அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகள் ஒரு சைவ சமய ஆன்மிகவாதி. “எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே” என்பதைக் குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு “சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம்” என்று பெயரிட்டார்.
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்” என்று பாடிய வள்ளலார், 1867ல் கடலூர் மாவட்டம் வடலூரில் “சத்திய தருமச்சாலையை” நிறுவினார். பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும். ‘கொல்லாமை’ கொள்கை என உயிர்களிடத்தில் அருள் செய்யும் கொள்கையைப் பரப்பியவர். “எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க” என்று கூறியவர். இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் தொகுப்பே ‘திருவருட்பா’ என்று அழைக்கப்படுகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மருதூரில், 1823ம் ஆண்டு, அக்டோபர் மாதம்
5ம் தேதி இராமையாபிள்ளை, சின்னம்மையார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இராமலிங்கர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சின்னகாவனம் பகுதிக்குச் சென்று வாழ்ந்தார்.
பின்னர் சென்னையில் ஏழு கிணறு பகுதியில் உள்ள, வீராசாமி பிள்ளை தெருவில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார். இவரின் தமையனார் சபாபதி பிள்ளை, இராமலிங்கத்தை படிக்க வைத்து முன்னேற்ற விரும்பினார். அதற்காக தன் குருநாதரான காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் கல்வி பயில அனுப்பி வைத்தார்.
இராமலிங்க சுவாமிகள் அங்கும் சரியாகப் படிக்கவில்லை. தினசரி பாட வகுப்பு முடிந்ததும், கந்தகோட்டம் சென்று முருகனை வணங்குவார். ஒருநாள் சுவாமிகளைக் கண்காணிக்க சபாபதி முதலியார் கந்தகோட்டம் முருகன் கோயிலுக்குச் சென்றார். அங்கு ராமலிங்கம், முருகன் சந்நதி முன்பு ஒருமையுடன் `நினது திருமலரடி நினைக்கின்ற’ என்ற திருவருட்பா பாடலை மனமுருகப் பாடிக்கொண்டிருந்தார்.
அப்பாடலை கேட்டதும் சபாபதி முதலியார் வள்ளலாரின் அண்ணனிடம் உனது தம்பி ஒரு தெய்வப்பிறவி. அவனுக்குச் சாதாரண உலகியல் கல்வி தேவையில்லை என்றார். அதன் பிறகு இராமலிங்க அடிகளார் தனது இறைபணியில் ஆழ்ந்து பயணிக்கத் தொடங்கினார்.
இராமலிங்க அடிகள் 1867ம் ஆண்டு மே 23 அன்று, வடலூர் மக்களிடம் இருந்து 80 காணி நிலம் பெற்றுத் தருமசாலையை தொடங்கினார். அங்கு வந்தவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது. இன்றும் லட்சக்கணக்கான மக்களுக்கு பசியாற்றப்படுகிறது.
வடலூரில் 1872 ஆண்டு ஜனவரி 25 அன்று கடவுளை அருட்பெருஞ்ஜோதி வடிவில் கண்ட பெருமானார் அருட்பெருஞ்ஜோதி வழிபாட்டிற்கென வடலூரில் சத்திய ஞானசபையை நிறுவினார்கள்.
தைப்பூச நன்நாளில் முதன் முதலாக ஞானசபையில் வழிபாடு தொடங்கப் பெற்றது. பிரதி தைப்பூசம் தோறும் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இங்கு பெருமானார் திருக்கரத்தால் ஏற்றிய அணையா தீபம் உள்ளது.
வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில் 1870ம் ஆண்டு வள்ளலார் தங்கியிருந்த திருமாளிகைக்கு `சித்தி வளாகம்’ என பெயர் சூட்டி, சன்மார்க்க கொடியை ஏற்றி பேருபதேசம் செய்தார். சித்தி வளாக திருமாளிகையில் 30.01.1874 இரவு 12 மணியளவில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் இரண்டறக் கலந்தார்.
வள்ளலார் திருக்கரத்தால் ஏற்றிய சத்திய ஞான ஜோதி 155 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாட்டில் உள்ளது. இவரது மக்கள் சேவையைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு 2007-ஆம் வருடம் இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்தது.