குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட முறையில் குறிப்பிட்ட செயல் செய்தால் அது கட்டுப்பாடு Disipline ஆகிறது. Physical discipline, emotional discipline, intellectual discipline, spiritual discipline, அதாவது சரீரக் கட்டுப்பாடு, உணர்வுகளின் ஒழுங்கு, அறிவின் அடக்கம், ஆன்மீக நெறிமுறை இவை தனிமனிதக் கட்டுப்பாட்டின் முக்கிய அம்சங்கள். இவற்றில் ஒன்று இடம் மாறினாலும் குழப்பம். சமுதாயத்தில் பல பிரச்சினைகளுக்குக் காரணம் இடம் மாறுவது, நேரம் மாறுவது, முறை தவறுவது. இந்த விஷயத்தில் நியாயமாக, முறை தவறாமல் சித்பவானந்த சுவாமிஜி செய்தார். மற்றவர்களையும் செய்ய வைத்தார். சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள் முழுவதையும் புரிந்து கொண்டு, ஜீரணித்துக் கொண்டு, அதனை அமலுக்குக் கொண்டு வந்த மகான் சித்பவானந்தர்.
நம் நாட்டிலுள்ள கல்வி முறை நமக்கு தகுந்ததில்லை. சுவாமி விவேகானந்தர் லட்சிய இந்திய தேசிய கல்வித்திட்டத்தை வகுத்துக் கொடுத்துள்ளார். பிறருக்கு அதனை நடைமுறைக்குக் கொண்டு வரு
வதற்கு சுயநலம் இடைஞ்சலாயிருந்தது. ஆனால் சுவாமி சித்பவானந்த மஹராஜ் அதனை முழுதாகக் கற்றுக்கொண்டு, அதனைத் திருவேடகம், திருப்பராய்த்துறை போன்ற இடங்
களிலுள்ள கல்வி நிறுவனங்களில் புகுத்தியுள்ளார். இத்தகைய கல்வி முறையைக் கொண்டு வரும்போது Times sense காலத்தைப் பற்றிய உணர்ச்சி மிக அவசியம்.
திருவேடகம் கல்லூரியில், ஒருநாள், ஒரு விழாவிற்காக, அப்போது மதுரையிலே இருந்த மாவட்ட ஆட்சியாளரை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தோம். மதியம் 2.30 மணிக்கு ஆரம்பிக்கவேண்டிய விழா, மணியும் ஆகிவிட்டது. சிறப்பு விருந்தினர் வரவில்லை. சரியாக 2.30 மணிக்கு விழா ஆரம்பித்துவிட்டது. ஒரு மணி நேரம் கழித்து விருந்தினர் வந்தார். ஆனால் நிகழ்ச்சி நிரலில் எவ்வித மாற்றமும் இல்லை. மரியாதையுடன் மேடைக்கு அழைத்து வரப்பட்ட அவர் விழா முடிந்ததும் மரியாதையுடன் அனுப்பி வைக்கப்பட்டார். எனக்கு மனதிற்குள் பயம். ஒரு பெரியவர்; அவர் காலம் தாழ்த்தி வந்தாலும் அவருக்காக நிகழ்ச்சியில் மாற்றம் செய்யாதது குறித்து அவர் என்ன செய்வாரோ என்ற பயம்.
சில ஆண்டுகள் கழித்து கல்லூரியில் ஒரு பிரச்சினை. அந்தப் பிரச்சினையை சமாளிப்ப
தற்காக அரசாங்கத்திற்கு கடிதம் எழுத வேண்டிய நிலை. அதே Collector ஐ சந்திக்க வேண்டிய நிலை. அவர் சாதகமாக உதவி செய்யவேண்டும். அவருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், காத்திருக்காமல் நிகழ்ச்சியை ஆரம்பித்துவிட்டோமே, என்ன நினைத்துக் கொண்டிருப்பாரோ? என்று பயந்து கொண்டே அவரைக்காணச் சென்றேன். அன்பாக வரவேற்று உட்காரவைத்து. ‘‘உங்களை, உங்கள் கல்லூரியை, உங்கள் கல்லூரி ஸ்தாபகர் சுவாமிஜியை, அவர்களின் நேரந்தவறாமை ஆகியவற்றை வெகுவாகப் பாராட்டுகிறேன்’’ என்றார். ‘‘அந்த நேரந்தவறாமையை நீங்கள் கடைபிடிப்பதால், எனக்கு உங்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது’’ என்றார்.
இதை உங்களுக்கு நான் ஏன் கூறுகின்றேன் என்றால், எவன் ஒருவன் கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறானோ, அவனைச் சமுதாயத்திலே உள்ள பெரியவர்கள் பலர் பாராட்டுவார்கள் என்று சுவாமிஜி அடிக்கடி கூறுவார்கள். அந்த கலெக்டரும் எங்களுக்கு உதவினார். சுவாமிஜி அவர்கள் என்றைக்குமே ஒரு நிகழ்ச்சிக்கோ, ஒரு தனிப்பட்ட மனிதனுக்கோ முக்கியத்துவம் கொடுத்தது கிடையாது. கொள்கைக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்தார்.