையாற்றுவதும் விரோதத்தை வளர்ப்பதும் பய உணர்வை தூண்டுவதும் கட்டுப்பாடற்ற செயல்கள் பெருகுவதற்குக் காரணமாக அமையும்.  இதனால் விரோதமே வளர்ச்சி அடையும்.

நடைமுறை வாழ்க்கையில் நாம் கட்டுப்பாடு, பொறுமை இவற்றைக் கடைப்பிடித்து நம்பிக்கையோடு நமது பெருமையை நிலை நிறுத்த வேண்டும்.  நமது உண்மையான அடையாளத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.  அரசியல் லாப கண்ணோட்டத்தோடு செயல்படுவதை நிறுத்திவிட வேண்டும்.  பாரதத்தை விட்டு பாரதியர்கள் தனிமைப்பட்டு வாழ முடியாது.  இவ்விதமான முயற்சிகள் எப்பொழுதுமே தோற்றுப்போயுள்ளன.  இதனை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.   சுயநலத்தோடு செயல்படுவது ஒன்றிணைந்த பார்வைக்குக் களங்கம் விளைவிக்கும் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.  பாரதத்தின் உள்ளார்ந்த ஒற்றுமை, வேற்றுமையில் ஒற்றுமை காண்கின்ற சிறப்புத்தன்மை, ஹிந்து பண்பாடு, ஹிந்து பாரம்பரியம், ஹிந்து சமுதாயம், சகிப்புத்தன்மை ஆகியவற்றினை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சங்கத்தில் எல்லாத் தருணங்களிலும் ஹிந்து என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்படுகின்றது.  இருந்தபோதிலும் இருந்தபோதும் இது சம்பந்தப்பட்ட வேறொரு விவாதமும் அவ்வப்போது நடைபெறுகிறது.  உதாரணமாக ஸ்வதேசி என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.  இதிலுள்ள ‘ஸ்வ‘ அதாவது நமது என்பதே ஹிந்துத்துவம் ஆகும்.  இதனையே சுவாமி விவேகானந்தர் அமெரிக்க நாட்டில் உலகையே ஒரு குடும்பமாக பாவித்து மதங்களுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் சகிப்புத்தன்மையைப் பறைசாற்றியுள்ளார்.  இதே கருத்தைத்தான் மகாகவி ரவீந்திரநாத் தாகூர் தன்னுடைய சுதேசி சமுதாயம் என்ற கட்டுரையில் எழுச்சியோடு வெளிப்படுத்தியிருந்தார்.  மகரிஷி அரவிந்தரும் தனது உத்தர பாரா சொற்பொழிவில் இதனையே வலியுறுத்தியிருந்தார்.  1857 க்கு பிறகு நமது நாட்டின் எல்லா நிகழ்வுகளிலும் சமுதாயத்தின் வெவ்வேறு விதமான காரியங்களிலும் பாரதத்தின் இந்த உள்ளுணர்வு வெளிப்பட்டது.  இதனையே நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் முன்னுரையிலும் காணமுடிகிறது.  இதுவே நமது உள்ளுணர்வை வெளிப்படுத்துகிறது.  நாம் பின்பற்றவேண்டியவையும் தவிர்க்கவேண்டியவையும் பற்றிய தெளிவு இருக்கவேண்டும்.  நமது தேசத்தின் ஆழ் மனதில் ஏற்படும் ஆசைகள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் ஆகிய அனைத்தையும் இதே திசையில் பொருள் பொதிந்ததாக ஆக்கவேண்டும்.    நமது ஆளுமையின் திறன் இதற்கு அனுகூலமாக இருக்க வேண்டும்.  இது நடந்தால் மட்டுமே நமது பாரதம் சுய சார்புள்ள நாடாக தகுதி பெறும்.  வெறும் செயல்பாடுகளில் மட்டும் சுதேசி என்று இல்லாமல் உற்பத்தி செய்யும் இடம், தொழிலாளர்கள், உற்பத்தியின் மூலம் கிடைக்கின்ற லாபம், உற்பத்தி செய்கின்ற அதிகாரம் இவை அனைத்தும் நமது நாட்டிலேயே இருக்க வேண்டும்.  சுதேசி என்பதனை சுயசார்பு மற்றும் அகிம்சை என்று வினோபாஜி வர்ணிக்கிறார்.  சுதேசி என்பது பொருள் மற்றும் சேவையோடு மட்டும் நின்று விடுவது அல்ல என்பது டெங்கடிஜி அவர்களின் கருத்து.  தேசிய சுயசார்பு மற்றும் தன்னிறைவு ஆகியவற்றோடு கூட தேவையான பொழுது அயல் நாடுகளின் உதவியையும் பெற்றுக்கொள்வது என்பதே இதன் பொருளாகும்.  பிற்காலத்தில் நாம் நமது சொந்தக்காலில் நிற்கும் நிலை ஏற்படும்.  ஆயினும் தற்போது உள்ள நிலையை அனுசரித்து வெளிநாட்டு வியாபாரிகளிடம் கொடுக்கல் வாங்கல், நாமறியாத தொழில்நுட்பங்களை பெறுதல் ஆகியவை செய்யவேண்டிய அவசியம் ஏற்படும் பொழுதும் அதனை யாரோடு செய்து கொள்ள வேண்டும் என்பதனை நாமே நிர்ணயம் செய்ய வேண்டும்.

சுயசார்பு என்ற விஷயத்தில் நமது சுய விருப்பத்திற்கும் இடமிருக்க வேண்டும்.  நாம் அடைய வேண்டிய இலக்கினையும் சொல்ல வேண்டிய பாதையையும் நாமே முடிவு செய்யவேண்டும்.  உலகம் அனைத்தும் பயணிக்கின்ற பாதையிலேயே நாமும் சென்றாலும் முதல் இடத்தை அடைந்து சிறப்பான வெற்றியை பெற முடியும்.  ஆனால் அதில் நமது தனித்தன்மை இருக்காது.  உதாரணமாக நாம் நமது விவசாய கொள்கைகளை நிர்ணயிக்கும்போது நமது உழவர்கள் தங்களது விதை, உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றினை தயாரிக்கும் உரிமையைப் பெற்றிருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.  தானியக் கிடங்கு, தானியங்களைப் பாதுகாக்கும் வசதி ஆகியவற்றை மிக அருகாமையிலேயே கிடைக்கும்படி செய்ய வேண்டும்.  நமது விவசாய அறிவு ஆழமானதும் அகன்றதும் ஆகும்.  எனவே நமது பாரம்பரியமான விவசாய முறைகளோடு கூட நவீன தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி விவசாயம் செய்யக்கூடிய திறனை நமது விவசாயி பெற்றிருக்கவேண்டும்.  கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் இடைத்தரகர்களின் தூண்டுதலுக்கு அடிபணிந்து விடாமல் தனது விலை பொருளுக்கான விலையை தானே நிர்ணயிக்கும் உரிமை விவசாயிக்கு இருக்க வேண்டும்.  அப்படி இருந்தால் மட்டுமே பாரதிய கண்ணோட்டத்தில் சுதேசி விவசாயம் நடைபெறுவதாகக் கருதப்படும்.  இன்றைய பொருளாதார சூழ்நிலையில் இது உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று கூற முடியாது.  இதனை நடைமுறைப் படுத்துவதற்கான கொள்கைகளை வகுத்து விவசாயி பொருளாதார ரீதியான மேம்பாடு அடைவதற்கான வழிவகை செய்யப்பட வேண்டும்.

பொருளாதாரம், விவசாயம், தொழில், உற்பத்தி மற்றும் கல்வி கொள்கைகளில் நமது சுய தன்மையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  விரிவான கலந்துரையாடல்கள், விவாதங்களின் அடிப்படையில் புதிய தேசிய கல்வி கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது.  அதனை எல்லாக் கல்வி நிறுவனங்களும் வரவேற்கின்றன.  நாமும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளோம்.  உள்ளூர் விஷயங்களுக்காக குரல் கொடுத்தல் (vocal for local) என்பது சுதேசி சிந்தனையின் ஆரம்ப நிலை.  இந்த விஷயங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து முழு வெற்றி கிடைக்கும் வரை தொடர்ந்து கவனம் கொடுக்க வேண்டும்.  அப்பொழுதுதான் சுயம் என்ற தத்துவம் பூர்த்தியடையும்.

போராட்டத்தினால் தான் வளர்ச்சி என்ற விஷயத்திற்கு பாரதிய தத்துவத்தில் இடமில்லை.  தீமையை எதிர்ப்பதில் கடைசி ஆயுதமே போராட்டமாக இருக்கவேண்டும்.  முன்னேற்றமும் வளர்ச்சியும் நம் நாட்டில் சமத்துவத்தின் அடிப்படையிலேயே யோசிக்கப்படுகின்றன.  இதனால் ஒவ்வொரு பகுதியுமே சுதந்திரமானதாகவும் சுயசார்புள்ளதாகவும் ஆகிறது.  நமது உள்ளுணர்வு நாம் ஒரே ராஷ்ட்ர புருஷனின் அங்கங்கள் என்ற ரீதியிலேயே இருக்க வேண்டும்,  இதன் மூலம் எல்லோரும் எல்லா விதத்திலும் பயனடைவர்.  இதற்கான வழிமுறைகளை உருவாக்குகின்ற சமயத்தில் சம்பந்தப்பட்ட குழுக்களையும் சம்பந்தப்பட்ட நபர்களையும் அவர்களது கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.  அப்பொழுதுதான் ஒரு நிறைவான ஒத்துழைப்பை பெற முடியும்.  சேர்ந்து சிந்தித்தல், கருத்துக்களை ஏற்றுக் கொள்ளுதல் ஆகியவற்றின் மூலமாக கிடைக்கின்ற ஒத்துழைப்பு, நம்பிக்கை இதன் மூலம் நமது மக்கள் மற்றும் சமுதாயத்தில் புகழ் மற்றும் வெற்றி கிடைக்கும் என்பது நிச்சயம்.

ஸமானோ மந்த்ர: ஸமிதி: ஸமாநீ  ஸமானம்மந: ஸஹசித்த மேஷாம்। ஸமானம் மந்த்ரமபி மந்த்ரயேவ:

ஸமானே னவோஹவிஷா ஜுஹோமி ॥

(நமது சிந்தையும் செயலும் ஒன்றாக இருக்கட்டும்.  நமது மனது சிறந்த ஞானவான்களின் சிந்தனையை ஒத்ததாக இருக்கட்டும்.  பொதுவான விஷயத்திற்காக நாம் அனைவரும் சேர்ந்து வழிபாடு செய்வோம்)

அதிர்ஷ்டவசமாக எல்லோருடைய மனங்களிலும் மேற்குறிப்பிட்ட விஷயங்கள் குறித்து நல்ல ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகின்ற திறன் இன்றைய ஆட்சியாளர்களிடம் காணக் கிடைக்கிறது.  சமுதாயம் மற்றும் அரசுக்கு இடையேயுள்ள அதிகார வர்க்கம் கருணையோடும் தொலைநோக்குப் பார்வையோடும் செயல்பட வேண்டும்.  அனைவரது ஒப்புதலோடு எடுக்கப்பட்ட முடிவு எந்த வித மாற்றமும் இல்லாமல் அதிலுள்ளபடியே நடைமுறைப்படுத்தும்போது சமத்துவமும் ஒத்துழைப்பும் உருவாகக் கூடிய சூழ்நிலையைக் காணமுடியும். அறிவிக்கப்பட்ட விதிமுறைகளை செயல்படுத்தும்போது கடைநிலை வரை சென்றடைவதற்கான கட்டுப்பாடுகள் எப்போதுமே தேவைப்படுகின்றன.  விதிமுறைகளை ஏற்படுத்துகின்ற பொழுதும் செயல்படுகின்ற பொழுதும் தொலைநோக்குக் கண்ணோட்டம் தேவை.  அப்பொழுதுதான் எதிர்பார்த்த பலனை பெற முடியும்.

கொரோனா காலகட்டத்தில் மேன்மக்களிலிருந்து சிந்தனையாளர்கள் உட்பட பலரும் நமது தேசத்தின் பொருளாதாரம், விவசாயம், உற்பத்தி, சிறு தொழில்கள், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், தொழில்முனைவோரை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இவை சார்ந்த விஷயங்களில் பரவலாக்கம் செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார்கள்.   பல துறைகளைச் சார்ந்த தொழிலாளர்களும் சிறு; குறு விவசாயிகளும் தொழில்முனைவோர்களும் இந்தக் கண்ணோட்டத்தில் தேசத்தை வெற்றிபெறச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.  பெரிய பொருளாதார சக்தி மிகுந்த நாடுகளிடமிருந்து இவர்களை அரசு பாதுகாக்க வேண்டும்.  கொரோனா பிரச்சனை முடிந்து இன்னும் ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர்கள் தங்களது தொழிலில் சொந்தக் கால்களில் நிற்பதற்கு வசதியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி அவர்களுக்கு உரிய காலத்தில் சென்று சேர்வதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.

இந்தப் பின்னணியில் நமது நாட்டில் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.  இந்த பாதை நமது கலாச்சாரத்திற்கும் நமது எதிர்பார்ப்புகளுக்கும் அனுகூலமாக அமைய வேண்டும்.  அனைவருடைய ஒத்துழைப்போடு கூட அனைவரையும் முழுமையாக இந்தப் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.  முடிவு எடுக்கின்ற விஷயங்களை சரியான முறையில் செயல்படுத்திட வேண்டும்.  கடைக்கோடியில் உள்ளவர்களுக்கும் இதனால் லாபமடைய வேண்டும்.  முகவர்கள் மற்றும் இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் லாபம் நேரடியாக மக்களைச் சென்றடைய வேண்டும்.  இல்லையென்றால் மிகப்பெரிய பின் விளைவுகள் ஏற்படும்.  மேற்குறிப்பிட்ட அனைத்து விஷயங்களும் முக்கியமானவையே.  தேச முன்னேற்றத்தின் எல்லா செயல்களிலும் சமுதாயம் முக்கியமான இடத்தை பெற வேண்டும்.  கொரோனா சூழ்நிலையில் உலகில் விழிப்படைந்துள்ள சுயம் என்பதன் முக்கியத்துவம், தேசியம், பண்பாட்டு மூல்யங்களின் மகத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் போன்றவற்றில் உள்ள ஈடுபாடு கொரோனா நிலைமை சீரான பிறகும் மங்கிப் போகாமல் இருக்க செய்ய வேண்டும்.  இந்தப் பணியில் நிரந்தரமாக நடைபெறும்போது தேசத்தின் முன்னேற்றம் சாத்தியமாகும்.  நமது பழக்க வழக்கங்களில் தேவையான மாறுதல்களை நெறிப்படுத்துவதோடு கூட அதன் அவசியத்தை வலியுறுத்தி அப்படிப்பட்ட நல்ல பழக்கவழக்கங்களை தொடர்ந்து கடைப்பிடித்து முன்னேற வேண்டும்.  ஒவ்வொரு குடும்பமும் இதை செயல்படுத்த கூடிய கேந்திரமாக ஆக முடியும்.  வாரம் ஒருமுறை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஈடுபாட்டோடு பஜனை செய்ய வேண்டும்.  வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவினை ஆனந்தமாக உண்டு மகிழ்ந்த பிறகு 2-3 மணி நேரம் சகஜமாகக் கலந்துரையாட வேண்டும்.  அதில் இவ்விஷயங்களை தொடர்ந்து கடைப்பிடிக்க உறுதி ஏற்றுக்கொண்டு வரும் வாரத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கடைபிடிக்க செய்ய வேண்டும்.  அவசியம் விவாதம் தேவை.  விவாதத்திற்குரிய பொருள் பழையதாகவோ புதியதாகவோ இருக்கலாம்.  அதனால் கிடைக்கின்ற லாபத்தினை அடிப்படையாகக்கொண்டு சிந்திக்க வேண்டும்.  ஒவ்வொரு விஷயத்தையும் சோதித்துப் பார்த்து அதன் முக்கியத்துவம் மற்றும் அவசியம் குறித்து முடிவெடுக்க வேண்டும்.

ஸந்தஹ பரீக்ஷ்யான்யதரத் பஜந்தே மூடஹ பரப்ரத்யயநேய புத்திஹி

குடும்பத்தில் நடத்தப்படுகின்ற இயல்பான விவாதங்களில் விவாதப் பொருளின் எல்லாவிதமான கண்ணோட்டங்களையும் அறிய முடியும்.  நன்மை தீமைகளைச் சீர்தூக்கிப் பார்த்து அவற்றை ஏற்பது அல்லது தவிர்ப்பது என்பது குறித்து முடிவெடுக்க முடியும்.  சுய விருப்பத்துடன் ஏற்றுக் கொள்ளப்படுவதால் நிரந்தர நன்மை பயப்பதாக ஆகும்.

ஆரம்பத்தில் நமது வீட்டின் பராமரிப்பு, அழகுபடுத்துதல், குடும்ப கௌரவத்தை மேம்படுத்துதல், நீண்டகால பழக்கவழக்கங்கள், குடும்ப பாரம்பரியம் போன்றவை குறித்து விவாதிக்கலாம்.  சுற்றுச்சூழல் குறித்து அனைவரும் அறிந்திருக்கும் பட்சத்தில் நமது வீட்டில் தண்ணீர் சிக்கனம், பிளாஸ்டிக் உபயோகத்தை முற்றிலுமாகத் தவிர்ப்பது, மாடித்தோட்டம், பூக்கள்; காய்கறிகள் பயிரிடுதல், மரம் வளர்த்தல் போன்ற விஷயங்களைப் பற்றி விவாதிக்கும்போது உத்வேகம் பிறக்கும்.  நாம் அனைவருமே நமது சொந்த தேவைக்கும் குடும்பத்திற்காகவும் பணம் மற்றும் நேரத்தை தினசரி செலவழித்து ஏதாவது உபயோகமான காரியங்களைச் செய்கிறோம்.  தினசரி சமுதாயத்திற்காக பணம் மற்றும் நேரம் செலவழிப்பது குறித்தும் சர்ச்சை செய்து நடைமுறைப்படுத்தலாம்.  சமுதாயத்தின் மற்ற தரப்பினரோடு நமது உறவினை எப்படி வைத்திருக்கின்றோம்?  இயல்பாக அவர்கள் நமது வீட்டிற்கு வந்து போவது; உணவு அருந்துவது போன்ற விஷயங்களை அனுமதிக்கிறோ? இது சமுதாய சமத்துவ நோக்கில் சுய சிந்தனை செய்யக்கூடிய குடும்பங்களில் சாத்தியமானது.  சமுதாயத்தில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகள் மற்றும் முயற்சிகளில் நமது குடும்பத்தின் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு குறித்தும் சிந்திக்கலாம்.  கண்தானம், இரத்ததானம் போன்ற நேரடியான தொண்டுப் பணிகளில் நமது குடும்பத்தின் பங்களிப்பு மற்றும் சமுதாயத்தின் மனநிலையை தயார் செய்வது ஆகிய பணிகளில் ஈடுபடுவது குறித்து யோசிக்கலாம்.

இவ்விதம் சிறிய சிறிய நிகழ்ச்சிகளின் மூலம் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்லெண்ணம், தூய்மை, கட்டுப்பாடு போன்ற அடிப்படையான குணங்களை வளர்த்துக் கொள்ள முடியும்.  அதன் மூலம் நமது சமுதாய வாழ்வும் கட்டுப்பாடு மிகுந்ததாகவும் பரஸ்பரம் திருத்தி கொள்ளத்தக்கதாகவும் ஆகிறது.  விழிப்புணர்வுகள் ஏற்படுத்துவதன் மூலம் சமுதாயத்தின் சாமானியர்களின் மனமானது தனது உள்ளார்ந்த ஒற்றுமையின் ஆதாரமாக இருக்கக்கூடிய இந்துத்துவத்தை நிலைநிறுத்த முடியும்.  சாதாரண மனிதனின் உள்ளுணர்வின் சக்தியினை பலப்படுத்த, மற்றும் இந்துத்துவதோடு கூடிய அவரது உள்ளார்ந்த உணர்வை பலப்படுத்த, நமது தேசத்தின் அமைப்பு முறையையும் ஒருவருக்கு ஒருவர் சார்ந்து வாழும் தன்மையைப் பற்றிய ஆழ்ந்த புரிதலுடன் ஒவ்வொரு தனிமனிதனின் வளர்ச்சி குறித்த முயற்சியை ஊக்கப்படுத்துவதும், மிகுந்த நம்பிக்கையோடும் ஒன்றுபட்ட சக்தியோடும் கூட நம் கனவுகளை நனவாக்குவதும் நமது மூல்யங்களை மையமாக வைத்த வளர்ச்சி இலக்குகளை நிர்ணயித்துக் கொள்வதும் ஆகிய விஷயங்களை செய்யும்போது வெகுவிரைவிலேயே உலகிற்கு ஒளி வழங்கக்கூடிய நாடாக பாரதம் உருவெடுக்கும் என்பதோடு அமைதியான முன்னேற்றத்தையும் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் உலகிற்கு வழங்கக்கூடிய ஒரு நாடாக பாரதம் தலைமை வகிக்கக் கூடியதையும் நாம் காணமுடியும்.

தனி மனிதன் மற்றும் குடும்பங்களின் நன்னடத்தையினால் நட்புணர்வும் நீதி, நேர்மை போன்ற நல்ல குணங்களும் தேசம் முழுவதும் பிரதிபலிக்கும். இதனை நேரடியாக சமுதாயத்தில் நடைமுறைப்படுத்துவதற்காக  1925 ஆம் ஆண்டு முதல் காரியகர்த்தர்களின்  குழுவினை உருவாக்கி ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் நாடு முழுவதும் இப்பணியினை செய்து வருகிறது.  இவ்விதம் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட நிலைதான் ஆரோக்கியமான சமுதாயத்தின் நிலையாகும்.  நூற்றாண்டு காலங்களாக ஆக்கிரமிக்கப்பட்டு இருளிலிருந்த இந்த தேசத்தை விடுதலை என்ற புத்தெழுச்சியைச் பெறச் செய்ததற்கு இத்தகைய ஒன்றுபட்ட சக்தியே காரணம்.  இதனை நிலைநிறுத்துவதற்கு நம்முடைய மஹாபுருஷர்கள் மிகுந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.  சுதந்திரத்திற்குப் பிறகு இந்த உயர்ந்த லட்சியத்தை மனதில் இருத்தி காலத்திற்குத் தகுந்தாற்போல நெறிப்படுத்தி உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டமானது நமக்குக் கிடைத்துள்ளது.  அதனை வெற்றிபெறச் செய்வதற்கும் சமுதாயத்தில் தெளிவான சிந்தனையோடும், பரஸ்பர புரிதலோடும் ஒற்றுமை உணர்வோடும் தேச நன்மையையே எல்லாவற்றிலும் மேலானதாக ஏற்றுக்கொள்ளச்செய்ய சங்க காரியத்தினாலேயே முடியும்.  இப்புனிதப் பணியில் உண்மையோடும் சுயநலமற்ற உள்ளத்தோடும் உடல்; மனம்; பொருளாலும் தேசம் முழுவதிலும் கொள்கைப் பிடிப்புடைய ஸ்வயம்சேவகர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.  தாங்களும் கூட இந்த காரியத்தில் ஒத்துழைத்து செயல்வீரர்கள் ஆகி தேசத்தின் பயணத்தில் உங்களை இணைத்துக்கொள்ள அறைகூவல் விடுத்து எனது உரையை நிறைவு செய்கிறேன்.

ப்ரஷ்ன பஹுத்ஸே உத்தர் ஏக் கதம் மிலாகர் படே அனேக்।

வைபவ் கே உத்துங்க ஷிகர்பர் ஸபீ திஷாஸே படே அனேக்॥

கேள்விகள் பல பதில் ஒன்றுதான்; ஒன்று சேர்ந்து பயணிப்போம். மகோன்னதமான சிகரத்தை அடைவதற்கு எல்லா திசைகளிலிருந்தும் பலர் முன்னேறி வருகிறார்கள்.

॥பாரத் மாதா கி ஜெய்॥