அயோத்தி வழக்கு – சமரச குழுவுக்கு ஆகஸ்ட் 15-ம் தேதி வரை அவகாசம் வழங்கியது உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றத்தில் அயோத்தி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில் 3 பேர் கொண்ட  சமரசக் குழுவின் கோரிக்கையை ஏற்று ஆகஸ்ட் 15-ம் தேத வரை கூடுதல் அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14-க்கும் மேற்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மேல்முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த மார்ச் 8-ம் தேதி வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, அயோத்தி ராமஜென்ம பூமி- பாபர் மசூதி நில விவகாரத்தில் தீர்வு காண ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய சமசரக் குழுவை நியமித்தது. இந்த குழு 8 வார காலத்தில் விசாரணை நடத்தி சமரசத் தீர்வு குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

விசாரணை வீடியோவில் பதிவு செய்யப்பட வேண்டும். இந்த விசாரணை குறித்த தகவல்கள் ஊடகங்களில் கசியக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எட்டு வார காலஅவகாசம் கடந்த 3-ம் தேதியுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நீதிபதி கலிபுல்லா தலைமையிலான 3 பேர் சமரசக் குழு உச்ச நீதிமன்றத்தில் இடைக்ககால அறிக்கையை தாக்கல் செய்தது.

இந்நிலையில் அயோத்தி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சமரசக் குழு சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், ஒரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஜூன் மாதம் மீண்டும் முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறுவதால் கூடுதல் அவகாசம் வேண்டும் என கோரப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறுகையில் ‘‘அயோத்தி விவகாரத்தில் சமரச தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சமரச குழுவுக்கு கூடுதல் நேரம் தர நீதிமன்றம் தயாராக உள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை நீதிமன்றம் கோர விரும்பவில்லை.

சமரச குழுவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவே நாங்கள் விரும்புகிறோம். எனவே ஆகஸ்ட் 15-ம் தேதி வரை சமரச குழு கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம்’’ எனக் கூறினார்.