மெலிந்த தேகம், சற்றே சுருக்கம் விழுந்த தோல், நிறைந்த அனுபவம், தேவையான நிதானம் இவைகள் எல்லாம் சற்றே நம்பவைத்தாலும், அவரின் செயல்வேகம், நவீனத்தையும் ஏற்கும் நயம், ஏற்றுக்கொண்ட விஷயத்தில் விடாப்பிடியாக இறுதிவரை போராடும் குணம் இவைகளால் நிச்சயமாக 97 வயதை தாண்டி 98 வயதில் அடியெடுத்து வைத்தவர் என்பதை நம் மனம் ஏற்க மறுக்கவே செய்யும் – இதுதான் ‘ஏழையார்’ – என்று பலராலும் அழைக்கப்பட்ட (ஜனவரி 18 அன்று அமரரான) ஏழை. அ. முனுசுவாமி, வேலூர் ஜில்லா ஆர்.எஸ்.எஸ். தலைவர்.
கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளாகவே அவரின் வயதை மனதில் கொண்டு, அவரை எந்த நிகழ்ச்சிக்கும் வரவேண்டும் என்று கட்டாயப்படுத்த வேண்டாம்” – என அதிகாரிகளும், உள்ளூர் சங்க கார்யகர்த்தர்களும் முடிவெடுத்த போதும், அவர்களால் ஏழையாரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆம், அவர் கலந்து கொள்ள வேண்டிய ஆலோசனைக் கூட்டம், நிகழ்ச்சிகள் மட்டுமின்றி ஹிந்து சமுதாய பாதுகாப்பிற்காக, உரிமைக்காக இதுவரை நடந்த நிகழ்ச்சிகள் சமீபத்திய உண்ணாவிரதம் (நவ 22) வரை அனைத்து ஆர்ப்பாட்டம், போராட்டங்களிலும் பங்கெடுத்து வழிநடத்தியவர் ஸ்ரீ ஏழையார்.
வேலூரில் 25 ஆண்டுகளுக்கு முன்பு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அடித்தளம் போட்டவர். ஆரம்ப ஆண்டுகளில் மசூதியைக் காரணம் காட்டி குறிப்பிட்ட ஒரு பாதையில் ஊர்வலம் செல்லக் கூடாது என காவல்துறை நிர்பந்தப்படுத்தியபோது, சற்றும் உரிமையை விட்டுக் கொடுக்காமல், நடுரோட்டில் படுத்து போராடி அந்தப் பாதையிலேயே செல்ல அனுமதி பெற்றுத் தந்தவர். இன்றும் அதே பாதையில் ஊர்வலம் கம்பீரமாக சென்று கொண்டிருக்கிறது.
ஜலகண்டேஸ்வரர் கோயிலின் மூல விக்ரகம், முஸ்லிம் ஆக்ரமிப்பு காரணமாக 400 ஆண்டுகளுக்கு முன் கோட்டை கோயிலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டதை அறிந்த ஏழையார், இந்து முன்னணி வழிகாட்டுதலுடன் செயல்பட்டு மக்களைத் திரட்டி மீண்டும் பிரதிஷ்டை செய்த பணியில் அளவற்ற உழைப்பை நல்கியவர்.
* ஒரு ஸ்வயம்சேவக் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக, முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர்.
* தனிப்பட்ட வாழ்க்கையில் தூய்மை, நேர்மை, ஒழுக்கத்தைக் கடைபிடித்தவர்.
* இல்லற வாழ்வில் நல்ல கணவனாக, தந்தையாக, தாத்தாவாக… அனைவருக்குமான அவரது பங்கை குறைவற நிறைவேற்றி குடும்பத்தின் கௌரவத்தை வளர்த்து மற்ற குடும்பங்களுக்கு முன்னுதாரணமாக நடந்தவர்.
* சமுதாய, தேசியப்பணியில் செய்ய வேண்டிய கடமைகளை தனது இறுதி மூச்சுவரை இடைவிடாது செய்தவர்.
ஞாயிற்றுக்கிழமை காலை ஆர்.எஸ்.எஸ். வாரக் கூடுதலில் (சாங்கிக்) ஏழையார் இல்லை என்றால், அவர் அன்று வேலூரிலேயே இல்லை என்றுதான் அர்த்தம். ஊரிலிருந்தால் சாங்கிக்கில் இருப்பார். சாங்கிக்கிற்கு கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் வராமலே (அல்லது) தாமதமாகவோ வரும் ஸ்வயம்சேவகர்கள் பலர் ‘குளிர் ஜி’ என்று காரணம் கூறும்போது, தலையிலே மப்ளர் சுற்றிக்கொண்டு காக்கி நிக்கருடன் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே வந்து சங்கஸ்தானில் இருந்த ஏழையார் நினைவு எப்படி நமக்கு வராமல் போகும்?
ஜந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்பார்கள். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு ஒரு கருத்தை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப தன் வாழ்க்கைப் பாதையில், சுபாவத்தில் மாற்றம் கொண்டு வருவது என்பது சற்று அபூர்வமான, கடினமான விஷயம். ஆனால் 60 வயதைக் கடந்தபின் தொடர்புக்கு வந்து சங்கத்திற்கு அறிமுகமாகி சங்க வழிமுறைகளை முழுமையாக, துளியும் மீறாமல் கடைபிடித்து வாழ்ந்தவர் ஏழையார். அதைப்பார்த்து ஆச்சரியப்பட்டு அவரிடம் நெருங்கிப் பழகிய பிறகுதான் ஒரு விஷயம் புரிந்தது. அவர் இயல்பாகவே சங்கம் எதிர்பார்க்கும் தொண்டர் போலவே வாழ்ந்து வந்துள்ளார். சிறுவயதிலிருந்து எனவே, சங்கக் கட்டுப்பாடு, சங்க முறை எல்லாம் அவருக்கு சகஜமான ஒன்றாகவே இருந்தது. அவர் ஒரு பிறவி ஸ்வயம்சேவக.
அவர் வீட்டில் பலர் சங்க, சமிதி முகாம்கள் முடித்தவர்கள். அவரது இரண்டு மகன்கள் பொறுப்பிலும் உள்ளனர்.
இளம் ஸ்வயம்சேவகர்களைப் பார்த்து ஸ்ரீ ஏழையார் அவர்கள் சிறிய வயதில் தனக்கு சங்கம் அறிமுகமாகாததைக் குறிப்பிட்டு, உங்களையெல்லாம் பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது” என்பார். ஆனால், தவறாமல் சாங்கிக் வந்ததாக்டும் சங்கத்திற்கு நாம்தான் நேரம், உழைப்பு கொடுக்க வேண்டுமே தவிர நாம் எதுவும் எதிர்பார்க்கக் கூடாது என்ற உறுதியிலாகட்டும் இறுதி மூச்சுவரை இடைவிடாது உழைத்ததிலாகட்டும் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் வாழ்ந்து சென்றவர் ஏழையார். அகவை 98 வரை செய்த சமுதாயப்பணிகளில் முத்தாய்ப்பாக தம் விழிகளைத் தானம் செய்தும் நமக்கு வழிகாட்டியிருக்கிறார் அவர்.