விஞ்ஞான சாதனைகளை கொண்டாடுவோம்

குஜராத்தில், மத்திய மாநில அறிவியல் மாநாட்டை வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமே மோடி துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “பாரதம் இன்று நான்காவது தொழில்துறை புரட்சியை நோக்கி நகர்கிறது. அதில் பாரத அறிவியல் மற்றும் அந்த துறையில் செயல்படும் மக்களின் பங்கு மிகவும் முக்கியமானது. விஞ்ஞானிகளின் சாதனைகளை நாம் கொண்டாட வேண்டும். விஞ்ஞானிகளையும் அவர்களது கண்டுபிடிப்புகளையும் நாம் கொண்டாடும்போது, அறிவியல் நமது கலாசாரத்தின் ஒரு அங்கமாக மாறும். அறிவியல் ரீதியிலான வளர்ச்சி என்ற கொள்கை அடிப்படையில் மத்திய அரசு செயல்படுகிறது. 2014 முதல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முதலீடுகள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் முயற்சிகளால் சர்வதேச கண்டுபிடிப்பு குறியீட்டில், 2015ல் 81வது இடத்தில் இருந்த பாரதம் தற்போது 46வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்றைய இளைஞர்கள் தொழில்நுட்பத்தை எளிதாக ஏற்றுக்கொள்கின்றனர். நாம் அவர்களை ஆதரிக்க வேண்டும். ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான சர்வதேச மையமாக பாரதத்தை மாற்ற வேண்டும்” என்று உரையாற்றினார்.