வி.ஐ.பி கலாச்சாரம் நமது அரசியல், நிர்வாகம் மற்றும் பிற அமைப்புகளில் மிகவும் ஆழமாகச் சென்றுவிட்டதால், வி.ஐ.பிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்களும் இதேபோன்ற பாதுகாப்பு மற்றும் நெறிமுறையைக் கோருகின்றனர். இத்தகையோரின் லேட்டஸ்ட் எதிர்பார்ப்பு: பிரபல ஆலயங்களில் மிக விரைவு தரிசனம்.
1990 ஆம் ஆண்டு, கலாம் அவர்கள் நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பேரில், கண் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். உள்ளே நுழைந்ததும், தங்கள் முறைக்குக் காத்திருந்த நோயாளிகளின் வரிசையைக் கண்டு அதில் தம்மை இணைத்துக்கொண்டார். வரிசை நீண்டதாக இருந்தாலும் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. அரை மணி நேரத்திற்குள் டாக்டர் நாச்சியார் அவரைப் பரிசோதித்து சிகிச்சையை பரிந்துரைத்தார்.
அது முடிந்ததும், மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான பணத்தை டெபாசிட் செய்ய சென்றபோது அங்கிருந்த பெண் காசோலையை ஏற்க மறுத்துவிட்தால் அவருக்கு சிரமம் ஏற்பட்டது. ஏனெனில் கைவசம் தேவையான பணம் அவரிடம் இல்லை. இருப்பினும் மீண்டும் டாக்டர் நாச்சியாரிடம் சென்று இக்கட்டான
நிலையை எடுத்துரைத்த பின்னர் மருத்துவர் அனுமதிக்க ஒப்புக்கொண்டு பின்பு சிகிச்சை அளிக்கப்பட்டார்.
டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் சில நாட்களுக்குப் பிறகு, தம்மை அடையாளம் காணாததற்கு மன்னிப்பு கேட்டு டாக்டர் நாச்சியாரிடமிருந்து கடிதம் வந்தது. (டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு மருத்துவமனையில் அவரது பாதுகாப்புப் பணியாளர்களிடம் அவரைப் பற்றி விசாரித்தபோதுதான் டாக்டர் நாச்சியார் அவர்களுக்கு இது தெரியவந்தது.). (IGNITED MINDS) “இக்னைட்டட் மைண்ட்ஸ்” என்கிற தமது நூலில் கலாம் இச்சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.
தாம் வி.ஐ.பி தரத்தில் இருக்கிறோம் என்பதையெல்லாம் ஒருபொருட்டாகவே நினையாமல் மக்களுள் ஒருவராக கலந்து உறவாடத் தெறிந்த உயர்ந்த உள்ளம் கொண்டவர் கலாம்.
புட்டபர்த்தியில் சத்யா சாய் பாபா. அருள் வழங்கும் மேடையில் கலாம் அவர்களுக்கு பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டிருந்த நாற்காலியில் அமர அழைத்தபோதிலும், கலாம் பக்தர்கள் உட்கார்ந்திருந்த தரைதளத்திலேயே அமர்ந்து தமது அடக்க குணத்தைக் காட்டினார். கலாம் புகைப்படத்தைத் தங்கள் அலுவலகங்களில் மாட்டி அழகு பார்த்தால் மட்டும் போதாது. அவர் காட்டிய உயர்ந்த பாதைகளை இங்குள்ள வி.ஐ.பிகள் கருதுவோர் கற்க வேண்டும்.
அரச குடும்பங்களின் கௌரவ ஆளுமை கொண்ட நாடுகள் பலவற்றிலும் கூட வி.ஐ.பி கலாச்சாரம் முற்றிலும் ஒழிய அங்குள்ள அரசமைப்புக்கள் பல வழிமுறைகளைக் கண்டறிந்து நடைமுறைப்படுத்தியும் வருகின்றன. பாரதம் போன்ற ஜனநாயக நாடுகளில், ஆலயங்கள், மருத்துவமனைகள், என்று சாதாரண மக்கள் புழங்கும் இடங்களிலாவது வி.ஐ.பி கலாச்சாரம் ஒழிய அந்தந்த வி.ஐ.பிகளே முன்னுதாரணமாக ஏன் முன் வரக்கூடாது?