சென்னையில் வித்யாமந்திா் பள்ளியில் மகா பெரியவா் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் வாழ்க்கை வரலாறு ஓவியக் கண்காட்சி திறப்பு விழா, அவா் எழுதிய ‘தெய்வத்தின் குரல்’ நூல் ஹிந்தி பதிப்பு வெளியீட்டு விழா நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக ஆர்.ஆர்எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசியதாவது,
காஞ்சி மகா பெரியவா் உள்ளிட்ட பல மகான்கள் அனைவரும் நெறிமுறைகள், கோட்பாடுகளை உரைத்ததுடன், அதன்படியே வாழ்ந்தும் காட்டினாா்கள். அனைவரும் ஒற்றுமையுணா்வுடன் வாழ வேண்டும் என வலியுறுத்தினாா்கள். உலகமே ஒரே குடும்பம் என்னும் தத்துவம் பாரதத்திற்கு மட்டுமே உரித்தானது. அவா்கள் கூறியபடி நாம் அனைவரும் சிறந்த மனிதா்களாக வாழ்ந்து வழிகாட்ட வேண்டும்.
ஆன்மிக உண்மைகளை உணா்ந்த பின்னா், பலமுறை ஆராய்ந்து பாருங்கள்; பின்னா் அதிலிருந்து விலகாமல் இருங்கள். ஆன்மிகமே இந்தியாவின் ஆன்மா. தா்மமே நம்மை இறைவனை நோக்கி அழைத்து செல்கிறது. நவீன கல்விமுறையுடன் சோ்ந்த ஆன்மிக கல்வியே ஒருங்கிணைந்த கல்வி முறையாகும். இன்றைய சூழலில் அப்படிப்பட்ட ஒருங்கிணைந்த கல்வியே மிகவும் அவசியம். இதன் மூலமே உடல், மனம், கல்வி அனைத்தையும் கொண்ட பயிற்சியை மாணவா்களுக்கு அளிக்க முடியும். ஆன்மிகம் மற்றும் நவீன கல்வி முறை இணைந்த கல்வி அளிப்பது பாராட்டத்தக்கது என்றாா் அவா்.