நான் படித்த கிறிஸ்தவப் பள்ளிக்கூடம் தினமும், இறைவணக்கத்துடன் தான் தொடங்கும்.
அதில் இந்துக்களுக்காக ஒரு தமிழ்ப்பாட்டும் கிறிஸ்தவ மாணவர்களுக்காக ஓர் ஆங்கிலப் பாட்டும் இடம்பெறும். ஆனால் அதற்குப் பத்து நிமிடம் முன்னதாக கிறிஸ்தவ மாணவர்களுக்காக ஒரு பிரத்தியேகமான பிரேயர் நடைபெறும். அதற்கும், எல்லா இந்து மாணவர்களும் கட்டாயமாய் வரவேண்டும் என்றது பள்ளிக்கூட நிர்வாகம். அப்படி வராதவர்களுக்குப் பள்ளிக்கூட வருகைப் பதிவேட்டில் ஆப்சென்ட் போட்டார்கள். அதுமட்டுமன்றி பத்தாவது, பதினொன்றாவது வகுப்பு படிக்கும் வளர்ந்த மாணவர்களைகூட பிரம்பால் அடிக்கும் வழக்கம் அந்தப் பள்ளிக் கூடத்தில் கடைப்பிடிக்கப்பட்டது.
…செங்கல்பட்டில் எங்கள் வீட்டிக்கு எதிர்வீட்டில் குடியிருந்த லயனல் என்ற மாணவன் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பன். நான் படித்த வகுப்பில்தான் அவனும் படித்துக் கொண்டிருந்தான். அவன் சர்ச்சுக்குப் போகும்போதெல்லாம் கூடவே நானும் போவேன். அங்கே தரும் புனித நீரையும் ரொட்டியையும் வாங்கிக் கொள்வேன். கிறிஸ்தவமதம் என்பது ஒரு மாற்றுமதம் என்கிற எண்ணம் சிறிதும் எனக்கு இல்லை.
ஒண்ணரை வருடங்கள் இது தொடர்ந்தது. ஒரு நாள் மாலை, எங்கள் பள்ளியைச் சேர்ந்த ரொபைரோ என்ற ஐரோப்பிய பாதிரியார் என்னைத் தன்னுடைய அறைக்கு அழைத்தார். அன்போது என்னைப் பற்றி நிறைய விசாரித்தார். டிபன் கொடுத்தார். இறுதியாய் என்னைப் பார்த்து, நீ ஏன் கிறிஸ்தவ மதத்துக்கு மாறக் கூடாது?” என்று கேட்டார். நான் அதிர்ந்து போனேன்.
நான் வேறுபாடு இல்லாமல் சர்ச்சுக்குப் போனதும், பிரார்த்தனைகளில் கலந்து கொண்டதும், கிறிஸ்தவ மதத்தின் மீது ஒருவித அன்பு கொண்டிருந்ததும் வாஸ்தவம் தான் என்றாலும் என்னை மதம் மாற்ற விரும்பிய ஃபாதர் ரொபைரோவின் முயற்சியை என்னால் ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லை.
அத்துடன் சர்ச்சுக்குப் போவது போன்றவற்றையெல்லாம் நிறுத்திக்கொண்டேன். லயனலுடனான நட்பு மட்டும் தொடர்ந்தது.
காஷ்மீர் முதலமைச்சர் குலாம் அகமதின் குள்ளநரித் தனம்
ஏன் இங்கே டான்ஸ் ஆடினால் என்ன?” என்றார் முதலமைச்சர். ஸ்ரீதர்! இப்போது என்ன செய்வது?” என்று கலக்கமுடன் கேட்டார் வைஜெயந்தி. அவருடைய பாட்டிக்கும் அசாத்திய கோபம். நான் வைஜெந்தியிடம் எந்தக் காரணம் கொண்டும் நீங்கள் டான்ஸ் ஆடவேண்டாம்” என்றேன்.
…மறுநாள் படப்பிடிப்பு இருக்கிறது. நாங்கள் புறப்படவேண்டும்” என்று கூறியபோது, நாங்கள் எல்லாம் வேலையற்றவர்களா?” என்று நான் பதில் வந்தது. என்ன இப்படி ஒரு இக்கட்டான நிலையில் வந்து மாட்டிக் கொண்டு விட்டோமே என்று ராஜ்கபூர் உட்பட எல்லோரும் தவித்துப் போய்விட்டோம்.
…ஒருவழியாய் இரவு இரண்டு மணிக்கு. கதவைத் திறந்து விடுங்கள். அவர்கள் போகட்டும்” என்று முதலமைச்சர் உத்தரவிட்ட போதுதான் இத்தனை நேரம் அவர்கள் கதவுகளைத் தாளிட்டு வைத்திருந்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியவந்தது.
(டைரக்டர் ஸ்ரீதர் வாழ்க்கை வரலாற்றினை ‘திரும்பி பார்க்கிறேன்’ என்ற தலைப்பில்
எஸ். சந்திரமௌலி எழுதிய நூலிலிருந்து)