வாஜ்பாயின் இந்த சிலை மக்களுக்கு சிறந்த நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்று எங்களை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. நாங்கள் 2014-ம் ஆண்டில் இருந்து சவால்களுக்கே சவால் விடுத்து வருகிறோம். பிரச்சினைகள் முழுமையாக அல்லது நேர்மையாக வரும் வரை சிறந்த நிர்வாகத்துக்கான வாய்ப்புகள் இல்லை.
370-வது சட்டப்பிரிவு மிகவும் பழமையான நோய். ஆனால் அதனை எங்கள் அரசு சுலபமாக தீர்த்தது. அதேபோலத்தான் ராமஜென்ம பூமி பிரச்சினையும் சுலபமாக தீர்க்கப்பட்டது.
சுதந்திரத்துக்கு பின்னர் மக்கள் சிலர் குடியுரிமைக்காக பல சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள். நாங்கள் ஒரு சட்டம் மூலம் அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான நடவடிக்கையை எடுத்திருக்கிறோம்.
நோய்களை தடுக்கவும், குறைந்த விலையில் சிகிச்சை அளிக்கவும் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருகிறது. தூய்மை இந்தியா திட்டம் முதல் யோகாசனம் வரை, எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் முதல் மக்கள் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்ற இயக்கம் வரை ஒவ்வொரு திட்டமும் நோய்களை தடுப்பதற்கு முக்கிய பங்காற்றி வருகிறது.
உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டமான இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தில் இதுவரை 70 லட்சம் பேர் பலன் அடைந்துள்ளனர். மிகமோசமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மரணத்துக்காக காத்திருப்பதே சிறந்தது என இருந்தனர். ஆனால் இந்த மருத்துவ காப்பீடு திட்டம் அவர்களது வாழ்க்கைக்கு புதிய அர்த்தத்தை கொடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 75 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.