நாடுகளை ஒன்றிணைப்பதற்கான இந்தியாவின் சர்வதேச (India’s International Movement to Unite Nations − IIMUN) இயக்கத்தின் 15 ஆவது வருடாந்திர மாநாட்டின் தொடக்க விழாவில் அகிலபாரத ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் சிறப்புரையாற்றினார். மும்பையில் உள்ள நீட்டா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், பாரதம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் இருந்து 15 முதல் 24 வயதுக்கு உட்பட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர், இவர்கள்தானே ஜென்ஸி மாணவர்கள்!
எதிர்கால தலைமைத்துவத்தை வளர்ப்பது, தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்துவது மற்றும் தேசிய, உலகளாவிய பிரச்சினைகள் குறித்து இளைஞர்களிடையே ஆக்கப்பூர்வமான கண்ணோட்டத்தை உருவாக்குவது ஆகிய விஷயங்கள் இந்த மாநாட்டின் முதன்மை நோக்கங்களாக இருந்தன. ஐ.ஐ.எம்.யூ.என் நிறுவனர் ரிஷப் ஷா, மாணவர்களுடன் கலந்துரையாடுவதற்கான அழைப்பை ஏற்றுக் கொண்டதற்காக மோகன் ஜிக்கு நன்றி தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசும் பொழுது “போராட்ட கலாச்சாரம், கல்வி, இளைஞர்கள் மீது சமூக ஊடகங்களின் தாக்கம், ஓரினச்சேர்க்கை பிரச்சினைகள் (LGBTQ), பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என பல்வேறு விஷயங்கள் பற்றி தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
பாரதத்தின் நீண்டகால பாரம்பரியத்தை குறிப்பிட்டு, ஜென் ஸி தலைமுறையினர் எழுப்பும் கேள்விகளை வெறும் எதிர்ப்பாக பார்க்கக்கூடாது, மாறாக புரிந்து கொண்டு அவற்றுக்கு தீர்வு காணும் பொறுப்பு உள்ளது என்றும், அது தேச விரோதமானது அல்ல, ஜென் ஸி மற்றும் ஜென் ஆல்ஃபா தலைமுறை தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவதில் அதிக நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். தரமான கல்வியை உறுதி செய்வதில், அரசுக்கு முக்கியப் பங்கு இருப்பதால், வித்யா பாரதி தற்போது நாடு முழுவதும் சுமார் 23 ஆயிரம் பள்ளிகளை அரசின் நிதி உதவி இன்றி நடத்தி வருவதாக கூறினார்.
பேச்சுவார்த்தை மூலம் நல்லிணக்கத்தை உருவாக்குவதில் பாரதம் நம்பிக்கை கொண்டுள்ளது என்றும், அமைதியான ஈடுபாட்டின் மூலமே நீடித்த தீர்வுகள் உருவாகும் என்றும் ஆர்.எஸ்.எஸ் அகிலபாரத தலைவர் கூறினார்.
ஓரினச்சேர்க்கை குறித்து பேசுகையில், திருமணம் என்பது இரு தனிநபர்கள் ஒன்றாக வாழ்வதற்கான ஒரு ஏற்பாடாக மட்டும் ஒருபோதும் பார்க்கப்படவில்லை, அது வருங்கால சந்ததியினரை வளர்ப்பதற்கும், ஆரோக்கியமான மற்றும் ஒழுக்க நெறிகள் அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்குகிறது என்று தெரிவித்தார்.
“தேசத்தை கட்டி எழுப்புவதில், பெண்களின் சமமான பங்களிப்பு இருந்தபோதும், ஆர்.எஸ்.எஸ்.ஸில் ஏன் ஆண்கள் மட்டுமே உள்ளனர்” என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “சங்கத்துடன் தொடர்புடைய பல்வேறு அமைப்புகளில், பெண்களுக்கு பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் அந்த பணிகளை திறம்பட செய்கிறார்கள் என்றும், சேவிகா சமிதி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அகிலபாரத பிரதிநிதி சபாவில் பெண்கள் பங்கேற்று, முடிவெடுக்கும் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்” என்றும் கூறினார்.
வேலைவாய்ப்பு குறித்து பேசிய அவர், “சமூகத்தின் மனப்பான்மை மாற வேண்டும், திறமையான தொழில்களும், சமமான முக்கியத்துவம் வாய்ந்த வாழ்வாதார வழிகளும், திறம்பட கையாள வேண்டும் என்றும், உழைப்பின் கண்ணியத்திற்கான மரியாதை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்”.
இட ஒதுக்கீடு குறித்து பேசிய அவர், சமூக ஏற்றத்தாழ்வுகளின் காரணமாகவே, இட ஒதுக்கீட்டின் தேவை எழுந்தது என்று டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் தெளிவாக எடுத்துரைத்தார். இட ஒதுக்கீடு, அரசியல் சர்ச்சைக்குரிய விஷயமாக மாறக்கூடாது, சமூக நீதியை அடைவதற்கு திறமையான மற்றும் நேர்மையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், எதிர்காலத்தில் இட ஒதுக்கீட்டின் தேவை படிப்படியாக குறையக்கூடும் என்றார்.
ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில், பாரதம் ஒரு முக்கியப் பங்காற்றி வருகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த வளர்ச்சி அவசியமானது என்பதால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு வீட்டிலிருந்து தொடங்கி அன்றாட வாழ்வோர் அங்கமாக மாற வேண்டும் என்று குறிப்பிட்டார்.
2047 ஆம் ஆண்டுக்குள், வளர்ச்சி பெற்ற பாரதத்தை கட்டமைக்க தலைவர்களுக்கு தேவைப்படும் குணங்கள் குறித்து கூறுகையில், “தங்களை சரியாக வழி நடத்தி கொள்பவர்கள் மட்டுமே, மற்றவரை வழி நடத்த முடியும். தலைமைத்துவத்தின் உண்மையான நோக்கம், பின் தொடர்பவர்களை உருவாக்குவது மட்டுமல்ல, எதிர்கால தலைவர்களை உருவாக்குவதே ஆகும்” எனக்கூறி தனது உரையை முடித்தார்.
– கட்டுரையாளர்: செய்தியாளர்
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : சுபதி கார்த்திக்