சென்னையில் நடைபெற்ற ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியில் ஒரு நாள் ஆசிரியர்களுக்கான பாத பூஜை நடைபெற்றது. 1008 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மாணவர்கள் பாத பூஜை செய்து அவர்களுக்கு நமஸ்காரம் செய்து ஆசி வேண்டினர். மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது இந்த நாட்டின் பண்பாடு. பெற்றோர்களை, ஆசிரியர்களை, பெரியோர்களை வழிபடுவது என்பது நல்ல பண்பு தானே! இந்த நிகழ்ச்சியைக் கண்டித்து ராஜ்யசபாவில் கனிமொழி (எம்.பி) கடந்த வாரம் பேசியுள்ளார். நாடாளுமன்றத்தில் பேச வேண்டிய பிரச்சினைகள் ஏராளமாக இருக்கும்போது கனிமொழி இதை பெரிய பிரச்சினையாக்கி பூதாகரமாக ஆக்கியது ஏன்? நமது தமிழ்நாட்டில் சிலம்பப் பயிற்சியைத் துவக்கும்போது முதலில் ஆசானுக்கு வணக்கம் செய்வது என்பது மரபு. இது மட்டுமல்லாமல், கலைகள் எதுவாக இருப்பினும் கற்றுக்கொள்பவர் தனது குருவுக்கு வந்தனம் செய்து துவக்குவது என்பது சாதாரண நடைமுறை தானே?
சென்னையில் ஆடிட்டர் குருமூர்த்தியின் முயற்சியால் ஓர் அறக்கட்டளை இந்த நிகழ்ச்சியை 8ஆண்டுகளாக நடத்திவருகிறது. இந்த விவரம் கூட புரியாமல்; இதுதான் இந்த அரசின் புதிய கல்விக் கொள்கையா? இதற்கு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பதில் அளிக்கவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கனிமொழி கேட்டது அவரின் அரை வேக்காட்டுத்தனத்தைக் காட்டுகிறது.
அரசியல்வாதிகள் என்ன பெரிய மகான்களா? இவர்கள் தலைவர்களாக இருப்பதால் தொண்டர்கள் தங்கள் வயதை விட குறைவாக இருந்தாலும் கூட காலில் விழுந்து வணங்குகிறார்களே!
கனிமொழியின் தந்தை கருணாநிதியின் காலில் விழுந்து கழகத் தொண்டர்கள் வணங்கவில்லையா? இது மட்டும் பகுத்தறிவா? தமிழகத்தை குட்டிச்சுவராக்கியதில் திமுக பங்கு பெரும் பங்கு வகிக்கிறது. ஈ.வே.ராவும் கருணாநிதியும் தொடங்கி வைத்த கலாசார சீரழிவை கனிமொழியும் தொடருகிறார்.