அனுமன் ஜெயந்தி

ராம பக்தி செலுத்துவதில் தன்னை மிஞ்சியோர் யாரு மில்லை என உணர்த்தியவர் ராம பக்த அனுமன். 14 ஆண்டு கால வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய ராமனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. மக்கள் ஆனந்த மழையில் நனைந்தனர். தன் காலடியில் இருந்த அனுமனைப் பார்த்து ராமபிரான், ‘உன்னுடைய அன்பை நான் எப்படி விவரிப்பேன். உன் உதவிக்கு நான் என்ன கைமாறு செய்வேன். என் அன்பைத் தவிர விலை உயர்ந்ததை என்னால் தர இயலாது’ என அனுமனை கட்டி அணைத்து கண்ணீர் விட்டார்.

அனுமனை பாராட்டி அவருக்கு முத்துமாலை ஒன்றை பரிசளித்தார் சீதாதேவி. ஆனந்தத்துடன் பெற்றுக்கொண்ட அனுமன், முத்துமாலையை ஒவ்வொன்றாக கடித்து உடைக்கத் தொடங்கினார். இதைப் பார்த்து சபையில் இருந்தவர்கள் ‘அனுமனுக்கு பித்துப் பிடித்துவிட்டது’ என பேசினர். ஆனால் அனுமனின் பக்தியை பறைசாற்ற, ‘அனுமனே ஏன் இப்படி செய்தாய்?’ என கேட்டார் ராமர். அதற்கு அஞ்சனை மைந்தனோ, ‘பிரபு, சீதா தேவி கொடுத்த முத்து மாலையில் உங்களின் இருவரின் உருவம் இருக்கும் என நினைத்து உடைத்துப் பார்த்தேன். ஆனால் அதில் ஒன்றில் கூட உங்களின் திரு உருவம் இல்லை. அதனால் அது எனக்கு தேவையில்லை’ என கூறினார்.

ராமனோ, ‘அப்படியானால் எப்போதும் என்னை நினைத்துக் கொண்டிருப்பதாக கூறும் நீ, உன்னுள் நானிருப்பதை நிரூபித்துக் காட்ட முடியுமா?’ என கேள்வி எழுப்பினார். உடனே, தன் நெஞ்ஞைப் பிளந்து காட்டி அதில் ஸ்ரீ ராமனும், சீதா தேவியும் இருப்பதை காட்டினார் அனுமன். அனைவரும் அனுமனின் எல்லையற்ற அன்பை கண்டு வியந்தனர்.

ஸ்ரீ ராம பக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அனுமனின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் விதமாக அனுமன் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது.