“நான் ஒரு நிகழ்ச்சிக்கு ஆளுநரை (இல. கணேசனை) அழைத்தேன், வர இயலாது என்று சொன்ன அவர் பிறகு வருவதாக உறுதிப்படுத்தினார். மாற்றத்திற்கான காரணத்தை ஐயாவிடம் கேட்டேன். “தமிழையும் இசையையும் கேட்பதற்கு எந்த ஒரு வாய்ப்பையும் தவற விடுவேனா!” என்று அவர் பதில் அளித்தார் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் டாக்டர் சுதா சேஷய்யன். மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல கணேசன் அவர்களுக்குப் புகழஞ்சலிக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆகஸ்டு 21 அன்று நடைபெற்றது. அதில் அஞ்சலி செலுத்தி அவர் இவ்வாறு சொன்னார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இல. கணேசன் ஜி இளம் வயதில் சங்க ப்ரச்சாரக்காக வந்தது முதல் அவர் ஆளுநர் ஆனது வரை அவரது வாழ்க்கைச் சரிதத்தைச் சுருக்கமாகக் குறிப்பிட்டுப் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் டால்ஃபின் ஸ்ரீதரன், தேசியத்திற்கு ஒரு பாடத்திட்டம் இருக்குமானால் அதில் இலகணேசன் ஜி ஒரு பாடமாக இருப்பார். பாரதிய ஜனதா கட்சிக்கு அமைப்பு ரீதியான விஷயங்களுக்கு இவர் தயாரித்த கையேடு தான் இன்றளவும் தேசிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். எல்லா நிகழ்ச்சிகளுக்கும் குறித்த நேரத்திற்கு முன்பே சென்று விடும் வழக்கம் கொண்ட இவர், காலன் குறித்த நேரத்திற்கும் முன்னதாகவே சென்று விட்டாரோ என்று வருந்தினார்.
இல. கணேசன்ஜி மிகவும் விரும்பும் ஹரிவராசனம் பாடலை பக்திப் பாடகர் வீரமணி ராஜுவும், பாரதியார் இயற்றிய எந்தையும் தாயும் பாடலை சுசித்ராவும், இல. கணேசன் ஜி இயற்றிய கண்ணா உன் சன்னதியில் பாடலை சிந்துஜாவும் பாடி இசையஞ்சலி செலுத்தினார்கள்.
“சாதகமில்லாத சூழ்நிலையில் சங்கப் பணி செய்ய வந்தவர்களில் எல்ஜி ஒருவர். சவாலான சூழ்நிலையில் தான் கட்சிப் பணிக்கும் வந்தார். 70 முதல் 90 வரை இவர் பெரும்பாலும் மதுரைக்குத் தெற்கே தான் களப் பணி செய்து வந்தார். தென் தமிழகத்தில் இவர் இல்லாமல் ஹிந்து எழுச்சி என்பது இல்லை. எதையுமே பூஜ்ஜியத்தில் தொடங்கி இத்தனை உயர்வுக்கு கொண்டு வந்தவர் எல்.ஜி. தரையில் பயணித்த கட்சியை விமானத்தில் ஏற்றியவர், தெய்வீகத் தாமரையை வாக்குச்சீட்டில் ஏற்றியவர்” என்று அவரது கடும் உழைப்பை எடுத்துக் கூறினார் ஹிந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தவச்சலம்.
எல்ஜி கதை சொல்லும் பாங்கு, அவர் எழுதிய “புதிய பாரதம் தலையெடுக்க” பாடல் பற்றிக் குறிப்பிட்டார் விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பாளர் பாலாஜி,
தமிழகத்தில் பல்வேறு தொடக்கங்களுக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் இல.கணேசன் ஜி தான் என்றும், மாற்றுக் கட்சி, மாற்று சிந்தனை கொண்ட பலரையும் ஒரே நிகழ்வில் ஒருங்கிணைக்க முடியும் என்பதைத் தமது இல்லத் திருமணத்தின் மூலமாக நிரூபித்ததையும் வியந்து பாராட்டினார். தேசம் விடுதலை பெற்ற நாளில் நம்மிடமிருந்து விடை பெற்றுச் சென்றார் தேசியத் தலைவர், அனைத்தையும் கிருஷ்ணார்ப்பணம் என்று உட்கொள்ளும் இல கணேசன் ஜிக்கு கிருஷ்ண ஜெயந்தி அன்று இறுதி ஊர்வலம் நடந்தது என்று புகழாரம் சூட்டினார் முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன். ஆர் எஸ் எஸ்ஸின் ரத்ததான இயக்கத்தைப் பற்றி ஒரு கல்லூரியில் தான் பேசியதைக் கேட்டு, தொலைப்பேசியில் தன்னை அழைத்துப் பாராட்டியவர் எல்.ஜி என்பதையும் தமிழிசை நினைவு கூர்ந்தார்.
தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் சரியான நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தக்க பொறுப்புகளைத் தந்து ஊக்குவித்து தலைமை பண்பை அவர்களுக்குள் விதைத்த ஒரே தலைவர் இவர்தான். பயிற்சி முகாம்களுக்கு முகவரி தந்தவர் இவர். இவர் மூலம் முகவரி பெற்றவர்கள் ஏராளம். இன்று அண்ணன் இல கணேசன் நம்மிடம் இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது. அவரது பாதையில் பயணித்து சித்தாந்தத்தை பலப்படுத்துவது தான் நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலி என்றார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா.
ஆளுநராக அறிவிக்கப்பட்ட பிறகு கட்சியில் தமது அடிப்படை உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்வதற்காக கமலாலயம் வந்த இல கணேசன் ஐயா, பாஜக தொண்டர் என்பதை விட எந்த பொறுப்பும் பெரிய பொறுப்பாகாது என்று கண்ணீர் சிந்தினார். அவர் மீண்டும் வந்து கட்சிப் பணியாற்றுவார் என்ற நம்பிக்கை உடன் இருந்தேன், அது பொய்த்துப் போனது என்று தனது வருத்தத்தை பதிவு செய்தார் பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை.
பாஜகவின் மாநில, தேசிய பொறுப்புகளில் தலைமைப் பண்புக்குரிய சிறப்பான ஆளுமையை வெளிப்படுத்தியவர். மாற்றுக் கட்சியினரிடமும், மாற்று சிந்தனை கொண்டவர்களிடமும் கூட அன்போடு பழகக் கூடியவர். கலைஞரின் அன்புக்கு பாத்திரம் ஆனவர் என்று புகழஞ்சலி செலுத்தினார் தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன். தமிழக முதல்வர் அனுப்பிய புகழஞ்சலி கடிதத்தையும் அமைச்சர் மா சுப்பிரமணியன் வாசித்தார்.
தான் பின்னே இருந்து கொண்டு அனைவரையும் முன்னேற்றிய தலைவர் அவர். அவரது ஆசியோடு நமது பணிகளை தொடர்வோம் என்று உறுதி தெரிவித்தார் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.
பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தில் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினர். அவர்களில் சிலர்: முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹெச்.வி. ஹண்டே, பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், தமிழ் மாநில முஸ்லிம் லீக்ன் ஷேக் தாவூத், புதிய பாரதம் கட்சியின் ஏசி சண்முகம், கம்யூனிஸ்டு கட்சியின் வீரபாண்டியன், அஇஅதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, தமிழ் மாநில காங்கிரஸ் பொருளாளர் ராமன், தமிழக மக்கள் முனனேற்ற கழகத்தின் நிறுவனர் ஜான் பாண்டியன், பாமக எம்.எல்.ஏ வெங்கடேசன், தேமுதிக எம்.ஆர். பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன், திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, விஐடி கல்வி குழுமத் துணைத் தலைவர் செல்வம், வானவில் ரவி, ஷோபனா ரமேஷ்.