அமெரிக்கா கோயில்கள் ஹிந்து சக்தி கேந்திரங்கள்

பல்வேறு அமெரிக்க மாநிலங்களில் சிறியதும் பெரியதுமாக பல கோயில்கள் உள்ளன. அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆங்காங்கே சர்ச்/சமூக மண்டபங்களை சலுகை விலையில் வாங்கி ஹிந்து கோயில்களாக மாற்றுகின்றனர். அமெரிக்கா முழுவதும் உள்ள ஹிந்து கோவில்கள் பக்தி, கலாசாரம், சமூக சேவை இவற்றுக்கான உயிரோட்டமிக்க மையங்களாக விளங்குகின்றன.

தினசரி பூஜைகள் மற்றும் வழக்கமான சடங்குகளுடன், கோவில்கள் பல்வேறு மத / பண்பாட்டு / கல்வி / சமூக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றன. தீபாவளி, நவராத்திரி, கணேஷ் சதுர்த்தி, ஹோலி போன்ற முக்கிய திருவிழாக்கள் மிகுந்த பக்தியுடனும் சமூகப் பங்கேற்புடனும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

பண்பாட்டு வகுப்புகள்
அங்கே ஹிந்து கோவில்கள், குழந்தைகள் தங்களின் சமய, பாரம்பரியத்துடன் இணைந்திருக்க உதவுவதற்காக பண்பாட்டு / கல்வி வகுப்புகளை நடத்துகின்றன. இவ்வகுப்புகள் பெரும்பாலும் வார இறுதிகளில் அல்லது கோடை காலப் பயிற்சி நிகழ்ச்சிகளாக நடைபெறுகின்றன. இவற்றை அர்ப்பணிப்புடன் செயல்படும் தன்னார்வலர்கள் அல்லது பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நடத்துகின்றனர்.

இந்த வகுப்புகளின் நோக்கம் — சாஸ்திரங்கள், பக்தி வழிபாடுகள், மற்றும் பண்பாட்டு மரபுகள் மூலம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களை சனாதன தர்மத்தின் நித்திய நெறிகளைப் பின்பற்றி வாழ ஊக்குவிப்பது ஆகும். இவை அனைத்தும் பாசமிகுந்த, ஆன்மீக சூழலில், கோவில் வளாகத்திலேயே நடத்தப்படுகின்றன.
கோயில்களை நிர்வகிக்க நிதி சேகரிப்பு பலவிதங்களில் நடைபெறுகின்றன:

டின்னர்கள்
கோயில்கள் ஆண்டு அல்லது அரையாண்டு டிக்கெட் வைத்து டின்னர், கலை, கலாச்சார நிகழ்ச்சிகள். இதில் உணவு, இசை / நாடகம், வருகைபுரி பேச்சாளர்கள் அல்லது கலைஞர்கள் இடம்பெறலாம்.

காணிக்கை
பக்தர்கள் சிறப்பு திருவிழாக்களில், பிறந்த நாள், ஆண்டு விழாக்களில் பூஜை, சடங்கு முதலியவற்றிற்கு ஸ்பான்ஸர் ஆகின்றனர். முக்கிய திருவிழாக்களில் உண்டியல் இருக்கும்.

மூலதன முயற்சிகள்
கோயில்கள் அல்லது கலாச்சார மையங்களை கட்ட அல்லது புதுப்பிக்க. நிலம் வாங்குதல், கட்டுமானம், கட்டிடக் கலைப் பணிகள் போன்றவை அடங்கும். டெக்சாஸ் பகுதியிலுள்ள ஹிந்து டெம்பிள் ஆஃப் தி உட்லாண்ட்ஸ் 2018-ல் சிறிய பக்தர் குழு சேர்ந்து கோயிலுக்கு சூரிய எரிசக்தி வழங்க ஒரு திட்டம் உருவாக்கியது. இந்த அமைப்பு அடுத்த 25 ஆண்டுகளில் வருடத்திற்கு கோயிலின் 80–90% சக்தி தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் சுமார் 90-100 மெகாவாட் உற்பத்தி செய்யும்.

சமூக சேவை
கோயில்கள் மருத்துவ முகாம்கள், இலவச மருத்துவ மனை, ரத்ததான முகாம், உணவு வழங்குதல், பேரழிவு மீட்பு போன்றவற்றை ஏற்பாடு செய்கின்றன. சில நிகழ்வுகள் மட்டும் சேவை குறிக்கோளாக இருக்கும், ஆனால் பெரும்பாலும் இவை நிதி சேகரிப்பையும் அதிகரிக்கும்.

திருவிழா
திருவிழா என்றால் கூட்டம் சேரும். அப்போது இசை, நடனம், நாடகம் நடத்தி நிதி சேகரிப்பையும் செய்கிறார்கள். லங்கள் அல்லது ராஃபிள்கள் இடம்பெறும்.

உணவக முயற்சி
கோயில் செயல்படும் நேரங்களில் கோயில் சமையலறையில் பிரசாதம், கிடைக்கிறது. புளியோதரை, தயிர் சாதம் கிடைக்கும். சனி, ஞாயிறு என்றால் சாம்பார் சாதம், வடை, புதினா சாதம், வெண்பொங்கல், உப்புமா.

மண்டபம் வாடகைக்கு
மண்டபங்கள், கூடங்கள், சமையலறைகள் போன்ற வசதிகள் உள்ள கோயில்கள் அவற்றை திருமணங்கள், சமூக நிகழ்வுகள், கலாச்சார வகுப்புகள் தியானம், யோகா போன்றவற்றிற்கு வாடகைக்கு விடுகின்றன.

ஆன்லைன் வழியே
வலைத்தளங்கள், கிரவுட்ஃபண்டிங் ஆன்லைன் காணிக்கை தளங்களைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.. உள்ளூர் சமூகத்தைத் தாண்டி நன்கொடையாளர்களை விரிவாக்குகின்றன. சமூகத்திற்கு ஆதரவு அளிப்பது என்றால் களிப்பும் விழாக்களும் மட்டுமல்ல; கடினமான காலங்களிலும் உடன் இருக்க வேண்டும்.

உறவிழப்பு ஆதரவு குழு
நியூயார்க், கேபிட்டல் டிஸ்ட்ரிக்ட் ஹிந்து டெம்பிள் சொசைட்டி, குடும்பங்கள் தங்கள் அன்புக்குரிய ஒருவரை இழந்த போது வழிகாட்டல் மற்றும் ஆதரவை வழங்க உறவிழப்பு ஆதரவு குழு (Bereavement Support Committee – BSC) அமைத்துள்ளது. இந்த குழு இறுதிச் சடங்கு, தகனம், சட்டப்பூர்வ தேவைகள் உள்ளிட்ட பணிகளில் உதவுகிறது. சமூகத்தை நன்கு அறிந்த, நீண்டகால உள்ளூர்வாசிகள் உருவாக்கிய BSC, உறவினர்களுக்கும் சமூக அமைப்புகளுக்கும் தகவல் தெரிவித்தல், இரங்கல் குறிப்பு தயாரித்தல், பயண ஏற்பாடு, சாந்தி பாடம் சேவைகளை ஏற்பாடு செய்வதில் சரியான நேரத்தில் உதவுகிறது. மிகவும் முக்கியமாக, குழு உறுப்பினர்கள் பூர்வ ஆதரவை வழங்கி, சமூகத்தின் அருமை புரியச் செய்கிறார்கள்.
இவ்வாறு பக்தி, தன்னார்வச் சேவை சமூகத்துக்கு ஆதரவு இவை மூலம், அமெரிக்காவில் உள்ள ஹிந்து கோயில்கள் ஆன்மீகம் தழைக்கவும் ஹிந்து கலாச்சாரம் பாதுகாக்கப்படவும் நிலையான மையங்களாக உருவாகியுள்ளன.