அமரீந்தர் சிங் அதிர்ச்சித் தகவல்

காங்கிரஸ் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங்கிற்கும் சித்துவுக்கும் இடையே மோதல் அதிகரித்ததால் அமரிந்தர் சிங் முதல்வர் பதவியில் இருந்த நீக்கப்பட்டார். பின்னர் சரன்ஜித் சிங் சன்னி முதல்வராக்கப்பட்டார். அவருடனும் சித்து சுமுகப் போக்கைக் கொண்டிருக்கவில்லை. இச்சூழலில் நவ்ஜோத் சிங் சித்து குறித்து முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ள கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அமரீந்தர் சிங் கூறுகையில், ‘சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த சித்து கடந்த 2019ல் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். சித்து நீக்கப்பட்ட உடன் பாகிஸ்தான் நாட்டில் இருந்து எனக்கு தொலைப்பேசி அழைப்பு வந்தது. அதில், பாகிஸ்தான் பிரதமர், ‘சித்து எனது பழைய நண்பர். அவரை மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டால் நான் மகிழ்ச்சி அடைவேன். அமைச்சர் பொறுப்பை அவர் சரிவரச் செய்யவில்லை என்றால் நீங்கள் அவரை நீக்கலாம்’ என்று என்னிடம் தெரிவித்தார்” என அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார். முன்னதாக சில ஆண்டுகளுக்கு முன்பு, சித்து பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்று அந்நாட்டின் ராணுவ தளபதி உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகின. இது தேசமெங்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. நமது பாரத ராணுவத்தில் சேவை புரிந்த அமரிந்தர் சிங்கிற்கும் இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் பின்னரே இருவருக்கும் இடையேயான மோதல் போக்கு அதிகரித்ததாக கூறப்படுகிறது.