வீடுகள்தோறும் தேசியக் கொடி

தேசத்தின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, அனைத்து வீடுகளிலும் ஆகஸ்ட் 13, 14, 15ம் தேதிகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தமிழகத்தில் செயல்படுத்துவது தொடர்பாக 27ம் தேதி தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு துறைகளின் செயலர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். அதில் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 13, 14, 15ம் தேதிகளில் அனைத்து வீடுகள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் தேசியக்கொடி ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஆலோசனை வழங்கினார். சென்னை மாநாகராட்சியில் இது தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் ‘சென்னையில் உள்ள 17 லட்சம் குடியிருப்புகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும், அனைத்து வணிக நிறுவனங்களிலும் கடைகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும், முக்கிய சாலைகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும், சுய உதவிக் குழுக்கள் மூலம் தேசியக் கொடி தயாரிக்கலாம்’ என சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.