அமெரிக்காவின் யு.எஸ்.எய்டு அமைப்பு சர்வதேச அளவில் எத்தகைய தரம்தாழ்ந்த நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளது என்பது அண்மையில் அம்பலமாகி உள்ளது. இதைப்பற்றிய நுணுக்கமான உள்விவகாரங்களை அறிந்தவர்களுக்கு, இது அதிர்ச்சி அளிக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் இதுபற்றிய பரிச்சயம் இல்லாதவர்களுக்கு இது மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஜனநாயகக் கட்சி என்பது பெயரளவில் மட்டுமே ஜனநாயகத்தைக் கொண்டுள்ளது. அமெரிக்காவில் இயங்கி வரும் ஜனநாயகக் கட்சி வெளிநாடுகளில் ஜனநாயகத்தை சீர்குலைக்க எந்த அஸ்திரத்தையும் பயன்படுத்த தயங்கியதில்லை. இதற்கு அண்மைக்கால உதாரணம் பங்களாதேஷ்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷேக் ஹசீனாவை தீர்த்துக் கட்டவும் அவரது ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் யு.எஸ்.எய்டு முனைப்புடன் செயல்பட்டது. பாரதம் தாமதமின்றி அபயக்கரம் நீட்டியதால்தான் ஹசீனா தப்பித்தார். அவர் தற்போது பாரதத்தில் வாழ்ந்து வருகிறார். உரிய நேரத்தில் பாரதம் அடைக்கலம் அளித்திருக்காவிட்டால் தந்தை முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்டதைப் போல மகள் ஷேக் ஹசீனாவும் படுகொலை செய்யப்பட்டிருப்பார் என்பதை யாரும் மறுக்க முடியாது. இப்போது பிரதான ஆலோசகர் முகமது யூனுஸ் தலைமையில் ஒரு பொம்மை அரசு பங்களாதேஷில் ஆட்சி நடத்தி வருகிறது. இது ஓர் உதாரணம் மட்டுமே. இதைப்போல வெவ்வேறு நாடுகளில் சதிகளை அரங்கேற்ற யு.எஸ்.எய்டு முற்பட்டது. பாரதத்திலும் சதியை அரங்கேற்ற யு.எஸ்.எய்டு துடித்தது.
2008 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் 275.48 மில்லியன் டாலரை (சுமார் 2,400 கோடி ரூபாய்) வெளிநாடுகளில் உள்ள அரசுகளை நிலைகுலைய வைப்பதற்காக யு.எஸ்.எய்டு செலவு செய்துள்ளது. பாரதத்தில் அரசு சாரா அமைப்புகள், ஊடகங்கள், கல்வி நிறுவனங்கள் கணிசமான தொகையைப் பெற்றுள்ளன. குறிப்பிட்ட சில தனி நபர்களுக்கும் யு.எஸ்.எய்டு நிதியுதவி செய்துள்ளது. இந்தப் பட்டியலில் நிறுவனங்கள், தனிநபர்கள் என 54 பேர்கள் இடம் பெற்றுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது.
பாரத அரசை கவிழ்க்க வேண்டும். பிரதமர் மோடியின் பிம்பத்தை சிதறடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருபவர்களுக்கு யு.எஸ்.எய்டு தாராளமாக நிதியை வாரி வழங்கிக் கொண்டே இருந்தது. காங்கிரசின் அயலகப் பிரிவுத் தலைவர் சாம் பிட்ரோடா இதன் கைப்பாவையாகவே செயல்பட்டு வந்தார் என்பதை சுட்டிக் காட்ட வேண்டியது அவசியம்.
ஆர்கனைஸ்டு கிரைம் அன்ட் கரப்ஷன் ரிப்போர்ட்டிங் பிராஜெக்ட் என்பது ஜார்ஜ் சோரஸ் என்ற வக்கிரம் கொண்ட கோடீஸ்வரரின் அமைப்பாகும். இந்த அமைப்புக்கு யு.எஸ்.எய்டு தாராளமாக நிதியுதவி செய்துள்ளது. இதன் நெடிய கரங்கள் ஊடுருவாத துறைகளே இல்லை எனலாம். குறிப்பாக ஊடகத் துறையில் இதன் ஆதிக்கம் மிகவும் வலுவானது.
மால்டா, சைப்ரஸ், வெனிசுலா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளிலும் விரும்பத்தகாத செயல்களை விஸ்வரூபப்படுத்த யு.எஸ்.எய்டு தொடர்ந்து பணத்தை கொட்டிக் கொண்டே இருந்தது. இப்போது அஸ்தமித்து விட்ட ஹின்டன்பர்க் அமைப்பின் விரிவான தளம்தான் யு.எஸ்.எய்டு என்று உள்வாங்கிக் கொண்டால் அது தவறல்ல. பெகாசஸஸ் ஸ்பைவேர் என்பதை ராகுலும் அவரது அடிப்பொடிகளும் உச்சப்படுத்தியதற்கு யு.எஸ்.எய்டுதான் பின்னணி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
பாரதத்தை எவ்வளவு தூரம் கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் கேவலப்படுத்துவதற்காக சில சர்வதேச அமைப்புகளை யு.எஸ்.எய்டு வளைத்துப் போட்டுள்ளது. பட்டினிப் பட்டியலில் பாரதம் தாழ்ந்த நிலையில் உள்ளது. ஊடக சுதந்திர அட்டவணையில் பாரதம் அடி நிலையில் உள்ளது. மத சுதந்திர தர வரிசையில் பாரதம் கீழ் நிலையில் உள்ளது என்றெல்லாம் அவ்வப்போது அறிக்கைகள் வெளியிடப்பட்டன. இந்த அறிக்கைகளை வெளியிட்ட நிறுவனங்களுக்கு யு.எஸ்.எய்டுதான் சாவி கொடுத்துக் கொண்டிருந்தது என்பதை கவனத்தில் கொள்ள தவறக் கூடாது.
ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை நடத்தினார். இது ஊடகங்களில் அளவுக்கு அதிகமாக விளம்பரப்படுத்தப்பட்டது. பிரதான் என்ற மகளிர் மேம்பாடு, பட்டியல் சமூக உரிமைக்கான அமைப்பு இதற்கு பின்னணியில் இருந்தது. இந்த அமைப்பின் தலைவர் விஜய் மகாஜன் ஆவார். ராகுல் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான அவர், ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் முதன்மை நிர்வாக அதிகாரியாகவும் செயல்பட்டுள்ளார். ஜார்ஜ் சோரஸின் ஓபன் சொசைட்டி நிறுவனமும், யு.எஸ்.எய்டு அமைப்பும் நகமும் சதையுமாக பின்னிப் பிணைந்திருந்தன என்பதையும் உள்வாங்கிக் கொண்டு இவ்விவகாரத்தை உற்று நோக்க வேண்டியது அவசியம்.
சுகாதாரம், கல்வி, மகளிர் மேம்பாடு போன்ற வெவ்வேறு போர்வைகளில் இஸ்லாமிய பயங்கரவாதமும், இடதுசாரி கருத்தோட்டமும் முதன்மைப்படுத்தப்பட்டன. பொதுமக்களிடையே பரவலான ஆதரவைப் பெற முடியாத இந்த அமைப்புகளுக்கு யு.எஸ்.எய்டுதான் பாம்புக்கு பால் வார்ப்பதைப் போல நிதியைக் கொட்டிக் கொண்டே இருந்தது.
இப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். இது வரவேற்கத்தக்க நடவடிக்கை. ஏதேனும் ஒரு சாக்கைக் கூறிக் கொண்டு வெளிநாடுகளின் உள்விவகாரங்களில் விஷமத்தனமாக தலையிட்டு விரும்பத் தகாதவற்றை அரங்கேற்ற முற்படும் கொடுங்கோன்மை எதிர்காலத்தில் தலைதூக்க சற்றும் இடம் கொடுக்கக்கூடாது.
கட்டுரையாளர்: பேராசிரியர், அரசியல் அறிவியல், குருகிராம் பல்கலைக்கழகம்
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : அடவி வணங்கி