வீரமங்கை கல்பனா சாவ்லா

பிப்ரவரி 1 அன்று பாரத வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. தனது 40வது வயதில் மறைந்த கல்பனா சாவ்லா விண்வெளிக்குச் சென்ற பாரத வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண்மணி. கொலம்பியா விண்கலம் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தபோது கல்பனாவும் மற்ற ஆறு குழு உறுப்பினர்களும் இறந்திருந்தனர். கொலம்பியா விண்வெளி விண்கலம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் அவர்கள் தரையிறங்குவதற்கு 16 நிமிடங்களுக்கு முன்பு வெடித்து சிதறியது. கல்பனாவின் விருப்பப்படி, அவரது உடல் உட்டாவின் சீயோன் தேசிய பூங்காவில் வைக்கப்பட்டது.

அவரது நினைவாக பல கல்வி நிறுவனங்கள் மற்றும் விருதுகள் கல்பனாவின் பெயரை தாங்கி நிற்கின்றன. கல்பனாவின் தியாகத்தைப் போற்றும் வகையில் தமிழகத்தின் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் வீர தீர சாகசச் செயல் புரியும் இளம் பெண்களுக்கு ‘கல்பனா சாவ்லா விருது’ வழங்கப்படும் என அறிவித்தார். இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க கர்நாடக அரம்சு கல்பனா சாவ்லா விருதினை 2004 முதல் வழங்கி வருகிறது.

கல்பனா சாவ்லா, பாரதத்தில் இருந்தபோது, கர்னல் தாகூர் பால் நிகேதன் பள்ளியில் படித்தார். 1982ல் அமெரிக்காவிற்கு சென்று 1991ல் அமெரிக்க பிரஜையானார். 1988ல் அமெஸ் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றத் தொடங்கினார். 1983ல் ஜீன் பிஎர்ரே ஹாரிசன் என்ற விமானப் பயிற்சி ஆசிரியரை மணம் முடித்த கல்பனா, 1986ல் கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியலில் ஆய்வுப் பட்டம் பெற்றார்.

1995ல், நாசா விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் சேர்ந்தார். 1996ல் முதல் விண்வெளி பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ்-87’ல் பயணித்த ஆறு வீரர்களில் ஒருவரான கல்பனாவின் இந்த முதல் பயணத்திற்கு அவர் நவம்பர் மாதம் 19-ம் நாள், 1997-ம் ஆண்டு முதல் ஆயத்தமானார். கல்பனாவின் முதல் பயணத்திலேயே அவர் 360 மணி நேரம் விண்வெளியில் இருந்து, 10.4 மில்லியன் மைல்கள் கடந்து பூமியைச் சுற்றி சிதறி இருக்கும் 252 கோளப்பாதைகளை வலம் வந்துள்ளார். 1984ல் சோவியத் விண்கலத்தில் பயணித்த ராகேஷ் ஷர்மாவை அடுத்து விண்வெளி சென்ற முதல் பாரத பெண் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.