இன்று உலக புகைப்பட தினம். ஆயிரம் வார்த்தைகள் சொல்வதை ஒரு புகைப்படம் உணர்த்தி விடும். மக்களிடம் எளிதில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் புகைப்படத்துக்கு உண்டு. ஒரு நல்ல புகைப்படத்திற்காக மணிக்கணக்கில் ஏன் நாள் கணக்கில் கூட காத்திருக்கின்றனர் புகைப்படக் கலைஞர்கள். புகைப்படம் எடுப்பது என்பது ஒரு தனிக்கலை. ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கும் சமம். ஒரு சந்ததியினரின் வாழ்க்கை முறையை, வரலாற்றை அடுத்தத் தலைமுறையினர் அறிந்து கொள்ள புகைப்படங்கள் ஒரு முக்கிய ஆவணம்.
கேமரா அப்ஸ்குரா என்ற கருவி மூலம் 13ம் நூற்றாண்டில் தனது பயணத்தை தொடங்கிய புகைப்படக்கலை, தற்போது பல பரிமாணங்களையும் கடந்து நிற்கிறது. டிஜிட்டல் கேமிரா, ஸ்மார்ட்போன் போன்றவற்றை பயன்படுத்தி யார் வேண்டுமெனாலும் தற்போது எளிதாக புகைப்படத்தை எடுக்கலாம்.
1839ல் சர் ஜான் ஹெர்செல் என்பவர் கண்ணாடியை பயன்படுத்தி நெகட்டிவ்களை எடுக்கும் முறையை கண்டுபிடித்தார். அவர்தான், போட்டோகிராபி என்று இதற்கு பெயர் வைத்தார். போட்டோகிராபி என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து வந்த சொல். ஒளியின் எழுத்து என்பது அதன் பொருள். அதே ஆண்டு, லூயிஸ் டாகுரே, சில்வர் காப்பர் பிளேட்டில் பிம்பங்கள் விழும் வகையிலான புகைப்படம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். 1888ல் ஜார்ஜ் ஈஸ்ட்மேன், பேப்பர் பிலிம்களை பயன்படுத்தி பாக்ஸ் கேமராவில் புகைப்படம் எடுக்கும் முறையை கண்டறிந்தார்.
1900ல் பாக்ஸ் பிரவுனி என்ற வகை கேமராக்களை கோடாக் அறிமுகப்படுத்தினார். 35 மி.மீ ஸ்டில் கேமராக்களை 1913ல் ஆஸ்கர் பர்னாக் வடிவ மைத்தார். இது புகைப்படத் துறையையே புரட்டிப்போட்டது. முதல் டிஜிட்டல் கேமராவை சோனி நிறுவனம் 1981ல் தயாரித்தது. அதன் பின்பு, டிஜிட்டல் கேமராக்களில் தற்போது வரை பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
முன்பெல்லாம் புகைப்படம் எடுப்பது மிகவும் அரிது. ஆனால், தற்போது தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் புகைப்படம் எடுப்பது எளிதாகி விட்டது. குழந்தைகள்கூட அழகாக புகைப்படம் எடுக்கின்றன. ஒரு காலத்தில் கேமராக்களில் மற்றவர்கள் நம்மை புகைப்படம் எடுத்தது போய் இப்போது செல்ஃபி எடுப்பது அதிகரித்துள்ளது. என்னதான் செல்போனில் செல்ஃபி எடுத்தாலும் கறுப்பு வெள்ளையில் அட்டென்சன் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை யாராலும் மறக்க முடியாது.
ஜி.எம். சீனு