காஷ்மீர் முதல் குமரி வரை பாரதம் ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற சிந்தனைக்கு வேட்டு வைப்பது போல அவ்வப்போது நதிநீர்ப் பிரச்சினை பயமுறுத்தி வருகிறது. தென் பாரதத்தில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களுக்கிடையே நதிநீர் ஒரு தீராத பிரச்சினையாகத்தான் தொடருகிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக போன்ற தேசிய கட்சிகள் கூட தங்கள் மாநில நலனை மட்டுமே முக்கியமாகக் கருதுகின்றனர். இல்லையென்றால் ஓட்டு போய்விடுமே என்ற கவலை அவர்களுக்கு.
தேசிய நதிநீர் இணைப்பு என்பது நீண்டகாலமாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு ஆதரவான கருத்தும் எதிர்மறையான கருத்தும் இருந்தே வருகிறது. காங்கிரஸ் இளவரசர் ராகுல் காந்தி இந்த திட்டம் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்று தெரிவித்தார். அவ்வளவுதான் காங்கிரஸ் பெரும் தலைவர்கள் இதுபற்றி கருத்து எதுவும் பேசாமல் வாயை மூடிக்கொண்டனர். டாக்டர் அப்துல்கலாம் நதிநீர் சாத்தியம்தான் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
தேசிய நதி நீர் இணைப்புத் திட்டத்திற்கு முன்னோடியாக குஜராத் அரசு தனது மாநிலத்தில் பாயும் ஆறுகளை இணைத்து சாதனை படைத்திருக்கிறது. தமிழக அரசு கூட கொள்கை அளவில் தமிழக நதிகளை இணைக்க ஒப்புக் கொண்டுள்ளது.
கங்கை – காவேரி இணைப்புத் திட்டம் சாத்தியம் இல்லாவிட்டாலும் வடக்கில் இமயமலையில் உற்பத்தியாகும் நதிகள், அவற்றின் கிளை நதிகள் ஆகியவற்றை இணைக்கும் திட்டத்தையும் தென்னிந்திய நதிகளை இணைக்கும் திட்டத்தையும் மேற்கொள்ளலாம்.
வருங்காலத்தில் தண்ணீர் ஒரு பெரிய பிரச்சினையாக உருவாக வாய்ப்புகள் இருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் அடுத்த தேர்தலை மட்டும் மனதில் கருதாமல் அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினால் மட்டுமே நதிநீர் இணைப்பு என்பதெல்லாம் சாத்தியம்.