பா.ஜனதா பொதுச்செயலாளர் ராம் மாதவ் நேற்று ஸ்ரீநகரில் நடைபெற்ற பா.ஜனதா இளைஞர் பிரிவு கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-
காஷ்மீர் இப்போது வளர்ச்சி, அமைதி என்ற இரண்டு பாதைகளில் சென்று கொண்டிருக்கிறது. இந்த அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பவர்களை கடுமையாக அணுகுவோம். இந்தியா முழுவதும் அவர்களுக்காக ஏராளமான சிறைகள் உள்ளன. ஒரு 200 அல்லது 300 பேரை சிறையில் தள்ளினால்தான் அமைதியையும், வளர்ச்சியையும் எட்ட முடியும் என்றால், அவர்களை சிறையில் தள்ளுவோம். சில அரசியல் தலைவர்கள், காஷ்மீர் மக்களை இரையாக்க பார்க்கிறார்கள். ஒருவர், காஷ்மீர் மக்கள் துப்பாக்கி ஏந்தி, உயிர்த்தியாகம் செய்வார்கள் என்கிறார். முதலில் நீங்கள் உயிர்த்தியாகம் செய்ய முன்வாருங்கள். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், தங்கள் நிலமும், வேலைவாய்ப்பும் பறிபோகும் என்று மக்கள் பயப்படுகிறார்கள். நிலத்துக்கோ, வேலைவாய்ப்புக்கோ எந்த பாதிப்பும் வராது. இங்குள்ள வேலைவாய்ப்புகள், இங்குள்ள இளைஞர்களுக்கே வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.