வேகம் பிடிக்கும் கார்ப்பரேட் ஊழல் ஒழிப்பு

“முதல் ஐந்து ஆண்டுகளில், மோதி அரசு எடுத்த தூய்மை (கார்ப்பரேட்) இந்தியா முயற்சிகள் தொடர்கின்றன என்பது மட்டுமல்ல, நாலு கால் பாய்ச்சல் எடுத்துள்ளன என்றே சொல்ல வேண்டும்.”

இப்படி சொல்பவர் பா ஜ க பிரமுகரோ அரசிடம் ஆதாயம் அனுபவிப்பாரோ அல்ல. மேற்சொன்ன கருத்தை வெளியிட்டவர் சுசேதா தலால் என்ற பெண்மணி.

ஏதோ போகிற போக்கில் மேம்போக்காக சொல்லிவிடவில்லை சுசேதா. தன்னுடைய நிறுவனத்தின்  காணொளி காட்சியில்  (சுமார் 20 நிமிடங்கள் ஓடுகிறது) அடுக்கடுக்காய் ஆதாரங்களை வைக்கிறார். முன்பெல்லாம் கம்பெனிகள் ஊழல் செய்து பணத்தைக் கொள்ளை அடித்து சுவிஸ் வங்கிகளிலும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வரி ஏய்ப்பு மண்டலங்களிலும் பாதுகாப்பாக பதுக்கி வைத்து விடமுடியும். சிறந்த உதாரணம்: போபர்ஸ் பீரங்கி ஊழல்.

அவையெல்லாம் இன்று பழங்கதைகளாகி விட்டன. இங்கே ஊழல் செய்து விட்டு உலகின் எங்கோ தென் அமெரிக்க அல்லது ஆப்பிரிக்க நாடுகளில் சென்று ஒளிந்து கொள்ளலாம் என்று நினைத்தால் அவர்கள் கணக்கு தப்பாகிப் போகத் துவங்கியுள்ளது. முன்பு போல இல்லாமல் ஊழல் வாதிகளை நாம் இன்று திரும்பக் கொண்டு வந்து விடமுடியும்.

விஜய்  மல்லய்யா,   நீரவ் மோதி , மெஹுல் சோக்சி போன்ற வைர வணிகர்கள் விரைவில் நம் சிறைச்சாலையில் வாசம் செய்வார்கள்.

இத்தாலியைச் சேர்ந்த கிறிஸ்டன் மிச்சல் ஏற்கனவே இங்கு கொண்டு வரப்பட்டு விட்டார். (அகஸ்ட்டா ஹெலிகாப்டர் ஊழல் புகழ்)

யார் இந்த சுசேதா தலால்

இந்த பெண்மணி எகனாமிக் டைம்ஸ் உட்பட பல பத்திரிகைகளில் பல பொறுப்புகளை வகித்த அனுபவம் வாய்ந்தவர். இவர்  பொருளாதார-கம்பெனி சட்ட விவகாரம், நிதி மேலாண்மை போன்றவற்றில் புலி. அதுவும் பொருளாதார குற்றங்களை மோப்பம் பிடித்து தனி ஒருவளாய் புலனாய்வு செய்து மறைவாய் அரங்கேற்றி சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பிக்க முனையும்   பெருச்சாளிகளை வீதியில் இழுத்துப் போட்டு வெளுத்தவர். இவரால் காலியான ஊழல் சாம்ராஜ்யங்கள் பல பல; மூன்று எடுத்துக்காட்டுகள் போதும் என்று நினைக்கிறேன்:

ஹர்ஷத் மெஹ்தா (பங்கு சந்தை ஊழல்).

என்ரான் (அமெரிக்க நிறுவனம்),

கேத்தன் பாரிக் (பங்கு சந்தை ஊழல் )

சுசேதாவின் முழு காணொளியையும் கீழ்கண்ட தலைப்பில் – பின் வரும் இணைப்பில் கண்டு மேலும் விவரம் அறியலாம்.

The Clean-up of Corporate India Seems To Have Begun in Earnest !

https://www.youtube.com/watch?v=kSKT_JrBfio