வீர சிவாஜி

ஔவுரங்கசீப்பை எதிர்த்து பாரதமெங்கும் ஆங்காங்கு எதிர்ப்பு குரல்கள் எழும்பின. அவற்றில் விஜயநகர ஹிந்து சாம்ராஜ்யம் போலவே முக்கியமான ஒன்று சிவாஜியின் மராட்டிய குரல். சிறிய குரல் பின்னர் சூறாவளியானது. போர் கலைகளில் வல்லவரான சிவாஜி, முதலில் முகலாய பேரரசின் குறுநில மன்னர்களான சுல்தான்களுடன் மோதி வெற்றி பெற்றார். பல போர்களில் வென்றார், அவருடைய புகழ் பரவியது. மிக சிறிய படையினை வைத்துகொண்டு பெரும் படைகளை வெல்லும் யுத்தபாணி சிவாஜியுடையது. ஒரு பக்கம் சுல்தான்கள், மற்றொரு பக்கம் ஆங்கிலேய படைகள் என இரு பக்கமும் வெற்றிபெற்றார். அந்நாளில் வலிமையான கடற்படை வைத்திருந்த ஒரே பாரத மன்னன் சிவாஜி மட்டுமே. அவர் இருக்கும் வரை வெள்ளையர் பாரதத்தை ஆள்வது பற்றி சிந்திக்கவே இல்லை.

ஔரங்க சீப்பும் சிவாஜியும் சந்திக்கும் வேளை வந்தது. ஔரங்கசீப்பின் படை மிகப் பெரியது, யுத்தமும் நடந்தது. எனினும் சிவாஜியுடன் பேச்சுவார்த்தைக்கு ஔரங்கசீப் இணங்கினான் என்றால் சிவாஜி எப்படிபட்ட பிம்பமாக அவருக்கு தோன்றியிருப்பார் என்பதை நாம் எளிதில் யூகிக்கலாம். ஔரங்க சீப்பின் குள்ள நரித்தனதால் காவலில் வைக்கபட்ட சிவாஜி அங்கிருந்து தப்பினார். பின் வலிமையான படை திரட்டி யுத்தத்தின் தன்மையினை மாற்றினார். தென்னகத்தை முதலில் கைபற்றினார், செஞ்சி அவரின் இரண்டாம் தலைநகராயிற்று, அதன் பின் அசைக்க முடியாத மன்னர் ஆனார். அப்சல்கான் உட்பட எத்தனை திறமையான தளபதிகள் வந்தாலும் சிவாஜியின் வியூகத்தின் முன் அவர்களால் நிற்க முடியவில்லை. வெறும் 53 ஆண்டுகள் மட்டும் வாழ்ந்த சிவாஜி கிட்டதட்ட 33 ஆண்டுகால வாழ்க்கையினை போர்முனையிலே கழித்தவர். ஒயாத போர்களில் இருந்தவர், ஒரு புதியபாணி போர்முறையினை அறிமுகபடுத்தியவர்.

ஒரு சாதாரண சிற்றரசனாக துவங்கி, வளர்ந்து பெரும் சக்தி படைத்த முகலாயருக்கு எதிராக, அதுவும் இது பெரும் இஸ்லாமிய சாம்ராஜ்யம் என கொக்கரித்த ஔரங்கசீப்பிற்கு எதிராக 20 ஆண்டுகளுக்குள் “ஹிந்து ராஜ்யம்” அமைத்து காட்டியது பெரிய விஷயம், மாபெரும் வீரம். முகலாயரையும், ஆங்கிலேயர்களையும் ஒருசேர கட்டுபடுத்திய அவரின் ஆற்றல் வரலாற்றில் நின்றது. யுத்தம் என்பது சாதரண விஷயமல்ல, மக்களை வாழ வைக்க வேண்டும், அவர்களிடமிருந்து வரி பெறவேண்டும், படை திரட்ட வேண்டும், பயிற்சி அளிக்க வேண்டும், இன்னும் ஏராளமான சங்கதிகள் உண்டு, ஒன்றில் சறுக்கினாலும் முடிந்தது விஷயம். ஆனால் தொடர்ச்சியாக ஏராளமான போர்களை சிவாஜி நடத்தினார் என்றால், அதுவும் பெரும் பேரரசினை எதிர்த்து நடத்தினார் என்றால் அவரின் அணுகுமுறையும், நிர்வாகமும் முக்கிய காரணம்.

சத்ரபதி சிவாஜியின் நினைவு தினம் இன்று