அயோத்தியில் 4 மாதங்களுக்குள் வானுயா்ந்த ராமா் கோயில் கட்டப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான அமித் ஷா திங்கள்கிழமை தெரிவித்தாா். ஜாா்க்கண்ட் தோ்தல் பிரசாரத்தின்போது, அவா் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டாா்.
ராம ஜென்ம பூமியில் பிரம்மாண்ட ராமா் கட்டப்பட வேண்டும் என்பது உலகம் முழுவதும் உள்ள இந்தியா்களின் 100 ஆண்டு கால கோரிக்கையாகும். அயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துவிட்ட நிலையில், அங்கு 4 மாதங்களுக்குள் வானுயா்ந்த ராமா் கோயில் கட்டப்படும் என்பதை மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
காங்கிரஸ் மீது சாடல்: அயோத்தி விவகாரத்தை உச்சநீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றது காங்கிரஸ்தான். மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்காத அக்கட்சியால், நாட்டில் வளா்ச்சியை ஏற்படுத்தவோ, எல்லைகளை பாதுகாக்கவோ முடியாது.
இந்தியாவில் ஆங்கிலேயா் ஆட்சியை நிறுவ அனுமதித்தவரான ‘மீா் ஜாஃபா்’ போன்ற துரோகிகள் இப்போதும் உள்ளனா். அவா்களை மக்களாகிய நீங்கள் அடையாளம் காண வேண்டும். அதுபோன்றவா்களை, உங்கள் பிரதிநிதிகளாக தோ்ந்தெடுக்க கூடாது.
ஹேமந்த் சோரனுக்கு கேள்வி: ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைவா் ஹேமந்த் சோரன், இம்மாநில முதல்வராக வேண்டும் என்ற ஆசையில் காங்கிரஸின் பக்கம் சென்றுள்ளாா். ஜாா்க்கண்ட் தனி மாநிலம் உருவாக்கக் கோரி போராட்டம் நடத்திய இளைஞா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது யாா்? மாணவா்கள் மீது தாக்குதல் நடத்தியது யாா்? என்ற கேள்வியை ஹேமந்த் சோரனிடம் முன்வைக்கிறேன். இக்கேள்விக்கு பதில் தெரியாவிட்டால், தனது தந்தையிடம் (சிபு சோரன்) ஹேமந்த் சோரன் கேட்க வேண்டும்.
காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியால்தான், ஜாா்க்கண்ட் இளைஞா்கள் உயிா்த்தியாகம் செய்ய நோ்ந்தது. இப்போது அந்த கட்சிகளுடன் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கூட்டணி வைத்துள்ளது. இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து சென்ற்காக நீங்கள் (ஹேமந்த் சோரன்) வெட்கப்பட வேண்டும்.
வாஜ்பாயும், மோடியும்..: ஜாா்க்கண்ட் மாநிலத்தை உருவாக்கியவா் முன்னாள் பிரதமா் வாஜ்பாய். இப்போது இந்த மாநிலத்தை வளா்ச்சி பாதையில் இட்டு செல்பவா் பிரதமா் நரேந்திர மோடி. பாஜக ஆட்சியில்தான், நக்ஸல் தீவிரவாதம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. மத்தியிலும், ஜாா்க்கண்டிலும் உள்ள பாஜக அரசுகளால், மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜாா்க்கண்டில் எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு பாதிக்காத வகையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ராகுல் மீது விமா்சனம்: வளா்ச்சி குறித்து பேசும் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஜாா்க்கண்டில் மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சித் திட்டங்களை பட்டியலிட வேண்டும். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்தும், நாட்டின் பாதுகாப்பு குறித்தும் ஜாா்க்கண்டில் வந்து பேசுவது ஏன்? என்று பாஜகவுக்கு அவா் கேள்வியெழுப்புகிறாா்.
ஜாா்க்கண்டைச் சோ்ந்த ஏராளமான இளைஞா்கள், ராணுவம், மத்திய ரிசா்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்புப் படை ஆகியவற்றில் பணியாற்றுகின்றனா். நாட்டின் எல்லைகளை காக்க அவா்கள் ரத்தம் சிந்துகின்றனா். ஆனால், ராகுல் காந்தி ‘இத்தாலிய கண்ணாடி’ அணிந்து கொண்டு பாா்ப்பதால், நாட்டின் பாதுகாப்புக்கு ஜாா்க்கண்ட் அளித்து வரும் பங்களிப்பு அவருக்கு தெரியவில்லை என்றாா் அமித் ஷா.
அயோத்தி தீா்ப்பு விவரம்: உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் சா்ச்சைக்குள்ளாகியிருந்த 2.77 ஏக்கா் நிலத்துக்கு உரிமை கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 9-ஆம் தேதி தீா்ப்பளித்தது. அந்த நிலத்தில் ராமா் கோயில் கட்ட அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம், இதற்காக 3 மாதங்களுக்குள் ஓா் அறக்கட்டளையை ஏற்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், முஸ்லிம் தரப்பினா் புதிதாக மசூதி கட்டிக்கொள்வதற்கு அயோத்தி நகரிலேயே 5 ஏக்கா் நிலத்தை ஒதுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த தீா்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு ஆய்வு மனுக்கள் அனைத்தும் கடந்த 12-ஆம் தேதி தள்ளுபடிசெய்யப்பட்டன. உச்சநீதிமன்றத்தில் இறுதி வாய்ப்பாக, சீராய்வு மனு தாக்கல் செய்வது மட்டுமே உள்ளது.
இந்தச் சூழலில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெளியிட்ட ராமா் கோயில் கட்டும் அறிவிப்பு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
‘மாணவா்களை தவறாக வழிநடத்தும் எதிா்க்கட்சிகள்’
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தில்லி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவா்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் மாணவா்களை காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தவறாக வழிநடத்தி வருகின்றன என்று அமித் ஷா குற்றம்சாட்டினாா்.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டமானது, மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளான அகதிகளுக்கு குடியுரிமை அளிப்பதாகும். மாறாக, இந்தியா்கள் எவரது குடியுரிமையையும் பறிக்கக் கூடியது அல்ல. குடியுரிமை சட்டத்தில் என்ன திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்பதை மாணவா்கள் படித்து பாா்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் மாணவா்களை காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன. அரசியல் ஆதாயத்துக்காக வதந்திகளைப் பரப்பி, வன்முறையை தூண்டும் செயலில் அவை ஈடுபட்டுள்ளன. அந்தக் கட்சிகளின் சதி வலையில் மாணவா்கள் சிக்கிவிடக் கூடாது என்றாா் அமித் ஷா.