அறிவியல் அசிங்கப்படலாமா? ஆய்வு முடிவு என்ற பெயரில் அச்சேறும் அபத்தம்!

ஒரு பரிசோதனைச் சாலை. விஞ்ஞானி ஒரு தவளையை வைத்து ஆய்வு
செய்கிறார். தவளைக்கு நான்கு கால்கள் இருந்தன. ‘குதி என்றார் விஞ்ஞானி’
நாலடி உயரம் குதித்தது தவளை. குறிப்பேட்டில் எழுதிக்கொண்டார். அதன் ஒரு
காலை வெட்டினார். குதி என்றார் மூன்று கால்களுடன் மூன்றடி உயரம் குதித்தது.
குறிப்பேட்டில் எழுதிக்கொண்டார். இன்னொரு காலை வெட்டினார். குதி என்றார்
இரண்டடி குதித்தது. குறிப்பேட்டில் எழுதிக்கொண்டார். மூன்றாவது காலை
வெட்டினார். குதி என்றார் ஒரு காலுடன் ஒரு அடி உயரம் குதித்தது. குறிப்பேட்டில்
எழுதிக்கொண்டார். நாலாவது காலையும் வெட்டினார். குதி என்றார். அது
குதிப்பதாயில்லை. சத்தமாக குதி என்றார். தவளை அசையவில்லை. குறிப்பேட்டில்
‘‘கால்கள் இல்லாத தவளைக்கு காது கேட்பதில்லை” என்று எழுதிக்கொண்டார்.

அறிவியல் ஆய்வுகள் பற்றி இப்படி ஒரு கலாட்டாக் கதை கூறப்படுவதுண்டு. நாம்வாசிக்கும் நாளேடுகளில் விஞ்ஞான ஆய்வு முடிவுகள் என்பதாக வெளியாகும் சில செய்திகள் இந்த கதை நிஜம்தானோ என்று நம்மை நினைக்க வைத்துவிடும்.
`பாரத பிரஜைகள் தேவையான அளவில் சரிபாதி அளவிற்குக் கூட சுண்ணாம்புச்சத்து எடுத்துக்கொள்வதில்லை’ என்று எங்கோ வார்சா நகரிலிருந்து ஒரு ஆய்வு எச்சரிக்கிறது. நம்மூர்க் காரர்கள் கேட்கிறார்கள்: ‘இதற்கெல்லாம் எதற்கு ஒரு
ஆய்வு? வெத்தலைபாக்கு பழக்கம் போய் ‘பொட்டலப்பாக்கு‘ பழக்கம் வந்து ஒரு
மாமாங்கம் ஆகிவிட்டதே, தாம்பூலத்தோடு உள்ளே போன சுண்ணாம்பு இப்போது
சுவர் களை வெள்ளையாக்குவதோடு சரி’. பொட்டலப் பாக்கு (அதான் சார், குட்கா) வந்தாலும் வந்தது தடையை மீறி அதற்கு `ராஜ’ மரியாதை. என்ன சங்கதி என்று இப்போது சிபிஐ விசாரிக்கப் போகிறது.

காறி உமிழலாம் போல இருக்கிறதா? சற்று பொறுங்கள். மாஸ்கோவில் நடந்த ஒரு
ஆய்வு நமது உமிழ்நீரை கதநாயகன் ஆக்கியிருக்கிறது. உடலில் நோய்த்தொற்று
இருக்கிறதா, என்ன வியாதி வரும் என்பதையெல்லாம் உமிழ்நீர் பரிசோதனை செய்தே கண்டுபிடித்துவிடலாமாம்! அப்பாடா, ரத்தப்பரிசோதனைக்காக குருதி சிந்த        வேண்டிய தில்லை. சீமான், பாரதிராஜா வகையறாக்கள்தான் பாவம். அவர்களுடைய `ரத்த’ப் பரிசோதனை தொழிலுக்கு வந்தது ஆபத்து!

உமிழ்நீர் சுரக்கும் வட்டாரத்தை (அதாங்க நம்ம வாய்) காவல் காக்கிற பட்டாளம்
போல வரிசை கட்டுகிற பல் இருக்கிறதே, அது சொத்தையாய்ப் போனால் டாக்டரிடம் ஓடுகிறோம். அவர் நம் பல்லையும் பிடுங்கிக்கொண்டு காசையும் பிடுங்கிக் கொள்கிறார் என்று விவரமில்லாமல் பேசுகிறவர்கள் உண்டு. அவர்கள் கவனத்திற்கு: பல்செட் கட்டுகிற டாக்டர்கள் இனி பல்லுக்குள்ளேயே மருந்துத் துளிகளை வைத்து கட்டிவிடுவார்களாம் – ஒரு ஆய்வு சொல்கிறது. எப்போதாவது சொத்தை மறுபடியும் தலை தூக்கும்போது பல்செட்டுக்குள்ளிருந்து வரும் மருந்துத் துளி சொத்தையை ஒரு
கைபார்க்குமாம். அப்படிப்பட்ட பல்செட்டை கட்டிக்கொள்கிறவர்களின் சொத்தை டாக்டர் ‘பில்’ ஒரு கை பார்த்துவிடும் என்று தோன்றுகிறது.

பல்லைக் கடித்துக்கொண்டு பொங்கலோ இட்லியோ உப்புமாவோ காலைவேளையில் உள்ளே தள்ளுகிறவர்களுக்கு குடும்பத்தில் பிரச்சினை வராது (சமையலறையிலிருந்து உறுமல் கேட்காது). ஊளைச்சதை போட்டுவிடும் என்ற பயத்தில் காலை சிற்றுண்டியை தவிர்ப்பவர்கள் இரட்டை பிரச்சினையை சந்திக்கவேண்டியிருக்கும். சமையலறை உறுமல் ஒன்று. இரண்டாவது, அவர்களுக்கு தொப்பை அபார வளர்ச்சி பெறும்: இது ஒரு ஆய்வு முடிவாம்! அதுவும் அமெரிக்க ஆய்வு முடிவாம். வாயை மூடிக் கொண்டு காலை சிற்றுண்டியை விழுங்கி வைப்பதுதா; மரியாதை. சிற்றுண்டியை அடுத்து? நம்ம காப்பிதான்.

உடம்புக்கு நல்லது என்று இல்லாவிட்டாலும் உற்சாகம் தருவதுஎன்பதால் ஒரு கப் அடித்துவைப்போம் என்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள். காப்பி உண்மையிலேயே உடம்புக்கு நல்லது என்று ஒரு ஆய்வு சொல்வ தாக செய்திவரும். அதைப்படித்துவிட்டு பேப்பரை மடித்து போடுவதற்குள் காப்பியால் வரும் கேடுகள் பற்றி இன்னொரு ஆய்வு
முடிவைத் தாங்கி அடுத்த செய்தி வந்துவிடும். இதுபோல முன்னுக்குப் பின்னாய்
ஆட்டம் காட்டும் ஆய்வு வேறு எதுவும் இல்லையாம் காப்பிக்கு அப்படி ஒரு புகழ்!

காப்பி மட்டும்தான் என்றில்லை. உடற்பயிற்சிகூட இப்படி நல்லதா கெட்டதா என்று மாறி மாறி செய்திதரக்கூடியதுதான். வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்தால் நோய் எதிர்ப்புசக்தி குறைந்துவிடும் என்று முன்பு வெளியான ஒரு ஆய்வு தவறு, மாரத்தான்
போன்ற தொலைதூர ஓட்டங்கள் உடம்புக்கு நல்லது என்று இன்னொரு ஆய்வு
சொல்கிறது. இரண்டுமே அடுத்தடுத்து நாளிதழ்களில் வெளியானவைதான்.

லேசாக பைத்தியம் பிடிக்கும் போல தோன்றுகிறதா? ஒரு ஆய்வு சொல்கிறது, மும்பையில் மாநகராட்சி மருத்துவமனைகளில் வரிசைகட்டுகிறவர்களில் பெரும்பாலானவர்கள் மனநல பாதிப்புக்கு மருந்து தேடி வந்தவர்களாம். நல்ல வேளை,நாம் மும்பையிலிருந்து வெகு தொலைவாக இருக்கிறோம்! லெம்மிங் என்ற ஆர்க்டிக் பிரதேச விலங்கு விண்ணிலிருந்து வந்து குதித்தவை என்று ஒரு விஞ்ஞானி கூறியதை மக்கள் நம்பினார்கள். பிறகு இன்னொருவர் வந்து இவற்றுக்கு ஆர்க்டிக் பகுதிதான் வீடு என்று நிரூபித்தாராம். (பார்க்க இந்த வார விஞ்ஞான விந்தைகள் பக்கம் 27)

சில நோய்த் தொற்றுகள் பற்றி பீதி கிளப்பும் விதத்தில் செய்தி வெளியாவது மருந்து மாபியா வின் சதி என்கிறார்கள். ரத்த அழுத்த அளவில் முன்னுக்குப்பின் முரணாக வந்த
செய்திகள் இந்த ரகமாம். பல நாடுகளின் விஞ்ஞானிகளும் தங்கள் ஆய்வு முடிவுகளை அவ்வப்போது வெளியிட்டு நம்மைப்போன்ற சாமான்யர்களை போதுமான அளவு குழப்புவது ஒருபுறம் என்றாலும் பாரத நாட்டு விஞ்ஞானிகள் மக்களின் தேவை அறிந்து
கண்டுபிடிப்புகளை வழங்கி வருகிறார்கள். சில உதாரணங்கள்:

* தண்ணீர்ப் பஞ்சம் மிரட்டுகிறது. சுத்தமான தண்ணீர் கிடைக்க வெள்ளியும்
டைட்டானியமும் கலந்த ஒரு வடிகட்டும் கருவி தயாராகிறது. இது எந்த தண்ணீரில்
உள்ள பாக்டீரியாவையும் அழித்துவிடுகிறது.

* வடிகட்டும் கருவி கூட வேண்டாம். 3 லிட்டர் கடல் தண்ணீரை ஒன்றரை லிட்டர்
நல்ல தண்ணீராக்க வருகிறது சூரியவெப்பத்தால் இயங்கும் தண்ணீர் சுத்திகரிப்பான்.

* நமது இருதயம் சரியாக இயங்குகிறதா, அடைப்பு இருக்கிறதா, ரத்த அழுத்தம் எப்படி என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள ஆப்டிகல் ஃபைபரால் ஆன ஒரு உணர்வு கருவியை மார்பில் கட்டிக்கொண்டால்போதும், அந்த கருவி தயாராகி வருகிறது.

* மைக்ரோஸ்கோப்பின் கீழே தெரியும் நுண்ணுயிர்களை ஒரு சக்தி வாய்ந்த
ஸ்மார்ட் போனில் படமெடுத்து பார்த்து எந்தவிதமான நோய்க் கிருமி அது என்று
பல கட்ட ரத்த பரிசோதனை இல்லாமலே தெரிந்துகொள்ளலாம்.

* கேன்சர் நோய் பாதித்த திசுவை கொல்ல மருந்து தயாராகி வருகிறது. இந்த வகையில் உலகில் நாம்தான் முன்னோடி.

* கண்விழித்திரை புரை (கேட்டராக்ட்) குறை உள்ளவர்கள் பார்க்க வசதியாக ஒரு மூக்குக் கண்ணாடி உருவாகி வருகிறது. அதன்மீது ஒட்டப்படும் ஒரு கண்ணாடித்தாள் கண்ணின் லென்ஸ்போல செயல்படுகிறது.(இவையெல்லாம் பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப்சயன்ஸ் அமைப்பில் ஆராய்ச்சி செய்துவரும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள். சாமானிய
மக்களுக்கு இவை எவ்வளவு பயன்படும் என்பதை சுலபமாக புரிந்துகொள்ள முடியும்).
ஐ.ஐ.டி (ரூர்க்சி) விஞ்ஞானிகள் சிக்குன் குனியா ஏற்படுத்தும் நுண்ணுயிரை
அழிக்கும் மருந்து கண்டுபிடித்திருக்கிறார்கள். (போன வரும் நாட்டில் 9௦,௦௦௦
பேரை உலுக்கி எடுத்த நோய் அது)

உலக மருத்துவ சுற்றுலா பயணிகளுக்கு சொர்க்கம் பாரதம்; ஏன்? மலிவான, தரமான பாரத சிகிச்சை!

அப்பல்லோ, சங்கர் நேத்ராலயா போன்ற மருத்துவமனைகள் ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா போன்ற வளர்ச்சியடையாத நாடுகளில் மருத்துவ
சேவைகளை அளித்தன. அது ௧௯௯௦ களில், வெளிநாட்டு மக்கள் இன்று தங்கள்
மருத்துவ சிகிச்சைகளுக்கு பாரதம் நோக்கி வர ஆரம்பித்தனர். குறிப்பாக சென்னை
தான் அவர்களின் தேர்வாக உள்ளது. 2016ல் மருத்துவ சுற்றுலா பயணிகள்
2,00,000 பேர் வந்துள்ளனர். 2015ல் இது 1,30,000ஆக இருந்துள்ளது. அமெரிக்கா,
இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளிலிருந்தும் மருத்துவ சிகிச்சைக்காக பாரதம்
தேடி வர ஆரம்பித்துள்ளனர்.
இதய சிகிச்சை, சீறுநீரக மாற்று சிகிச்சை, நுரையீரல், கல்லீரல் மாற்று அறுவை
சிகிச்சை, எலும்பு மாற்று சிகிச்சை, முதுகெலும்பு மற்றும் மூளை அறுவை சிகிச்சை
போன்ற பல சிகிச்சைகளுக்காக வெளிநாட்டவர்கள் பாரதம் வருகின்றனர். இதில்
புற்று நோயக்காக வருவோரின் எண்ணிக்கை சமீபகாலமாக உயர்ந்துள்ளது.
அதற்கு காரணம் பாரத மருத்துவ அன்பர்களின் நம்பகத்தன்மையும், உயர்ந்த
தரமும், குறைவான செலவினமும் தான். அமெரிக்கா, ஜெர்மனி போன்ற
நாடுகளில் ஆகும் சிகிச்சை செலவு இங்கு ஆகாது என்று நைஜீரியா, மொரிஷியஸ்
மக்கள் பாரதம் வருகின்றனர்.
பாரதம் வந்த நீலஜ் ஜீலால் என்கிற மொரிஷிய பிரஜை கூறுவது
குறிப்பிடத்தக்கது: “10 ஆண்டுகளுக்கு முன் எனது வலது கண்ணில் பிரச்சினை
இருந்தது. அதற்காக அரசு மருத்துவமனை சென்றபோது, அங்குள்ள மருத்துவர்
உடனடியாக ஒரு குறிப்பிட்ட சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்றார்.
நானும் அதை செய்து கொண்டேன். ஆனால், சில நாட்களில் என் கண் பார்வை
முழுவதும் போனது. பின் பாரதம் வந்தபோது, இங்குள்ள மருத்துவர் எனக்கு அந்த
சிகிச்சை தேவையில்லை என்று கூறி மருந்துகொடுத்தார். அதைத்தான் எடுத்துக்
கொள்கிறேன்”.