அனைவரும் வாழ வேண்டும். மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் தர்மத்தின் அடிப்படை கோட்பாடு. தர்மம் என்றால் மதம் என்று பொருள் அல்ல. விஞ்ஞானத்தில் தர்மத்தை மேற்கத்திய நாடுகள் சேர்த்துக் கொள்ளவில்லை. இதனால்தான் மேற்கத்திய நாடுகள் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன.
ஆந்திராவில் உள்ள திருப்பதியில் `பாரதிய விஞ்ஞான சம்மேளனம்’ நடைபெற்றது. இதில் 900க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை மத்திய கல்வி அமைச்சகம், விஞ்ஞான் பாரதி, இந்தியன் நாலட்ஜ் சிஸ்டம், அறிவியல் தொழில்நுட்பத்துக்கான, ஆந்திரப் பிரதேச கவுன்சில், தேசிய புத்தாக்க பவுண்டேசன், தேசிய சம்ஸ்கிருதப் பல்கலைக்கழகம் ஆகியவை கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன.
நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். அகில பாரத தலைவர் மோகன் பாகவத், மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, விஞ்ஞான் பாரதியின் தலைவர் சேகர் சி.
மண்டே, தேசிய சமஸ்கிருத துணைவேந்தர் பேராசிரியர் ஜி.எஸ்.ஆர். கிருஷ்ண மூர்த்தி, டி.ஆர்.டி.ஓ முன்னாள் தலைவர் டாக்டர் ஜி.சதீஷ் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கூட்டாக தொடங்கி வைத்தனர்.
`கடந்த ஒரு தசாப்தமாக அறிவியல் தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. 2014ல் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைக்கப்பட்ட நாளிலிருந்தே தொடர்ந்து ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. நம் நாட்டில் திறமைக்கு பஞ்சமில்லை.
முன்பு அரசியல் ரீதியான ஊக்குவிப்பு இல்லாமல் இருந்தது. இப்போது அரசியல் தலைமை சிறப்பாக உள்ளதால், ஊக்குவிப்பு பன்மடங்கு பெருகியுள்ளது. அறிவியல் புத்தகங்களை பாரத மொழிகளில் மொழி பெயர்க்கும் பணிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இது வெற்றிகரமாக நிறைவேறி உள்ளது.
2047ல் பாரதம் வளர்ந்த நாடாகி விடும் என்பது திண்ணம். இதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பங்கு உண்டு. கல்வியும், அறிவியலும் இதற்கு உறுதுணையாக இருக்கும்’ என்று ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.
`நமது பண்பாடு மிகவும் தொன்மையானது, வளமானது. பெற்றோரும், ஆசிரியர்களும், ராமர், கிருஷ்ணர், அர்ஜுனன், அனுமன் போன்றோரைப் பற்றி குழந்தைகளிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களது பராக்கிரமம், சாமர்த்தியம், சமயோஜிதம், துணிவு, ஞானம் ஆகியவற்றை விளக்க வேண்டும்.
பன்னெடுங்காலமாக பாரதத்தில் அறிவியல், வாழ்வியலோடு பிணைந்துள்ளது. இந்த மரபை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். சம்மேளனத்தின் 7வது நிகழ்ச்சி திருப்பதியில் நடத்தப்படுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு திருமலை பாலாஜியின் அருளாசிதான் காரணம் என்று நம்புகிறேன்’ என சந்திரபாபு நாயுடு தனது உரையில் குறிப்பிட்டார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது: உலகில் பல்வேறு பிரச்சினைகள் உக்கிரமடைந்துள்ளதற்கு தர்மத்தை புறந்தள்ளியதுதான் காரணம். தர்மத்தின் பாதையிலிருந்து விலகியதால், சமநிலை பிறழ்ந்து விட்டது. தர்மத்தின் பாதையில் நாம் பயணித்தால் மட்டுமே இன்பமாக வாழ முடியும். நாம் அனைவரும் சமூகத்தின் அங்கம். ஒவ்வொரு தனிமனிதனும் சமூகத்துக்கு பங்களிப்பு நல்க வேண்டும்.
அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். பூமியிலிருந்து சூரியன் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்றெல்லாம் அறிவியல் வாயிலாக அளவிட்டுள்ளோம். ஆனால் இதனால் மட்டும் மகிழ்ச்சி ஏற்பட்டு விடாது. உண்மையான மகிழ்ச்சி என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மிருகங்களுக்கும் உணர்வுகள் உள்ளன. ஆனால் மனிதர்கள் தற்கொலை செய்து கொள்வதைப் போல, மிருகங்கள் தற்கொலை செய்து கொள்வது இல்லை. எனவே மனிதனின் சோகத்துக்கு ஆழமான காரணங்கள் உள்ளன. இந்த உடல் நிலையானது அல்ல. உடல் அழிந்தாலும், ஆன்மா அழியாது. எது நிலையானதோ, அதன் மீது கவனத்தைச் செலுத்த வேண்டும்.
விஞ்ஞானம் புறத்தைப் பார்க்கிறது. புறம் மட்டுமே போதுமானது என்று முடிவு கட்டி விடக்கூடாது. அகம்தான் மிகவும் முக்கியமானது. ஆன்மிகம் அகத்தை ஆழமாக நோக்குகிறது. ராமகிருஷ்ண பரமஹம்சரும், சுவாமி விவேகானந்தரும் குரு – சீடர் பாவனையில் இயங்கினார்கள்.
கடவுளை பார்க்க முடியுமா என்று விவேகானந்தர் கேட்ட போது, `உன்னைப் பார்ப்பதைவிட கடவுளை தெளிவாகப் பார்த்துள்ளேன். இந்த அனுபவத்தை நீயும் உணர வேண்டும். உள்நோக்கிப் பார்த்தால் இது சாத்தியமாகும்’ என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் பதில் அளித்தார்.
வலிமையானவர்கள் மட்டுமே வாழ வேண்டும் என்பது மேற்கத்திய சிந்தனை. அனைவரும் வாழ வேண்டும். மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் தர்மத்தின் அடிப்படை கோட்பாடு. தர்மம் என்றால் மதம் என்று பொருள் அல்ல. விஞ்ஞானத்தில் தர்மத்தை மேற்கத்திய நாடுகள் சேர்த்துக் கொள்ளவில்லை.
இதனால்தான் மேற்கத்திய நாடுகள் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. தாய்மொழியில் கல்வியை கற்பிக்க வேண்டும். பின்லாந்தில் 8ம் வகுப்பு வரை தாய்மொழியிலேயே கல்வி கற்பிக்கப்படுகிறது.
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒன்றொடு ஒன்று தொடர்புடையவை. அகத்தை தழுவிக் கொள்வோம். அறத்தைப் பற்றிக் கொள்வோம். இவ்வாறு செய்தால் மட்டுமே சமூகம் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி