பாரதத்தின் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்த பிரிட்டிஷ் காலத்தைச் சேர்ந்த சில ஆங்கிலேயர்கள் தொடர்பான ஓவியங்கள் உள்ளிட்ட சில வரலாற்றுச் சின்னங்கள் நீக்கப்பட்டுள்ளன. இது காலனித்துவ அடையாளங்களை நீக்கும் முன்முயற்சி. தாய்நாட்டின் சேவையில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த ராணுவ வீரர்களைக் கெளரவப்படுத்தும் விதமாக, பரம்வீர் தீர்கா என்ற கலைக்கூடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ராஷ்ட்ரபதி பவனில் திறந்து வைத்தார். இது நமது சுயத்தை முதன்மைப் படுத்தும் நடவடிக்கை.
உங்கள் வீட்டில் உள்ள தினசரி காலண்டரை எடுத்து பின்பக்கம் திருப்பிப் பாருங்கள். அதில் கிறிஸ்தவ பண்டிகைகள் என்ற தலைப்பில் முதலாவதாக ஜனவரி 1 ஆங்கில வருடப் பிறப்பு என்று குறிப்பிட்டிருக்கும். இது நமது புத்தாண்டா?
ஜனவரி 1ம்தேதி, பல வீடுகளில் வாசல் கோலத்தில் “Wish You a Happy New Year” என்று எழுதி வைக்கிறார்கள். அன்று நண்பர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போதும் “விஷ் யு எ ஹேப்பி நியூ இயர்’ என்கிறார்கள். அலைபேசி மூலம், வாட்ஸ் அப், பேஃஸ்புக், டுவிட்டர் மூலம் வாழ்த்து செய்திகள் பரவுகின்றன.
ஜனவரி 1ம்தேதிக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை, சித்திரை 1ம் தேதி தமிழ் வருடப் பிறப்புக்கு கொடுப்பதில்லை. இதெல்லாம் நம் மனதில் அடிமைத்தனத்தின் சாயல் எஞ்சியிருப்பதன் அடையாளமே. சிந்திக்கிற ஆற்றல் கொண்டுள்ள ஹிந்துக்கள், ஜனவரி முதல் தேதியை புதுவருடப் பிறப்பாக கொள்ள வேண்டியதில்லை.
ஜனவரி முதல் தேதியன்று ஹிந்துக் கோயில்களில் கூட்டம் அலை மோதுகிறது. சமீப காலங்களில் பல ஊர்களில் கோயில்களில் நள்ளிரவு 12 மணிக்கு பூஜையும், புத்தாண்டு சிறப்பு வழிபாடும் நடத்துகிறார்கள்.
நள்ளிரவு 12 மணிக்கு புது வருடம் பிறக்கிறது என்பது அபத்தத்திலும் அபத்தம். நமக்கு ஒருநாள் துவக்கம் என்பது சூரிய உதயமாகும் அதிகாலை நேரம்தான். ஆங்கிலேயருக்குத்தான் நாள் துவக்கம் இரவு 12 மணி. இரவு 12 மணிக்கு கோயில்களைத் திறந்து வைத்து பூஜை செய்வது சாஸ்திர விரோதமானது.
ஜனவரி 1ம் தேதி நமக்குப் புத்தாண்டு இல்லை. இது கிறிஸ்தவர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும்தான் புத்தாண்டு. நமக்குப் புத்தாண்டு என்பது சித்திரை முதல் தேதிதான். இதைச் சொன்னவுடன் நம்மில் சிலர், ”நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்துவது இங்கிலீஷ் காலண்டரைத்தானே! எனவே ஜனவரி முதல் தேதியைக் கொண்டாடுவதில் என்ன தவறு?” என்று கேட்கிறார்கள்.
நமது நாட்டில் 200 வருடம் ஆங்கிலேய ஆட்சி இருந்ததன் காரணமாக, ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டாக கொண்டாடும் பழக்கம் உருவாகியது. ஆனால் ஆங்கிலேயர்கள் போன பிறகும் கூட, இது தொடர்கிறது. ஆங்கிலேயர்கள் அவர்களது நம்பிக்கையின்படி, ஞாயிற்றுக்கிழமை அன்று கடவுள் ஓய்வெடுக்கிறார் என்ற காரணத்தால், அதனை விடுமுறை என்று அறிவித்தனர். கடவுளுக்கு ஓய்வு நாள் எனும் நம்பிக்கை நமக்கு கிடையாது. முஸ்லிம் நாடுகளில் வெள்ளிக்கிழமை விடுமுறை.
கடந்த பல ஆண்டுகளாக புத்தாண்டை வரவேற்கிறோம் என்ற பெயரில் நடக்கிற கூத்துக்களும், கும்மாளங்களும் சொல்லி மாளாது. இளைஞர்களும், இளம் பெண்களும் நள்ளிரவு 12 மணிக்கு குடித்து விட்டு ஆடுவதும், பாடுவதும் என கூத்தடிக்கிறார்கள். சென்னை போன்ற நகரங்களில், இரவு 12 மணிக்கு இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் 3 பேர்களாக உட்கார்ந்து கொண்டு, அதிவேகமாக வண்டிகளை ஓட்டுவதும், வழியில் செல்கிற பெண்களை கேலி செய்வதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நமது பண்பாட்டுப் பாரம்பரிய மரபுகளுக்கு விரோதமாக அன்று பல நட்சத்திர ஓட்டல்களில் நள்ளிரவில் ஒரு ஜோடிக்கு ரூ.5,000, ரூ.10,000 என வசூலித்து ஆபாச நடனங்களும், கூத்துகளும் நடைபெற்று வருகின்றன.
சில விஷயங்களைக் கேட்டாலே மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இதை எல்லாம் இனி மாற்ற முடியுமா? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. முதலில் நம்மிடமிருந்து துவங்குவோம். சித்திரை முதல் தேதிதான் நமக்கு புத்தாண்டு. சிந்திக்கிற ஆற்றல் கொண்டுள்ள ஹிந்துக்கள், இந்த ஜனவரி ஒன்றாம் தேதியை புதுவருடப் பிறப்பாகக் கொண்டாடுவதை இனியேனும் விட்டுவிட வேண்டும். இறைவனை எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வழிபடலாம். ஏனெனில் இமைப் பொழுதும் நம் நெஞ்சை விட்டு நீங்காதவர் அவர். ஆனால் அதற்காக ஆகம விதிமுறைப்படி நடைபெற்றுவரும் கோயில்களில் நள்ளிரவு கூத்தடிப்புகள் நல்லதல்ல, ஏற்கத்தக்கதல்ல.
நமது சுயத்தின் அடையாளமான நமக்கே உரிய புத்தாண்டை நாம் ஏன் மறக்க வேண்டும்?
காலனித்துவத்துக்கு கல்தா
கப்பற்படை கொடியில் – சிவாஜியின் முத்திரை
பாரத கப்பற்படையின் புதிய கொடியில் 17 ஆம் நூற்றாண்டின் மராட்டிய பேரரசரான சத்ரபதி சிவாஜியின் முத்திரை இடம் பெற்றுள்ளது. இது காலனித்துவ கால செயிண்ட் ஜார்ஜ் சிலுவையிலிருந்து பெறப்பட்டது. புதிய கொடியின் மேல் இடது மூலையில் தேசியக் கொடி உள்ளது. தேசிய சின்னத்தைச் சுற்றி நீல நிற எண்கோணம் உள்ளது.
இது ஒரு நங்கூரத்தின் மேல் உள்ளது. இது கப்பற்படையின் பல திசை அணுகல் மற்றும் செயல்பாட்டு திறனைக் குறிக்கிறது.

எண்கோண வடிவம்: சிவாஜியின் ராஜ முத்திரையை குறிக்கிறது. இது எட்டு திசைகளையும், கப்பற்படையின் பல பரிமாண திறன்களையும் குறிக்கிறது. தேவநாகரி எழுத்துக்களில் “ஸம் நோ வருணா” (தண்ணீர் கடவுள் மங்களகரமானவராக இருக்கட்டும்) என்று பொருள்படும். இந்த மாற்றம் காலனித்துவ கால சின்னங்களிலிருந்து சுதேசிக்குத் திரும்புவதைக் குறிக்கிறது. இது பாரதத்தின் வளமான கடல்சார் பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது.
பிரதமர் அலுவலகம் –− சேவா தீர்த்
டெல்லியில் புதியதாக கட்டப்பட்டுள்ள பிரதமர் அலுவலகத்திற்கு “சேவா தீர்த்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ‘புனிதமான சேவை தலம்’ என்ற பொருளை குறிக்கும் வகையில், பிரதமர் அலுவலகத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ராணுவ அலுவலகத்தில் – ராஜேந்திர சோழன் படம்
டெல்லியில் உள்ள பாதுகாப்புத்துறை அலுவலகத்தில், சோழ மன்னர் ராஜேந்திர சோழனின் ஓவியம் இடம் பெற்றுள்ளது.
குடும்பத்தில் உறவுகளுக்குப் புத்துயிர்
மம்மி, டாடி மறைந்து வருகிறது. திருமண அழைப்பிதழில் உறவுகளின் சுதேசிப் பெயர்கள் தென்படத் தொடங்கியுள்ளது.
வந்து விட்டது வந்தே மாதரம்
மகாராஷ்டிரா மாநில அரசு ஊழியர்கள் தொலைபேசியில் “ஹலோ” சொல்வதற்கு பதில், “வந்தே மாதரம்” என சொல்ல வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளது.

