ஒரு பெண் பூப்பு எய்துவதை விழா எடுத்துக்கொண்டாடும் சமுதாயம் நம் சமுதாயம். சிறுமி என்ற நிலையில் இருந்து, அடுத்த கட்டமாக இயற்கை அவளை மண வாழ்க்கைக்கும், அடுத்து தாய்மைக்கும் ஆயத்தப்படுத்தும் நிகழ்வு பூப்பெய்தல். அவள் பெண்ணென்று பூமியில் பிறந்ததன் பலனை அடைய, அவளை இயற்கை கனிவிக்கும் நிகழ்வு. தாய்மை என்பதை வெறும் பிள்ளை பெறுதலாகவும், தாம்பத்யம் என்பதை வெறும் கூடி வாழ்ந்து பாலியல் இன்பம் துய்ப்பதாகவும் பார்க்கும் வேறு சில கூட்டத்தார் பார்வையில் பூப்பெய்தலைக் கொண்டாடுவது பிற்போக்காக இருக்கலாம். ஆனால் பெண்ணை அவளின் தாய்மை அம்சத்தில் இருந்து பிரித்துப் பார்க்காத பாரத கலாச்சாரத்துக்கு, அந்தச் சிறுமி, தாய்மை என்னும் கட்டத்தை அடைய ஒரு படி மேலே வருவதும், அதற்குரிய மலர்ச்சியை இயற்கை அவளிடம் ஏற்படுத்துகிறது; இதை நம்பவர்கள் கொண்டாடுவது தொண்மை மரபு.
ஆனால் மாத விலக்கான பெண்களை ஒதுக்கி வைத்துக் கேவலப் படுத்துகிறார்கள் என்ற கோணலான வியாக்கியானம் இந்த நவீனப் பெண்ணியவாதிகளின் தலைக்குள் புகுந்து கொண்டது இந்நாட்டைப் பீடித்த சாபம்! பெண் ஒட்டு மொத்த சமூகத்தின் பரிவுக்கும், கருணை சார்ந்த அணுகுமுறைக்கும் உரியவள் என்ற பாரத கலாச்சாரம் இவர்களுக்குக் கசப்பதன் காரணம் அந்த மனோவியாதி தான். ‘பருவம் எய்தாத பெண்களும், பருவம் கடந்த பெண்களும்தான் ஐயப்பன் மலைக்குப் போக வேண்டுமா? எல்லாப் பெண்களும் போகக் கூடாதா?’ என்று இவர்கள் கொடி பிடிப்பதன் காரணமே இவர்களின் மன விகாரம் தான்.
கல்லும் முள்ளும் நிறைந்த காட்டுப் பாதையில் மலை ஏறி தரிசிக்க வேண்டிய கோயில்களுக்கு செல்லும் போது, அதில் ஏற்படும் கடினமான சிரமங்களில் இருந்து மாத விலக்கின் வாய்ப்பு உள்ள பெண்களுக்கு விதி விலக்களிக்க எப்படிப்பட்ட பெரும் மனித நேயம் தேவைப்படும்! அந்த மாபெரும் மனித நேயம்தான் மாதவிலக்கு சுழற்சி இன்னமும் நிற்காத பெண்களுக்கு அய்யப்பன் மலை ஏறுதலில் இருந்து விலக்கு அளிக்க வைத்தது! மேலும் ஐயப்பனுக்கு விரதம் இருப்பது என்பது – முறையாக 48 நாள்கள் – ஒரு மண்டலம்! பெண்களுக்கு இயற்கை அளிக்கும் சுழற்சி என்பது சராசரியாக 27 நாள்கள் – அவரவர் உடல் நிலை பொருத்து சற்று முன் பின் அமையும். எனவே அவர்கள் இடைவிடாமல் விரதம் இருந்து, நோன்பு நோற்று ஐயப்பனை தரிசிப்பது சாத்தியம் இல்லை. மாத விலக்கு மட்டுமல்ல, பிள்ளைத் தாய்ச்சியாக உள்ள பெண்களும் சபரி மலை மட்டுமல்ல – எந்த மலையிலும் ஏறாமல் தவிர்க்க வைத்தது நம் மரபு. கடினமான மலை ஏற்றம், கர்ப்பமான பெண்ணுக்கு உகந்தது அல்ல, கரு கலையும் அபாயமும் உள்ளது என்பதால் அவர்களுக்குத் தவிர்த்தல் உத்தரவு போட்ட மரபு நம் மரபு!
கடைசியாக மிக முக்கியமான கேள்வி. ஹிந்துக் கோயில் ஒவ்வொன்றுக்கும் ஆகமம் என்ற சட்டம் உண்டு. அதைப் போற்றுதலும், பின்பற்றி நடத்தலும் அதில் நம்பக்கை உள்ளவர்கள் கடமை. கடவுளே இல்லை என்பவர்கள், ஆலய வழிபாட்டிலேயே நம்பக்கை இல்லாதவர்கள் பெண்ணுரிமை என்ற பெயரில் இதில் குறுக்கிட்டு குழப்பப் பார்ப்பது இனி பலிக்காது. வெவ்வேறு மதங்கள் இதே பெண்ணின் மாதவிலக்கு பற்றி என்ன கூறி உள்ளன என்று படித்து அவைகளையும் கேள்வி கேட்கும் தைரியத்தை வரவழைத்துக் கொள்ளுங்கள்- அல்லது வேறு ஏதாவது உருப்படியான வேலை இருந்தால் கவனியுங்கள்!