வம்பு, தும்புகள், செல்பேசி அரட்டை போன்றவற்றை தவிர்த்து. அரசு அலுவலர்கள் அந்தந்த அலுவலக நிர்வாகம் குறிப்பிட்டிருக்கும் நேரத்திற்குள் (மதிய உணவு நேரம் நீங்கலாக) பணிகளை முழுமூச்சுடன் செய்தாலே தனியார் அலுவலகங்கள் சிறப்பாகச் செயல்படுவதுபோல “ஜாம் ஜாம்” என்று செயல்பட்டு நற்பெயர் நிச்சயம்.. “நன்கு செயல் பட்டு லாபம் காட்டினால் போனஸ்; இல்லையேல் வீ ஆர் எஸ்.” என்று உயர் அதிகாரி ஒருவர் அன்றொரு நாள் மதிய நேரத்தில் விளையாட்டாகச் சொன்னார். ஆனால் அந்த வார்த்தை பல துறைகளில் உண்மையாகி வருகிறது.
பொதுமக்கள் கோரிக்கைகள் இடைத்தரகர் இன்றி அலுவலர் நேரிடையாகக் கையாண்டால் மக்கள் மகிழ்வர். அனைவரது காத்திருக்கும் நேரம், காலம், மிச்சம். லட்சம் தவிர்த்து லட்சியம் பயின்று நெஞ்சம் நிமிர்ந்து பணிபுரிய நம் கண்முன்னே வாய்ப்புக்கள் அதிகம். நூறுக்கும் இருநூறுக்கும் நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டிருக்கும் அற்ப புத்தி உள்ள அதிகாரிகள் எண்ணிக்கை குறைந்தால் சக பணியாளர்கள் வேலைத்திறன் மிகுந்து நிர்வாகச் செலவினங்கள் குறையும்.
சிக்கனம் என்கின்ற போர்வையில், சில வங்கிகள் /அரசு/ தனியார் அமைப்புக்கள் ஐம்பது வயது நிரம்பியவர்கள் பலரை நீக்கிவிட்டு, இளைஞர்களை அப்பணியில் நியமிப்பது சமீபத்திய நிகழ்வுகள். விஷயஞானம், அனுபவம், விசுவாசம், வேலையில் முழு ஆர்வம் காட்டிவரும் மூத்த ஊழியர் திடிரென எங்கேயிருந்து கிடைப்பார்? சில மூத்த ஊழியர்களின் திறன்மிகு வேலைத்திறன் முழுவதும் பகுதி நேரமாயினும் பயன்படுத்தப்படுவது நிர்வாகங்களுக்கு நல்லது.
ஒரே நிலை அதிகாரிகள் உள்ளூர்/வெளியூர் முகாம்கள் என்று மேற்கொள்ளும்போது இணைந்து பயணித்தால் எரிபொருள் சிக்கனம்.
அலுவலகம் திறக்கும்போது குப்பைகூளங்கள் நீக்கும் சமயத்தில் பணியாளர்கள் சுவிட்ச் பலகையில் பொருத்தியுள்ள அனைத்து ஸ்விட்ச்களையும் ‘ஆன்’ செய்வதை தவிர்க்க வேண்டும். சுத்தபடுத்துவது முடிந்தவுடன் ‘ஆப்’ செய்ய பலருக்கு மறந்து விடுகிறது. பிற அலுவலர்கள் வரும் வரை சும்மா வேணும் மின்விசிறி, விளக்குகள் எரியணுமா?